Thursday, October 29, 2009

இலக்கிய மம்ம நாயனார் புராணம்


திரு அவதாரப் படலம்

     குனா - சுனா என்ற குகலூர் சுபலெக்ஷண சாஸ்திரிகள் என்ற, காண்டமிருகம் என்ற, ஞானப்பிரியன் என்ற, கட்டத் தொடப்பம் என்ற, கருவாடு என்ற, காரிய ஆசான் என்ற, கருவூரார் என்ற, சாளிக்கிராமம் என்ற, சம்புரோக்ஷணம் என்ற, சீமந்தம் என்ற, சீதாலெஷ்மி என்ற, சுகர் என்ற, சூறாவளி என்ற, டப்பி என்ற, டமாரம் என்ற, டுமீல் என்ற, நாபி என்ற, ஞாபகம் என்ற, ஞி என்ற, ஙப்போல் என்ற, நரி விருத்திரையார் என்ற, நீலி வசீகரம் என்ற* இலக்கிய மம்மா, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பழைய பண்பாடும், பிறர் பர்ஸ் எமதே என்ற பெருநோக்கும் நம் சொல் என்றும் பொய்யே என்ற இலட்சியமும் பெற்ற கருவிலே திருவுடைய பெரியார்.

     (* மெய் பதினெட்டுடன் மேலேறிய உயிர் அத்தனையும் சேர்ந்து எத்தனை எழுத்துக்கள் தமிழில் உண்டோ அத்தனையும் ஒன்றேனும் தன்னை விட்டுவிட்டாரே என மனக்குறைபடாமல் சந்தோஷிக்கச் செய்யும் புனைப்பெயர் சாகரமாய் விளங்கும் நமது இலக்கிய மம்மாவின் புனைபெயர் பட்டியல் அனைத்தும் அறிய விரும்புகிறவர்கள் அரையணா ஸ்டாம்பு அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம். சொற்பப் பிரதிகளே கைவசம் என்பதை வாசகர்கள் உய்த்துணர்க.)

     அவர் பிறந்த ஊர் அனாமத்துப்பட்டி என்பது. அந்தப் பட்டியிலே ஓர் ஆயிரக்கால் மண்டபம் உண்டு. அந்த ஆயிரக்கால் மண்டபத்தில் ஆயிரம் வௌவால்களும் இலக்கிய மம்மாவின் இகலோக பெற்றோர்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாற்பதாட்டைப் பிராயத்தைக் கடந்துவிட்டார்கள். அதாவது அந்த அம்மாவுக்கு நாற்பது வயது ஆகிவிட்டது. அப்பனார் கவலைக்கிடமாயினர். இவர் செயலால் அல்லாமல், இறைவன் திருவருளால் ஒரு வௌவாலானது ஓர் இரவு திவ்ய கலியாண குணங்கள் சகலமும் பொருந்திய ஒரு யௌவனனாக சொப்பனத்தில் தோன்றி, "யாம் நும் திருவுதரத்திலே குடிபுகுந்து, உலகத்தை உய்விப்பான் வேண்டி இலக்கிய மம்மாவாக உதிக்கப் போகிறோம்" என்று அருளி மறைந்தார்.

     பனித்துளிகள் மறைவதுபோலப் பத்து மாதங்கள் கழிந்தன; ஒரு நாள் சகல ராசிகளும் சகல கிரக மண்டலங்களும் ஒழுங்காக முறை பிசகாமல் நிலைநின்ற காலத்திலே இரவோ பகலோ என்று மயங்கு கருக்கலிலே ஆயிரக்கால் மண்டபத்து ஆயிரம் வௌவால்கள் இன்னிசையோடு இலக்கிய மம்ம நாயனார் இப்பூவுலகிலே திரு அவதாரம் செய்தார். ஊரார் உவப்பைத் தாங்க முடியாத உத்தமியும் உயர்குலத்துக் கணவனாரும் அனாமத்துப்பட்டியைவிட்டு அகலச் சென்றனர்.
தில்லை ஏகிய படலம்

     புவிப்பொறை நீங்குவான் பொருட்டு புன்முறுவல் பூத்துக் குறுநடை பயின்று எளிர்க்கரம் தூக்கி மயிர்க்கூச்செறிய, பேசறிய பெரும் பேச்சுக்கள் பயின்று வளர்ந்து படித்து மேம்பாடுற்று, அறிவுக்கறிவாய்ப் பொய்யில் புலஸ்தியென மெய்யறியா மெய்யப்பனாகிப் பெற்றோர் தொடர சேர சோழ பாண்டிய முன்னாடுடைய முப்பதிகளையும் தரிசித்து திரை மறைவில் தன் பொய்யின் புலமையை விளக்கும், அருட்கடவுள் அமர்ந்த தில்லைநகர் நோக்கினர் இலக்கிய மம்ம நாயனார்.
திருமணப் படலம்

     கோளரியைப் போல் இருள் கோளகற்றும் சூரிய பகவான் வானரங்கிலே நடம்புரிய, பெற்றோர் பின் தொடர, தில்லைவாழ் அந்தணருக்கும் அடியார்க்கும் அடியேன் என்ற அக்கிரகாரத்தின் வழியே பவனி வருவாராயினர்.

     தில்லை முதுகுடி அந்தணாளர் ஒருவரும் அறிவுச் சீலருமான பிரஜாபத்திய கோத்திரம், சும்பண்ண சூத்ர, அபான பிரணவசர்மன் புதல்வனாம் முஷ்ணமூர்த்தி, இலக்கிய மம்ம நாயனாரைக் கண்டவுடன் களிகூர்ந்து மெய்சிலிர்க்க, கண்ணீர் மல்கி இருகரம் கூப்பி தெரு அவதாரம் செய்து, அவசரத்தில் அப்பிரதக்ஷணமாய் வந்து அடி பணிந்து, "தேவரீர்! என் உயிருக்குயிராய் யானே பெற்றெடுத்த அத்தனை லக்ஷணமும் அங்கனே பொருந்திய அம்மி நாச்சியாரைத் திருமணம் செய்து எம்மை உய்விக்க வேண்டுவான் பணிகின்றேன்" என அஞ்சலி செய்து நிற்பாராயினர்.

     இலக்கிய மம்ம நாயனார் திருக்கண்சாத்தி, "யாம் அவ்வாறே செய்வோம்" என்று திருவீதியைப் புறக்கணித்துத் திருத்திண்ணைக் குறட்டேறி ஆணியிட்ட அஞ்சறைப் பெட்டி மாதிரி அமர்வாராயினர். உடன் வந்த பெற்றோரும் உகப்பின் மிகுதியால் உடன் தொடர்ந்து உயர் திண்ணையேறி உட்கார்ந்திருந்தனர்.

இலக்கிய மம்ம நாயனாரின் திருமண மகோற்சவத்தை எம்போல்வர் எடுத்து ஓதுதல் எளிதோ எனினும் 'ஆசையுற்று அறையலுற்றேன். காசில் கொற்றத்து* (* காசில்லாத அரசாட்சி) கவின்பலர் நாயனார் விழாவை.' உதயாதி சூரியன் உச்சிப் போதை எட்டுதற்குச் சற்று முன்பாக உதயாதி நாழிகையிலே அருகில் நீத்து, அழுக்குடை ஆடை புனைந்து ஆயிஅம் வௌவால்கள் நறுமணம் கமழ பல்லின் சீதம் பத்துக் காதம் பரிமளிக்க சொல்லெடுக்கு முன்னே சுற்றியிருந்தோர் வெகுள, ஆகாச கங்கையை நினைத்து ஆறு தடவை வலம் வந்து உடல் தேய்த்து நீராடி புத்தாடை புனைந்த பலன் இதற்குள் அடங்கிற்றே உலகத்தீர் அறியீரோ என அருள் மொழி புகன்று மணப்பந்தல் நோக்கி மத்தகஜம் போலவும் சித்தசன் தானேயெனவும் இறுமாந்து இருவாரத் தாடியை இனிது கோதி கண்ணழுக்கை வலச் சுண்டுவிரலால் அப்படியே எடுத்து நெற்றியிலே ஜவ்வாதெனயிட்டு உலகத்தீரே எம்மைக் கண்டு உய்மின் உய்மின் என்று உபதேசித்தவண்ணம் மணவறையேறி மாதினியாள் பக்கம் மன்னவன் போல் அமர்ந்தார்.

     அம்மி நாச்சியாரும் அருகிலிருந்த அழகனை நோக்கினாள். அவனும் நோக்கினான். இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார். இனித் திருமாங்கல்யம் என்ற திருபுச் சொல் எதற்கு என்ற உசா எழுப்பி உடனிருந்த மங்கையை இடம்பெயரச்செய்து கடிதகன்று கட்டிலேறி, "அடிப்பெண்ணே! என் மனதுக்கினிய கண்ணே! என்னிடம் நீ எதிர்பார்ப்பது இல்லை. உன்னிடம் ஊரார் (பொதுவாக) எதிர்பார்ப்பதுண்டோ " யென அரும்பு புன்னகையை அருளி ஆவலாய் நின்றார்.

     அம்மி நாச்சியாரும் அரும்கொங்கையை அரவணித்து, "ஆருயிர்த் துரையே! அவதார புருடா! ஆயிர வௌவால்களின் அநந்த நேத்ர தீக்ஷண்ய சுயம்புவே! நீவீர் இலக்கியம் தளிர்க்க இடக்கையில் புத்தகமும் வலக்கையில் பேனாவும் ஏந்தி சிருட்டித் தொழில் புரிக. யானோ அத்தினிப் பெண் ஆகையினாலே அடியாளுக்குத் தங்கள் இடர்ப்பாடு இன்னல் விளைவிப்பதன்று" என இனிது மொழிந்து இலக்கிய மம்ம நாயனாரை இனிது தேற்றினாள்.
கடைத்தேறு படலம்

     இனிமேல் இலக்கிய சிருட்டிகள் புனைவான்வேண்டி இவ்வுலகில் அவதரித்த எம்மிறைவன் எம்போலியனாய், எம்மில் பெரியனாய், எம்மில் சிறியனாய், ஏகக் கலைஞனாய் ஏமகூட நகரத்தை வந்தடைந்தார்.

     அங்காடிகளை வலம் வந்தார். அந்தணாளர்தம் தெருக் கண்டார். சீர்பெறு சிரேட்டிகள் மனை கண்டார். மனம் கொண்டார். இலக்கியம் பிறக்க யென அருள்மொழி புகன்றார். ஆயிர ஆயிரமாகப் பக்த கோடிகள் குழுமினர், கொண்டாடினர். மண்டலத்தில் இவனைப் போல் உண்டோ என்றனர். கண்டெடுத்த தவப்பயனே என்றனர். பொய்யடிமைப் புலவனே என்றனர். பூவுலகறியாப் பாடைகள் அறியும் புனிதனே என்றனர்.

     ஏமகூடம் சேமகூடம் ஆகும் என்று செம்மாந்திருந்தார். இன்னோரன்ன பிறரும் இவருக்குத் திருமேனி திருநீழல் அடைவான் வேண்டி அவிசார சதுக்கத்திலே அமங்கல வீதியிலே காரையும் கூரையும் சேர்ந்த கவின்பெறும் மாளிகை ஒன்றை வரித்து வாடகை இருத்து வனிதையும் வார்த்தையின் மன்னவனும் வாழ்வு நடத்துமாறு சங்கல்பித்தனர்.

     இலக்கிய சிருட்டியிலே இடையறா மோகம் கொண்ட இலக்கிய மம்ம நாயனார், "யான் பெறு இன்பம் பெறுக இவ்வையகம் என"க் கடைவாசல் திறந்து கருத்து அழுமுனையிலே இருத்தி நித்திய தரித்திரம் பண்ணுவாராயினர். அம்மி நாச்சியாரும் அருள்மொழி தேவன் மனமறிந்து மனம் கோணாது வையம் இன்புறுவான் வேண்டி இல்வாழ்க்கையெனும் இயல்புடையான் சகடத்தை வந்தார், சென்றார், வரவிருந்தார் அனைவரும் அழைத்து அடவு செய்து அனுப்பி வைத்தார்.

     உலகம் இலக்கியம் பெற்றது இன்புற்றது என்னே! என்னே!!

அரையான் சீற்றப் படலம்

     ஏமகூட நகரத்திலே இறுமாந்து வீற்றிருந்து இலக்கிய சேவை புரியும் மம்ம நாயனார் மாண்புகள் கண்டு மனம் பொறாது கொதித்துக் கோபங்கொண்டு குலோத்துங்க பாண்டிய சோழன் கிங்கிலியர் பலரைச் சங்கிலி எடுத்துச் சென்று மங்கிலியமணிந்த மனையாட்டியோடு இழுத்து வருமாறு கடாவினார்.

     'யாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்' என்ற பொன் மொழியின் அவத்தன்மை உலகம் அறிந்து உய்யுமாறு மம்ம நாயனார் இடியேறுபட்ட பிடிசோறு போலவும், வடிவாய் மழுங்கி நடமாடி நின்று, திடமாகு மங்கை குடமாகு கொங்கை மடிசஞ்சி போலத் தூங்கும் நிலையறிந்து, அரையனே போற்றி; அமலனே போற்றி, அவனி முழுவதும் ஆண்ட அருள் வள்ளலே போற்றியென பா இசைத்து அஞ்சலி செய்து கஞ்சுகம் கட்டிய காவலர் நெஞ்சம் தெளிவுற ஆடிப்பா அஞ்சலி செய்து நின்றார்.

     மங்கையொரு பாகன் திருவருளாலும், மானிலக் கிழத்தியின் தவப்பயனாலும் இலக்கியம் செய்த பேரறத்தாலும் மம்ம நாயனார் மண்டை கபாலமாகாமல் தப்பிற்று.
வைசும்ப நகரேகு படலம்

     ஏம கூடத்திலே இனி ஒரு கணமும் தங்கோம் எனச் சூளுரை கூவி மங்கையை அழைத்துச் சங்கையை விடுத்து அங்கையை வீசி வைசும்ப நகர் என்ற பல்லவ ராஜ்யத்தின் தொல்லைத் தலைநகருக்கு வந்திருந்தார்.

     கடாரத்திலும் சாவகத்திலும் பௌத்த பீடகம் ஒன்றைத் தேடிச் சென்ற மருள் ஒளி சிரேட்டி என்பார் தம் வாழ்நாள் முழுதும் காணாத பீடகத்தைக் கண்டு தெளிவதிலே கழிந்து போயிற்றே என்று அவலமுற்று உள்ளொழிந்து தெருவீதி உலாப் போந்த சமயத்தில் மம்ம நாயனாரின் திவ்ய தரிசனம் கண்டு அஞ்சலி செய்து "பீடகப் பெருமை பீடுற்றறிந்த பெம்மானே! பிறவிக் குகையில் உட்கார்ந்த சோதியே சுடரே! வைசும்ப நகரத்தின் வைகறையே நான் கடைத்தேறத்திருக்கண் சாத்த வேண்டும்" எனப் புகன்று நின்றார்.

     "அப்படியே செய்வோம் அமுதுபடி நல்க" யென மம்ம நாயனார் ஆக்ஞாபிக்கச் சிரேட்டியும் அரிசி நீக்கி உமி அனுப்பி அருள்மொழி தேவன் பசியாற வேண்டுமென பணிந்து நின்றான்.

     அன்னாரும் உமியை உடன்போன்ற மாட்டுக்காரனுக்கு விற்று அவன் இருந்த செல்லாச் சல்லி கொண்டு குழல் பந்தனம் செய்து கூறும் அருள் கொழிக்கும் கொக்கிற்கு பஸ்பத்தைக் குழலில் இட்டு உள்ளங்கை கொண்டு கவிழ்த்து பிரமனின் நெற்றியிலே பிறந்தவராதலாலே உள்ளங்கை அக்கினியிலே குழல் பஸ்பத்தைக் குளிர்வித்து புகை எழுப்பி வாசியைக் கட்டி முஷ்டியைத் தமது இல்லா இடத்தில் அமைத்து யோக நிஷ்டையில் அமர்ந்தார்.

     சிரேட்டியும் நித்தம் ஒருமுறை உத்தமரை வலம் வந்து அபான பிரணவத்தின் அரிய மகிமையை உணர்ந்து உலகிலே பல கோடி காலம் வாழ்வானாயினன்.

     வைசும்ப நகரமும் வகை வகையாம் திறந்தெளிக்கும் தேவாதி தேவன் திருக்கழல் வணங்கி தீட்சை பெற்று தேவியின் அருளும் பெற்று ஆனந்தம் பெற்று வாழ்வும் சீலமும் சிறக்க நிலைநின்று நீடு வாழ்வாராயினர்.

     இது நாரதன் வைசம்பாயனருக்குச் சொல்ல, வைசம்பாயனர் வாமனுக்குச் சொல்ல, வாமனன் வேகவதிக் கரையிலே தவம் செய்கின்ற கொக்குக்குச் சொல்ல, கொக்கு வைசும்ப நகரத்திலே மம்ம நாயனார் மணிக்கழல் வணங்க, ஒரு கூறுகத்திக் கிளையிலே குற்றிருந்து குவலயம் கேட்க மம்ம நாயனாரின் மாண்புகள் விரித்து நிற்கையிலே அன்னாரின் அமிசங்களிலே ஒன்றான சூறாவளி நாயனான் என்ற நாயேன் கேட்டிருந்த நாட்டம் கோணாமல் வீட்டில் இவர்ந்து தீட்டி வைத்தேன். சுபமஸ்து.

     இதை பாடியோர், கேட்டோர், கேட்டோரைக் கண்டோர், கண்டோரைப் பார்த்தோர் யாவரும் மம்ம நாயனார் அருள் பெற்று நீடூழி நிலவுலகம் சிரிக்க வாழ்வார்.


குப்பனின் கனவு


     அன்றைக்கு நாள் முழுவதும் மழை சிணுசிணுத்துக் கொண்டிருந்தது. ஒரேயடியாக இரண்டு மணி நேரமோ, மூன்று மணிநேரமோ அடித்து வெறித்தாலும் கவலையற்று வேலை பார்க்கலாம். இப்படி நாள் முழுவதும் அழுதுகொண்டிருந்தால்...?

     குப்பன் ஒரு ரிக்ஷாக்காரன்.

     வண்டியை மேற்கும் கிழக்குமாக இழுத்துச் சென்றதுதான் மிச்சம். ஒரு சத்தமாவது கிடைக்கவில்லை.

     மேலெல்லாம் நனைந்துவிட்டது. தலையில் போட்டிருந்த ஓட்டைத் தொப்பி - அது எந்த வெள்ளைக்காரன் போட்டதோ - அதுவும் தொப்பலாக நனைந்துவிட்டது. தொப்பியிலும் உள்பக்கம் ஈரம் சுவரியது என்றால், வேஷ்டியைக் கூட பிழிந்துகட்ட நேரமில்லை. அவ்வளவு ஆவல்.

     ஒரு நாலணா கிடைத்தால் வீட்டிலே எறிந்துவிட்டாவது முடங்கலாம். போகிற பெரிய மனிதர்களுக்கு ரிக்ஷா என்றால் மழையில் கசந்து கிடக்கிறது. அந்தத் தெருமூலையில் நிற்கிற பிச்சைக்காரன் பாடு குஷிதான். பிச்சைக்காரனாக இருந்தால் கூட... சீ... என்ன மானங்கெட்ட பிழைப்பு!

     குப்பன் பொருளாதார சாஸ்திரியல்ல; பொதுவுடைமைக்காரனல்ல. இத்தனை நாளும் அவன் பல்லை இளித்துக்கொண்டு "ஸார்", "ஸார்" என்ற, சட்டைபோட்ட பேர்வழிகளைக் கண்டால் அவனுக்கு எரிச்சலாக இருந்தது. திருட்டுப் பசங்கள்...! ஒரு பயலாவது ஏறக்கூடாதா?

     "ஸார்" என்று ஒருவரிடம் வண்டியைத் திருப்புகிறான்.

     அவர் "வேண்டாமப்பா" என்று கொண்டே டிராமில் ஏறிக்கொண்டு விடுகிறார்.

     அந்த மனிதனைக் கிழித்துவிடலாமா என்ற கோபம்.

     வண்டியை ஸென்ட்ரல் பக்கம் இழுத்துக் கொண்டு செல்லுகிறான். மனதிலே என்ன என்னவோ ஓடுகிறது. இப்பொழுது ஒரு மொந்தை சாராயம் அடித்தால் என்ன குஷியாக இருக்கும்! நாவில் ஜலம் ஊறுகிறது. 'மெட்ராஸ் பூராவுமே வேகமாக இழுத்துக்கொண்டு ஓடலாமே' என்று அவனுக்குப் படுகிறது. ஆமாம்! இந்த தொலையாத வேலை.

     குப்பன் பெண்டாட்டி நாலு காசு பார்க்காமலா இருப்பாள். அவளும் கொஞ்சம் 'தொழில்' நடத்துகிறவள்தான். பிறகு "எந்த .... பத்தினியா இருக்கா?" அவனுக்கும் தெரியும். அவனுக்குத் தெரியும் என்று அவளுக்கும் தெரியும். அவள் நாலு காசு பாத்திருந்தா... வீட்டுக் கவலை ஒயுஞ்சுது... இவனுக்கு அந்த நாலணா கிடைத்தால் சாராயக் கடைக்காச்சு...

     குப்பன் வண்டியை இழுத்துக் கொண்டு போகிறான். முகத்தில் பன்னீர் தெளித்த மாதிரி ஓயாமல் தூறல் விழுந்து சொட்டிக் கொண்டிருக்கிறது. சில சமயம் மூக்கில் போகாமல் தும்மிக் கொள்கிறான்... வண்டியும் சடசடவென்று அவன் எண்ணத்திற்குத் தாளம் போடுகிறது.

     'அந்த டிராமிலே ஏர்ன ஆசாமி மாதிரியிருந்தால்..."

     அவ்வளவுதான்...

     குப்பன் வண்டியிலே குஷியாக உட்கார்ந்திருந்தான்.

மேலே கோட்டு, உள்ளே சட்டை... மடியிலே காசு. கையிலே பீடி... இல்லை சிகரெட்டு... வண்டியை இழுப்பதும் குப்பன் தான்... குப்பாயியும் உட்கார்ந்துகொண்டால் ஸோக்காக இருக்கும்... அவதான் ஊட்லெ இருக்கிறாளே...

     'குப்பா, வண்டியெ வேகமா இஸ்திகினுபோ... சாராயக் கடை... இல்லெடா வெள்ளைக்காரன் குடிக்கர எடத்துக்கு... ஒரு மிஸிகூட...

     'வண்டி போய் ஒரு மாளிகை முன்பு நிற்கிற மாதிரி... குப்பம் இறங்கி குப்பனுக்குக் காசு கொடுக்கிறான்... இந்தாடா நாலணா... கூட ஓரணா எனாம்!... உம்... உள்ளே போகிறான்... உள்ளே ஸோபா... விசிப்பலகை... நாறுகட்டில் ஸோக்காத்தான் இருக்குது... 'குப்பாயி' என்று கூப்பிடுகிறான். 'போடா குப்பா. வேலை இக்குது' என்று குப்பாயி வருகிறாள்... அப்பொழுது ட்ராமில் ஏறிய கனவான் வருகிறார். 'ஏண்டா குப்பா ஏன் வூட்லே... 'போசாமி... அதெல்லாம் அந்தக் காலம் மலையேறிப் போச்சு... அண்ணைக்கி ஏமாத்தலேயோ? ஏய்! பூடு. அப்படி முழி... அப்போ ஏமாத்னப்ப எப்படி இருந்தது? குப்பாயி, வெளிலே புடிச்சுத் தள்ளு அவனை... வா... ஒனக்கு வேணும்னா நாலணா எடுத்துக்கினு பேசாதே ஓடிப்போ. கூச்சப் போடாதே, இது... குப்பாயி வூடு. தெரிஞ்சிதா... நீ வேண்ணா வெளிலே ரிக்ஸாக்குது; இஸ்து பொயிச்சிகோ...

     'ஏண்டா முழிக்கிறே! போலீசைக் கூப்பிடுவேன்...'

     படீரென்ற அறை. திடுக்கிட்டு நிற்கிறான். வண்டி லாந்தல் கம்பத்தில் மோதிக்கொண்டது.

     "என்ன ரிக்ஷா, பிராட்வேக்கு வாரியா?" என்றார் ஒருவர்.

     "ஏறு சாமி!"

     "என்னா குடுக்கரே?"

     "நாலணா!"

     குப்பனுக்கு சற்றுமுன் இழந்த முதலாளிப் பதவியைவிட அந்த நாலணா மிகுந்த களிப்பைத் தந்தது.

     நாலணா!

பித்துக்குளி




     மாவேலிக் கரை என்றால் மனதில் என்ன என்னவோ எண்ணங்கள் எல்லாம் குவிகின்றன. இயற்கை அன்னைதன் எழில்களை எல்லாம் அந்த மேற்கு மலை மறைவிலே கொட்டிக் குதூகலித்து விளையாடுகிறாள். வாலிபனுக்குக் காதல் தோன்றும். கவிஞனுக்குக் கனவு தோன்றும். அறிவில் முதியவனுக்குச் சாந்தி தோன்றும் அந்த இடத்திலே.

     சுற்றிலும் காயல் நீலவானைத் தழுவியது. அதன் ஓரத்திலே கமுக மரங்களைக் குழைந்து தழுவின காதற் கொடிகள் - மிளகுதான். அந்த மிளகுக் கொடி... உள்ளத்தையும் உடலையும் ரகஸ்யமற்று அர்ப்பணம் செய்யும் கங்கையின் களங்கமற்ற அன்பு மாதிரி...

     காயலுக்கு வட பக்கத்தில் வடசேரி. அதில் வல்லியத் தம்பிரான் என்றால் பழைய அரச வம்சம். மலை நாட்டு வீரம் முதலிய இழந்த இலக்ஷியங்கள் எல்லாம் நினைவிற்கு வரும். அவருக்கு ஒரு மகள் சகுந்தலா. காளிதாசன் கனவில் கண்ட சாகுந்தலை இவளைப் போல்தான் இருந்திருக்க முடியும். இயற்கையின் மடியில் வளர்ந்த குயில். பழைய படாடோ பத்தின் அம்சமான வல்லியத் தம்பிரானுக்கு உயிர். சமஸ்தான சம்பந்தத்தில் தமது இழந்த சிறப்புகளைப் பெறவிருந்தார். அவளுடைய ரகஸிய நாடிகளை அவர் அறிவாரா?...

     மாவேலிக்கரைக்கும் வடசேரிக்கும் இடையில் காயல் ஒரு மைல்தான்.

     மாவேலிக்கரையில் நீரருகில் ஒரு பிறையிடம் தம்பிரானைச் சேர்ந்ததுதான். அங்கே மார்த்தாண்டவர்மன் என்ற வாலிபன். ஓலைச்சுவடி, விவசாயம் இதுதான் அவனுடைய பொழுதுபோக்கு, வாழ்க்கை இலட்சியம்.

     அன்று இரவு சற்று மழை தூறிக்கொண்டிருந்தது.

     ஓங்கி வளர்ந்த தென்னங்கீற்றுகளிலிருந்து சொட்டுச் சொட்டென்று நீர்த்துளிகள்.

     நாளைக்குச் சகுந்தலா புருஷன் வீடு சென்றுவிடுவாள்.

     இன்றாவது கடைசி முறை காண...

     இருளிலே படகு வரும் சப்தம்.

     மார்த்தாண்டவர்மன் ஒரு மூலையில் மணையில் உட்கார்ந்திருக்கிறான்.

     இருட்டு.

     அவள் வந்தாள். தீபத்தை ஏற்றினாள்.

     மூலையிலிருந்த கரியடுப்பில் பாலைக் காய்ச்சினாள்.

     அதைக் கையில் எடுத்துக்கொண்டு அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

     மார்த்தாண்ட வர்மன் நினைவற்றவன்போல் இருந்தான்.

     பால் கிண்ணம் அவனது வாயண்டை வந்தது. குழந்தை மாதிரி அருந்தினான்.

     பிறகும்...?

     மௌனந்தான்.

     மெதுவாக அவன் கால்களை எடுத்து இடையில் சுற்றிக் கொண்டாள்...

 அவளது மழையில் நனைந்த உடலை மறைத்த கேசத்தை ஒதுக்கி அவனது சிரத்தை தோள் மீது மெதுவாக சாய்த்தாள். அவனது உஷ்ணமான கன்னங்கள்... அவள் கழுத்திலிருந்து முகம்வரை செக்கச் சிவப்பாக மாறியது...

     மெதுவாக அணைத்த அவன் கரத்துடன் அவன் மடியில் கண்ணை மூடிய வண்ணம் படுத்தாள்.

     என்ன நம்பிக்கை! அவள் கடைக்கண்ணில் சுடர்விட்ட இரண்டு துளிகள் எதை நினைத்தனவோ!

     ஆமா... சகுந்தலா... என்னுடைய... சகுந்தலா... அவள் என்னுடையவள்... அவள் கழுத்து, அந்தப் பிளவுபட்ட கேசம் எவ்வளவு அழகாக... இப்படியே என் பக்கத்தில்... எப்பொழுதுமே... ஆமாம். எப்பொழுதுமே... அதை அவள் கழுத்தில் அப்படியே சுற்றினால்...

     அவனது கரங்கள் இருகூறாகப் பிளந்து கிடந்த சிகையை அவள் கழுத்தில் சுற்றுகின்றன, இறுக்குகின்றன.

     "ஆமாம்! என்னுடையவள்!" என்ற வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வருகின்றன.

     அவள் கண்கள் மூடியபடிதான்... அதரத்திலும் அந்தப் புன்சிரிப்பு. அந்தத் தழுவல், அவனைத் தன்னுள் அழுத்திய கை இன்னும் அவனை இழுப்பது மாதிரி அழுத்துகின்றது... அந்த நிலையில்...

     அவ்வளவுதான்.

     அந்த இரண்டு துளிகள் என்ன நினைத்தனவோ?

     அன்று அவனை அணைத்த வண்ணமே இரவு கழிகிறது.

     அவள் எப்படி விலகுவாள்? உயிர் இருந்தால்தானே.

     அன்று இரவு அவள் விலகவில்லை.

     அவன் மனதில் காதலின் வெறி! ஐக்கிய வெறி!...

     அவள் எப்படி நீங்குவாள்?

     அன்று இரவு அவள் நீங்கவில்லை!

     உயிர் இருந்தால்தானே!

பறிமுதல்


43 நெர். கைதி ஒரு பயங்கரப் புரட்சிக்காரன். அவன் பேரில் அரசியல் விஷயமாகக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

     பயங்கரப் புரட்சிக்காரன் என்று சமுதாயத்தின் சார்பாக அரசாங்கம் முடிவு கட்டிவிட்டது. ஆனால் அவனைப் பார்த்தால் அப்படித் தோன்றாது. இயற்கைச் சிருஷ்டியில் வசீகரப்படுத்தும் ஒரு ஜீவன் இருந்தால் அது 43 நெர். கைதி.

     அவன் இருக்கும் அறை தனி. வெளிச்சம் வருவதற்கு அல்லாமல் காற்று வருவதற்கு மட்டும் ஒரு சிறிய துவாரம். அதன் வழியாகப் பெரிய பூனை நுழையலாம். ஆனால், புரட்சிக்காரர்கள் பூனை வடிவம் எடுக்கக்கூடும் என்று பயந்தோ என்னவோ அதிலும் இரும்புக் கம்பி.

     இந்தத் தனிமையில் ஒருவனுக்குப் பித்துப் பிடிக்காமலிருந்தால் அவன் மன உறுதியை என்னவென்று கூறுவது!

     வாரத்திற்கு ஒரு முறை - தவறுதலாகவோ என்னவோ - அவனது சிநேகிதியைப் பார்க்க அனுமதித்தார்கள். அதுதான் காரணம் அவன் அந்தச் சிறையிலிருந்து ஓர் அற்புதமான கிரந்தத்தை எழுத.

     தூக்குத் தண்டனை அநுபவிக்க இன்னும் பதினைந்து நாட்கள். இன்னும் ஒரு முறை வருவாள். கிரந்தம் உலகத்திற்குப் போய்விடும். அதற்கு மேல் சாந்தி! வேறு என்ன வேண்டும்?

     அந்தச் சின்ன அறையில் இரகசியங்களை மானஸீகமாக அல்லாமல் வேறு முறையில் வைத்துக் காப்பாற்ற முடியுமா?

     ஜெயில் சூப்பிரண்ட் பரமேச்வரத்திற்குத் திடீரென்று சோதனை போடவேண்டும் என்று பட்டது. அவருடைய அந்தராத்மா அப்படிச் செய்யச் சொல்லியதோ, என்னவோ?

     கேட்பானேன்? வெகு நுணுக்கமாக எழுதிய அந்தக் காகிதக் கத்தை அகப்பட்டுக் கொண்டது; அதைப் பறிமுதல் செய்தார்.

     43 நெர். அதை எடுத்துக்கொள்ளும்பொழுது பட்ட துடிப்பைப் பார்க்க வேண்டுமே! உயிரையே வேண்டுமென்றாலும் பணயம் வைப்பது போல் - இவனைக் கேட்காமலே பிரியப் போகிற இந்தப் பொக்கான உயிரை மட்டுமா? தனது சக்தி முழுவதையுமே வைத்துப் போராடினான். நான்கு வார்டர்களும் ஒரு சூப்பிரண்டும் எதிர்க்கும் பொழுது, அந்தச் சின்ன அறையில் எப்படிப்பட்ட சண்டைக்கும் ஒரே வித முடிவுதான் உண்டு. அதுதான் நடந்தது.

     43-ம் நெம்பருக்குப் பலத்த காயம். புற உடம்பில் மட்டுமா? அது மட்டுமானால்தான் அதை ஒரு பொருளாக மதிக்க மாட்டானே? ஆத்மா, உலகம், இலட்சியம் எல்லாம் பறிபோனது போல் துடித்தான்; சோர்ந்தான். அந்தப் பெண் - தனது சிநேகிதை - வந்தால்... ஐயோ!... அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது.

     ஜெயில் ஆஸ்பத்திரியில் மருந்து போட்டார்கள். தூக்குத் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.

     அன்று சிநேகிதியைக் காண அனுமதிக்கவில்லை.
2

     'நல்லார்... அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்பது ஒரு தத்துவப் பிரமை. இதற்கு எதிர்மறையாக, 'தீயார், அவர் பொருட்டாகச் சிலரை வலுவாகச் சிறைசெய்ய வேண்டியது' என்பது ஒரு சமூக உண்மை.

     பரமேச்வரம் சூப்பிரண்டாக இருந்தாலும் அவரும் ஒரு சிறைவாசி தான். அந்தச் சமூக உண்மைக்கு உதாரணம். இவரும் அந்த ஜெயில் காம்பௌண்டிற்குள்ளேதான் நாள் முழுதும் குடியிருக்கிறார். இவரும் இஷ்டம்போல் அனாவசியமாகச் சுற்ற முடியாது. கைதிகளைக் காப்பதற்கு இவரும் சிறைவாசம் செய்யவேண்டியிருக்கிறது. இது பரமேச்வரத்திற்குத் தெரியாது; அவர் அதைப் பற்றி நினைத்ததே இல்லை.

     பரமேச்வரத்திற்கும் மற்றக் கைதிகளுக்கும், இருக்கும் அறையைப் பற்றியமட்டில், வித்தியாசமுண்டு. சிறையிலே, ஏ கிளாஸ் பி கிளாஸ் இல்லையா? இதற்கெல்லாம் மேலாக ஜெயில் சூப்பிரண்ட் கிளாஸ் என்று வைத்துக்கொண்டால் போகிறது.

அன்று இரவு சூப்பிரண்ட் பரமேச்வரம் பிள்ளை பறிமுதலைப் பற்றி ரிப்போர்ட் தயார் செய்து கொண்டிருந்தார். எழுதியவர் 43 நெர். கைதி. தலைப்பு ஒன்றும் தெரியவில்லை. படித்துத்தான் ஆகவேண்டும்!

     படிக்க ஆரம்பிக்கிறார்...
     "நல்ல இருள்...
     தொட்டால் கையில் கறுப்பு ஒட்டிக் கொள்ளும் மாதிரி.
     அப்பொழுது நீ வந்தாய்.
     இருளில் ஜோதிப் பிழம்பாக இருந்தாய்.
     நீ யார்?
     முகத்தை ஏன் மறைக்க வேண்டும்?
     முத்தமிட்டுவிடுவேன் என்று பயமா? ஆனால் நீ என்னைத்
     தழுவலாமோ?
     உனது ஸ்பரிசம் என்னைப் புனிதனாக்கிவிட்டது.
     நீ யார்?...
     இன்று நீயேன் வரவில்லை? இன்று நிலவு காய்கிறது.
     நிலவுக்கு நீ அவசியமில்லையா? அல்லது உனக்கு நிலவு
     அவசியமில்லையா?
     இன்று என் மனம் தகர்ந்துவிடுகிறதே? இப்பொழுது
     வர மாட்டாயா?
     உள்ளத்தில் ஒரு ஊழிக் கூத்து, ஊழியின் இறுதி... உனக்கு
     இரக்கமில்லையா?
     நீ யார்?...
     இன்று நள்ளிரவு.
     நீ வருவாய். வந்துவிட்டாய்! அடி, நீ யார்?
     என்னை வாழ்விக்க வருகிறாயோ?
     காதலா, கருணையா?
     தாயின் அன்பா?
     உன்னைத் தாய் என்று நினைக்க முடியவில்லை. நீ எனக்கு...
     அடி, நீ யார்?
     உன் முகத்திரையைக் களைந்தால் நீ என்ன செய்வாய்?
     அடி, நீ யார்?"
     பரமேச்வரம் வாசித்து முடிக்கும் பொழுது இரவு வெகு நேரமாகி விட்டது.

     இதில் என்ன குற்றமிருக்கிறது? இருந்தால் அழித்துவிடத்தான் வேண்டுமா? அழித்தால் என்ன கிடைத்துவிடுகிறது? அழித்துத்தான் ஆக வேண்டுமா?

     புது உலகத்தை சிருஷ்டிப்பவனை, இன்று உடலை அழித்துவிடலாம். அவன் பிரம்மா! அவனை அழிக்க முடியுமா? சமூகம் அசட்டுத்தனம் செய்யும்.

     அரசாங்கம் எப்பொழுதும் இப்படித்தான். நமது அரசாங்கமாக இருந்தால் என்ன? அந்நியனுடையதாக இருந்தால் என்ன? சரித்திரத்தில் எங்கும் இப்படித்தான்.

     கடமை இருக்கிறது. கடமை அவசியந்தான். கடமைக்காக எதையும் செய்துவிடுகிறதா?

     பரமேச்வரத்தின் மனது ஒரு கொந்தளிக்கும் கடல்போல் தறிகெட்டுப் புரண்டது.

     வெளிக் காம்பௌண்டில் உலாவ வருகிறார்.

     தம்மையறியாமல் அந்தச் சிறு காகிதக் கட்டு அவர் பைக்குள் செல்லுகிறது. அதை அழிப்பதா? வைத்துக் கொண்டால் என்ன?

நல்ல இருட்டுத்தான்.

     காம்பௌண்ட் சுவரிலிருந்து ஒரு கறுத்த உருவம் குதிக்கிறது.

     கடமை! வார்டர்களைக் காணோம். அந்தப் பக்கம் சற்று ஒரு மாதிரித்தான்.

     ஒரே பாய்ச்சலில் எட்டிப் பிடித்துக் கொள்ளுகிறார்.

     சல்லடம் தரித்த பெண்.

     அவன் சிநேகிதை.

     "நீ..." என்கிறார்.

     "ஆம்! அவரைப் பார்க்க வேண்டும். அனுமதி இல்லாவிட்டால் வழியுண்டு."

     "பார்க்கக் கூடாது! வீணாக நீயும் அகப்பட்டுக் கொள்ளாதே! போய்விடு! நீ சிறுமி!"

     "நான் பெண்ணுமல்ல, சிறுமியுமல்ல. எங்கள் சமுதாயத்தின் அடிமை; தொண்டர்."

     "நம்முடைய சமுதாயமில்லையா?" என்று சிரித்தார்.

     "நீ ஒரு துரோகி. உனக்கு அங்கு இடம் கிடையாது!" என்றாள்.

     அவள் கையில் தொங்கிக் கொண்டிருந்த பையில் என்னமோ சிறிய கட்டு பொத்தென்று விழுந்தது.

     இருவரும் மௌனமாக நிற்கின்றனர்.

     "நீ!..." என்றாள்.

     "போ! போ!"

     அவளை ஒரே துக்காகத் தூக்கி, காம்பௌண்ட் மதில் மேல் வைத்தார். அடுத்த நிமிஷம் அந்த உருவம் மறைந்தது.

     "பறிமுதல் செய்யப்பட்ட சிறு காகிதக் குப்பை, கைதி 43-ம் நெம்பரின் பைத்தியக்கார உளறல்களாக இருந்ததால் அழிக்கப்பட்டது" என்று எழுதிவிட்டு நாற்காலியில் சாய்ந்தார்.

     எது பறிமுதலானது?

அவதாரம்

     பாளையங்கால் ஓரத்திலே, வயற்பரப்புக்கு வரம்பு கட்டியவை போன்ற பனைவிளைகளுக்கு அருகே குலமாணிக்கபுரம் எனச் சொல்லப்பட்ட குலவாணிகபுரம் இருக்கிறது. இந்தச் சிற்றூரில் யாதவர்களும் கொடிக்கால் 'வாணியர்'களுமே ஜாஸ்தி. மருந்துக்கு என்று வேளாண் குடிகளும் கிராமப் பரிவாரங்களான குடிமகன், வண்ணான் முதலிய பட்டினிப் பட்டாளங்களுக்கும் குறை கிடையாது. ஊரில் செயலுள்ளவர்கள் யாதவர்களே.

     கிருஷ்ணக் கோனார் என்ற கிருஷ்ணசாமிதாஸ் யாதவர்களுக்குள் யோக்கியர் என்ற பெயர் வாங்கியவர். யோக்கியர் என்றால் அயோக்கியத்தன்மையில் இறங்காதவர் என்றே அர்த்தம். சந்தர்ப்பவசதி இல்லாததினாலோ என்னவோ நல்லவராகவே பெயரெடுத்து வந்திருக்கிறார்.

     ஆனால் விதி, உடம்பை வளைத்து வேலை செய்ய முடியாதவரை காத்திருந்துவிட்டு, அவருக்கு ஒரு குழந்தையை - ஆண் பிள்ளையை - மட்டும் கொடுத்து மனைவியை அகற்றி அவருடைய நடமாடும் சொத்துக்களான கால்நடைகளிடையே கோமாரியைப் பரப்பி விளையாடியது.

     வெகு சீக்கிரத்தில் கஷ்டங்களை அறியலானார். சாப்பாட்டுக்கும் கஷ்டம் வந்தது. குழந்தையை வைத்துக்கொண்டு பராமரிப்பது தலைக்கட்டு நிர்வாகத்தை விடக் கஷ்டம் எனத் தோன்றியது கிழவனாருக்கு.

     பையனுக்கு இசக்கிமுத்து எனப் பெயரிட்டு, இசக்கியின் அருள் விட்டவழி என ஏக்கத்திலும் ஏமாற்றத்திலும் ஏற்படும் நிராதரவில் பிறக்கும் திருப்தியைப் பெற்றார்.

     குழந்தையும் நாளொரு ஏமாற்றமும் பொழுதொரு கஷ்டமும் அனுபவித்து வளர்ந்து வந்தது. விதியின் கொடுமையைக் கண்டு சீற்றமடைந்தோ என்னவோ, இயற்கை அவனுக்குத் தன் பரிபூரண கிருபையை வருஷித்தது. உடலும் மனமும் வறுமையின் கூர்மையிலே தீட்சண்யப்பட்டு வளர்ந்தது.

     இசக்கிமுத்துவைப் பார்த்தால், மனம் அவன் காலடியில் விழுந்து கெஞ்சும். ஆனால் அதே மனம் அவனுக்காகக் கண்ணீர் வடிக்கும். அவனது முகச்சோபை அப்படி. குழந்தையின் துடிவைக் கண்டு கோனார் அவனுக்கு 'நாலெழுத்து படிச்சுக்கொடுத்து உத்தியோகம் பார்க்கும்படி செய்விக்க வேணும்' என ஆசைப்பட்டு, திண்ணைப் பள்ளியில் சேர்த்துவிட்டார்.

     புது விசயங்களைக் கிரகிக்க இசக்கியிடம் இருந்த ஆவலுக்கு ஏற்றபடி திண்ணை வாத்தியாரின் அறிவுப் பொக்கிஷம் விசாலமாக இல்லை. அதன் விளைவாகக் கல்வியரங்கம் மாறியது.

     கோனார் மறுபடியும் குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு பாளையங்கோட்டை சாமியார் பள்ளிக்கூடத்திற்குப் பிரயாணமானார். எம்மதத்தவரானாலும் துறவிகளாக வருகிறவர்களுக்கு நம்மவர் செலுத்தும் மரியாதை சிற்சில இடங்களில் தவறான மதிப்பும் அந்தஸ்தும் கொடுத்து விடுகிறது. இத்துடன் ஓரளவு தர்மச்செலவு செய்யும் சேவையைச் சேர்த்துக்கொண்டால் அந்தஸ்து வளர்ச்சிக்கு அளவே கிடையாது. ஏகாதிபத்தியத்திற்கே பிரத்யேகமான வர்ணம் என்ற வெள்ளைத் தோலும் சேர்ந்து கொண்டாலோ கேட்க வேண்டியதே இல்லை. இந்த மூன்று அந்தஸ்தும் கொண்ட பிற மத மிஷனரிப் பள்ளிக்கூடங்கள் தர்மம் செய்யும் ஏகாதிபத்தியமாக, ஏகாதிபத்தியம் செய்யும் தர்மஸ்தாபனமாக இரண்டு நோக்கங்களையும் கதம்பமாக்கி இரண்டையும் ஒருங்கே குலைத்து வருகிறது.

     இப்படிப்பட்ட ஸ்தாபனம் ஒன்றின் ஸ்தல சர்வாதிகாரி அர்ச். ஞானானந்தச் சாமியார். இவர் ஸ்தல கிருஸ்துவர்களின் ஒரு வகுப்பாருக்கு மோட்சத்தில் இடம் போட்டுக்கொடுக்கும் வேலையுள்ள ஸ்தல ஹைஸ்கூலின் தலைமை நிர்வாகத்தை ஏற்று இங்கிலீஷும் சரித்திரமும் போதித்து வருகிறார்.

     இவர் வசம் கோனார் தம் குழந்தையை ஒப்புக்கொடுத்தார். சாமியார் இலவசப் படிப்பும், அவன் வாழ்வுக்கு என்று மாசம் நான்கு ரூபாய் சம்பாவனையும் கொடுப்பதாக வாக்களித்ததில் கோனாருக்கு மகிழ்ச்சி கங்குகரையில்லாமல் பிறந்தது. "பிள்ளையை எப்படியும் நாலெழுத்து வரும்படி செய்விக்க வேண்டும்" என காலில் விழுந்து கும்பிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தார். குழந்தையும் சோற்று மூட்டையுடன் புஸ்தகச் சுமையையும் தாங்கி பாளையங்கால் கரை மேலாகக் கல்வி யாத்திரை செய்துவந்தான். படிப்பு ஏழாவது வரை வந்தது.

பையனுக்கும் சாமியாருக்கும் திடீர் புயலாக லடாய் ஏற்பட்டு கிழவரின் நிதானத்தைக் குலைத்தது. இந்தக் காலமும் சாமியார் செய்த பிற மத பிரச்சாரத்தைப் பிரமாதமாகப் பொருட்படுத்தவில்லை. கிருஸ்துவின் பரித்தியாகம் இவன் மனசைச் சிறிது கவர்ந்தது என்றாலும் கிருஸ்து முனியின் தத்துவம் பூண்டிருந்தும், அமல் மிகுந்த சேவை அவனுக்கு அவரது தத்துவத்தின் மேல் வெறுப்பையே ஊட்டியது. மேலும் புண்ணைக்காட்டி பிச்சை வாங்குவதற்கும் கிருஸ்துவின் புண்கள் வழியாக அவர்களும் மோக்ஷ சாம்ராஜ்யத்தை நம்பும்படி தன் வயிற்றுப் பசியை உபயோகிப்பதற்கும் பிரமாத வித்தியாசம் ஒன்றுமில்லை எனவே இவன் நினைத்து வந்தான். அதனால் அவன் இந்த முயற்சிகளைச் சட்டை செய்யவில்லை. ஆனால் இது மட்டும் இந்த மனஸ்தாபத்தில் இல்லை. ஈராயிர வருஷங்களாக மதப்பிரச்சாரமும் செய்து பழுத்து முதிர்ந்துபோன ஒரு ஸ்தாபனத்தின் கோளாறுகள் அவனைத் திடீரென்று சந்தித்தன. ஒரு லட்சியமோ கொள்கையோ இல்லாதவர்களும், அல்லது லட்சியத்திலோ கொள்கையிலோ நம்பிக்கையில்லாதவர்களும் பிரம்மசரிய விரதத்தை அனுஷ்டிக்க முயலுவதும், அனுஷ்டிக்கும்படி கட்டாயப்படுத்துவதும் ரொம்ப அபாயகரமான விஷயம். தீயுடன் விளையாடுவதாகும். இது மன விகாரங்களில் புகுத்தும் சுழிப்புகள் அந்த மனிதனுக்கு ஆபத்தை விளைவிப்பதுடன் நின்றுவிடாமல் ஸ்தாபன பலத்திற்கே உலை வைத்துவிடுகின்றன.

     இசக்கிமுத்துக்கு ஏழாவது வகுப்பில் ஏற்பட்ட உபாத்தியாயர் அர்ச்.பெர்னாண்டஸ் சாமியார் விபரீத ஆசையைக் கொண்டவர். பையனுடைய அழகு அவருடைய நேர்மையற்ற காமவிகாரத்திற்கு இலக்காகியது. பையன் திடுக்கிட்டான். தலைமைச் சாமியாரிடம் ஓடித் தெரிவித்தும் நிவாரணமோ ஆறுதலோ கிடைக்க வழியில்லாமல் போக, சிறு குழந்தைத்தனத்தின் அனுபவ சாத்தியமற்ற முறைகளைக் கையாண்டு, பள்ளிக்கூடத்திலிருந்து விரட்டப்பட்டான்.

     தகப்பனுக்கும் மகனுக்கும், இருவரும் அன்னியோன்னியப் பரிவுகள் நடந்துகொள்ள வசதியளிக்கும் நிர்க்கதியான நிலைமையிலிருந்தும் மனம் ஒன்றாமல், அந்தஸ்து கொடுத்து வாங்கும் தூரத்தைக் குறைக்காமலே நடந்துவந்ததால், பள்ளிக்கு முழுக்குப்போட ஏற்பட்ட காரணத்தைக் கூற முடியவில்லை. மதம் மாறச் சொன்னார், முடியாது என்றதால் விரட்டப்பட்டதாக அறிவித்துவிட்டான். தெய்வமாகப் பாவித்து வந்த சாமியாரின் ஆசையைப் பூர்த்தி செய்துவிட்டால்தான் என்ன, எந்த மதத்து மோட்சமானால் என்ன என்றே கிழவருக்குப்பட்டது. மேலும் ஹிந்து தர்மம், தாழ்ந்த வகுப்புகள் 'பொட்டுக்கட்டி' தன் விசேஷ பரிவைக் காட்டிவரும் சில வகுப்பின் ஆசாரங்கள் மாமிச உணவை விலக்கி வைக்காதிருப்பதால், இவ்வகுப்புக்களிலிருந்து பிற மதங்களுக்குப் போகிறவர்களுக்கும் அவர்களுக்குமிடையில் தொடர்பு அவ்வளவாக அறுந்துவிடுவதில்லை. அதனால் கோனாருக்கு பையன் செய்த வேலை பிடிக்கவுமில்லை; புரியவுமில்லை. இருந்தாலும் அவனைக் கண்டிக்கவில்லை. வேறு பள்ளியில் சேர்க்க முயலவுமில்லை.

     இந்த நிலையிலே இசக்கிமுத்தின் மனவுலகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. அதாவது அவன் தன்னை அறிந்துகொண்டான். ஒரு நாள் ஏனோதானோ என்று வில்லுப்பாட்டின் ஆவேசத்திற்கு இணங்க அவன் கக்கிய வார்த்தைகள் இத்தனை நாட்களாக ஊமைக் கவிஞனாக அனுபவித்துவந்த இன்பங்களை எல்லாம் இசையில் கொட்டினான். சில சமயங்களில் பிரமிக்கும் இசைக்கனவுகளை எழுப்பியது. ஆனால் பல வார்த்தைப் படாடோ ப இடி முழக்கங்கள், கனவைச் சிதைக்கும் கரகரப்புகளுடன் பிறந்தனவென்றாலும் பொதுவாக, முறையாகத் தமிழ் படிப்பது என்ற சம்பிரதாயத்தால் ருசி கெட்டுப் போகாததினால் பாட்டில் உண்மையும் தெளிவும் தொனித்தது. ஆனால் புராதனச் செல்வங்களில், தொடர்பும் பரிச்சயமும் இல்லாததினால் நஞ்சுக்கொடியைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு பிறந்தவுடன் தெரு வழியாகக் கோஷமிட்டுக் கொண்டு ஓடும் குழந்தையின் அசாதாரணத் தன்மையைப் பெற்றிருந்தது. ஆனால் இசக்கிமுத்துவின் பாட்டு, இசக்கிமுத்தின் 'வெளிவராத ரகசியமாக' இருந்து வந்தது.

     இப்படியாக மனக்கனவுகளைப் பாடுவதும் கிறுக்குவதும் கிழிப்பதுமாகக் காலங்கழித்தான் இசக்கிமுத்து.

ரூபமற்ற, நாமமற்ற, அனாதியான, பொருளற்ற, பொருளுக்கு அப்பாற்பட்ட அந்த வஸ்து, அதாவது வஸ்து என்ற வரம்புக்கு மீறியதும், வரம்பே இடிந்ததுமான ஏதோ ஒன்று என்ற ஒன்றல்லாத, பலவும் அல்லாத அந்த 'அது' சிந்திக்க ஆரம்பித்தது; தன்னை உணர ஆரம்பித்தது; தன்னை உணர்ந்து தன்னையே உணரவும் அஞ்ச ஆரம்பித்தது. பூர்த்தியாகாத ஆசை வித்துக்கள் மாதிரி கொடுமையின் குரூரத்தின் தன்மைகள் தன் சித்த சாகரத்தின் அடியில் அமுங்கியும் குமிழிவிட்டு, பிரபஞ்சம் என்ற தன்னையே கண்டு அஞ்சியது. தன்னையே நோக்கியது. தானான மனிதர்கள், தன்னுள் ஆன மனிதர்கள், தன்னைக் கையெடுத்து வணங்கி தன்மீதே இலட்சியங்களைச் சுமத்தி, நன்மை நலம் மோட்சம் என்ற கோவில்களைக் கட்டுவது கண்டு கண்ணீர் விட்டது. அவர்கள் நம்புவது தான் அல்ல என்று அவர்களிடம் அறிவிக்க விரும்பியது, துடிதுடித்தது.
3

     கிருஷ்ணக் கோனார் அந்திம தசையென்னும் அஸ்தமனக் கிரணங்கள் தன்மீது விழுவதைக் கண்டுவிட்டார். அர்த்தமற்ற புதிராக இருந்துவரும் பெரிய மாறுதலின் காலம் அணுகுவதை உணர்ந்துவிட்டார். இனி எப்படியோ? இதுவரை நடந்து வந்த வாழ்வுப் பாதை பிறப்பு என்ற சித்த வான் வளையத்தைத் தொடும் அந்த மங்கிய எல்லையிலிருந்து அன்றுவரை ஏற்பட்ட மாற்றங்கள், கொந்தளிப்புக்கள், சுழல்கள் எல்லாவற்றையும் சமநோக்குடன் பார்க்கும். அப்பொழுது ஆட்டிய அதிர்ச்சிகள் அற்று நோக்கும் தன்மையைப் பெற்றார். இன்னும் ஒரு ஆசை மட்டும் பூர்த்தியாகவில்லை.

     அவனுக்குக் கலியாணத்தைச் செய்துவிட்டால் தன் கடமை பரிபூரணமாக நிறைவேறியதாகவே அவர் தீர்மானித்தார்.

     லெட்சுமி என்ற பெண் இசக்கிமுத்துக்கு உடலதிர்ச்சிகளில் இருக்கும் இன்பத்தைக் காட்ட அவ்வூர்ப் பெரியோர்களால் ஆசீர்வதிக்கப்பட்டாள். புதுக்குடித்தனம் என்னும் பதினெட்டாம் பெருக்கு களிபுரண்டு கொந்தளித்துச் சுழித்து ஓடியது. மனக்கனவுகள் என்ற தெப்பம் இசக்கிமுத்துக்கு நிலை தடுமாறி குதித்து முழுங்கிச் சென்றது. கனவுகள் புது வடிவம், நிஜ வடிவம் பெற்றன. அவன் பாட்டை எழுதுவதை நிறுத்திவிட்டான். நேரில் நிறைவுபெற்ற மனம் பாட்டில் துள்ளிப் பொங்கவில்லை. அவன் கனவுகள் நாத வடிவம் பெறாமல் நாள் மணிக்கணக்கில் நிஜ 'தரிசன'த்தில் ஒடுங்கியது.
4

     எல்லாம் தானாகவும், தன்னில் வேறாகவும், வேறு என்ற பேதமற்றும் இருக்கும் அது தன் தொழிலில், தன் நியதியில், தன் இயற்கைத் தன்மையில் சந்தேகம் கொண்டது. பயம் கொண்டது. தன் தொழிலைத் தானே நிறுத்த இயலாமல், தவித்தது. தனக்குத் தன் தொழில் தெரியவில்லை எனக் குமைந்தது. சிருஷ்டித் தொழில் கலையின் நியதியை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்பதைக் கண்டது. தான் நிலையாமல் தன் பூர்த்தியாகா ஆசைகள் தன் தொழிலில் விழுவது கண்டு தனக்குத்தான் பயிற்சியில்லை, கலையில்லை அதாவது சிருஷ்டித்தன்மைக்குத் தான் லாயக்கில்லை என நினைத்தது.

     வருஷம் முழுவதும் பதினெட்டாம் பெருக்காக இருக்க முடியுமா? வெவ்வேறு நிலையில் உள்ள உணர்ச்சி, பிரவாகம் போல ஒன்றையொன்று மோதி பொதுநிலையடையும்வரை கொந்தளிப்பும் சுழற்சியும் இருக்கும். நிலைமை சமப்பட்டவுடன் வேகம் குறையாது போனாலும் மேலுக்குத் தெரியாமல் இருக்கும். இசக்கிமுத்தின் மனத்துடிப்பு இந்த நிலையை அடைந்ததின் பயனாக, அதன் நிதானத்தைத் தப்பிதமாகக் கருதும்படி லெட்சுமிக்கு மனப்பண்பு இருந்ததால், அவனுக்குத் தப்பிதம் செய்துவிட்டாள். நிதானப் போக்கை அசட்டை என்று நினைத்ததின் விளைவாக சந்தர்ப்ப விசேஷத்திற்கிணங்க விபரீதம் விளைந்துவிட்டது. விளைந்ததும் இசக்கிமுத்துக்குத் தெரிந்தது.

     நாதப்பிசகு ஏற்படாமல் ஒலிக்கும்படி செய்துவந்த அவனது மன வீணையின் நரம்புகள் அறுந்து தொங்கும்படி உணர்ச்சி வாசித்து விளையாடிவிட்டன. உன்மத்தன் ஆனான். பூர்வஜன்மம் என்ற வசதி இருக்கிறதோ என்னவோ, மனித ஜீவனுக்கு உள்ள விசேஷ வசதிகளையும் சக்திகளையும் நம்மால் அறிய முடியாது.
இசக்கிமுத்து அவளை மன்னிக்கும் மனப்பண்பு படைத்திருந்தான்; நபும்சகத்தால் விளையும் சகிப்புத்தன்மையல்ல; பரிபூரண மன்னிப்பு. ஆனால் மனம் அறுந்து தொங்கியது. கொழுந்து விடாவிட்டாலும் கங்கு அவியவில்லை. சில சமயம் சித்தம் அளந்து கட்ட முடியாத விபரீத அளவுக்கு மனம் பேயுருக்கொண்டு குமுறியது. தன்னையே தின்று தணிந்தது.

     மனசின் குதியாட்டத்தைக் கண்டு அஞ்சிய இசக்கிமுத்து அதன் கடிவாளம் தன் கைக்குச் சிக்கும்படி பண்படுத்த லயக்குறைவு இல்லாததால் இசை எழுப்ப விரும்பினான். பாட்டு உண்மையில் துடிதுடிப்புடன் பொங்கியது. வார்ப்பில் பரிபூரண அழகு முன்போல் அனாயசமாக விழவில்லை. கற்பனையில் கைப்பு தட்டியது. கனவை ஏமாற்றம் ஏந்தி நின்றது.

     நிராகரித்தான்.

     கலைவாணியின் வழி சிருஷ்டியின் வழி என்பதை உணர்ந்து அறிந்தவன்; அறிந்து உணர முயன்றவன் அல்ல. மனப்பண்புதான் கவிதையின் மார்க்கம் எனக் கண்டான். மனிதனுடைய பரிபூரண லட்சியமான தெய்வக் கனவில் மனசை லயிக்கவிட்டால்தான் பாட்டில் பண்பு பிறக்கும் என நினைத்தான்.

     லட்சுமியை விட்டுப் புறப்பட்டான். சமூகத்தை மறந்து வெளிப்பட்டான்.

     மன லட்சியத்தின் பூத உருவமான ஹிமயத்தை நோக்கினான். நடந்தான்.
5

     அந்த அது மனித உருவம் கொண்டு, மனிதன் நினைக்கும் தான், தானல்ல என் மனிதனிடம் பறையடித்து அறிவித்து, தன் சுமையை இறங்கிக் கொள்ள விரும்பியது.

     மனித உருக்கொண்டது.

     தாடியும் மீசையும் நரைத்துப் பழுத்த கிழவனாராக உருவெடுத்தது.

     ஹிமயத்தில் காலடி வைத்தது.

     நடந்தது.

     ரூபத்திலே தெளிவு இருப்பதை உணர்ந்தது. தன்மீது சுமை இல்லையோ எனக்கூடச் சந்தேகித்தது. ஆனால் பொறுப்பை மறந்துவிடவில்லை. ஏனென்றால் அதனால் அதை மறக்க முடியவில்லை.

     நடந்தது...

     நடந்து வந்தது...

     இசக்கிமுத்தும் நடந்து வருகிறான். அவன் முகத்தை தாடியும் சிகையும் மறைத்தது. ஆனால் மனக்கொதிப்பின் புகை மண்டலம்போல் முகத்தைச் சுற்றிச் சிதறிப் பறந்தது.
6

     இருவரும் சந்தித்தனர்.

     அது அவனைச் சந்தித்தது;

     அவன் அதைச் சந்தித்தான்.

     "நான், நானில்லை" என்றது அது.

     "நான், நானில்லை" என்றான் அவன்.

     "யோகத்தில் அமருவோம்" என்றான் அவன்.

     இருவராக அமர்ந்தனர்; ஒருவராக இருந்தனர்.

     அது அவனில் தன்னைக் கண்டது.

     அவன் அதில் தன்னைக் கண்டான்.

சாமியாரும் குழந்தையும் சீடையும்

     "மனிதன் கடவுளைப் படைத்தான். அப்புறம் கடவுள் மனிதனை சிருஷ்டிக்க ஆரம்பித்தான்.

     "இருவரும் மாறிமாறிப் போட்டிபோட ஆரம்பித்தார்கள். இன்னும் போட்டி முடியவில்லை.

     "நேற்றுவரை பிந்திப் பிறந்த கடவுளுக்கு முந்திப் பிறந்த மனிதன் ஈடு கட்டிக் கொண்டு வந்தான்.

     "இதில் வெற்றி தோல்வி, பெரியவர் சின்னவர் என்று நிச்சயிப்பதற்கு எப்படி முடியும்?

     "நிச்சயிக்க என்ன இருக்கிறது?..."

     இப்படியாகப் பின்னிக்கொண்டே போனார் ஒரு சாமியார். எதிரிலே தாமிரவருணியின் புதுவெள்ளம் நுரைக் குளிர்ச்சியுடன் சுழன்று உருண்டது.

     அவர் உட்கார்ந்திருந்தது ஒரு படித்துறை. எதிரே அக்கரையில் பனைமரங்களால் புருவமிட்ட மாந்தோப்பு; அதற்கப்புறம் சிந்துபூந்துறை என்று சொல்வார்களே அந்த ஊர். இப்பொழுது பூ சிந்துவதற்கு அங்கு மரம் இருக்கிறது. அதைப் போல எண்ணக் குலைவையும் ஏமாற்றத்தையும் சிந்துவதற்கு சுமார் ஆயிரம் இதயங்கள் துடிக்கின்றன. துடிப்பு நின்றவுடன் வைத்து எரிக்க அதோ சுடுகாடு இருக்கிறது. இப்பொழுதும், இந்த நிமிஷத்தில் கூடத்தான் அது புகைந்து கொண்டிருக்கிறது. தோல்வியின், ஏமாற்றத்தின் வாகனங்களை வைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பது பலவீனந்தானே. பலவீனத்தை வைத்துக்கொண்டு நாலு காசு சம்பாதிக்கப் பிச்சைக்காரனுக்கு முடியும். மனுஷனால் வாழ முடியுமா? அதனால் தான் இந்தச் சுடுகாடு என்ற ரண சிகிச்சை டாக்டர், வாழ்க்கை என்ற நோயாளிக்கு மிக அவசியம்.

     அதை இந்தச் சாமியார் அறிந்து கொண்டிருந்தார். அதனால்தான், இவருக்கு விரக்தி ஏற்பட்டது. இவருக்கு இடது பக்கத்தில் சுலோசன முதலியார் பாலம். கட்டபொம்மு சண்டையின் போது சமரசம் பேச முயன்ற துபாஷ் அவர். அவர்தான் அதைக் கட்டியது. திருநெல்வேலிக்காரர்களுக்கு அதில் அபாரப் பெருமை. முட்டையும் பதநீரும் விட்டு அரைத்த காரையில் கட்டியதாம். அதில் ஒரு தனிப் பெருமை.

     இதற்கு முன் எப்போதோ ஒரு முறை இது போல வந்த வெள்ளம் அடித்துக் கொண்டு வந்த வைக்கோல் போர், முன் பல்லைத் தட்டிய மாதிரி இரண்டு மூன்று கணவாய்களைப் பெயர்த்துக் கொண்டு போய் விட்டது. இப்பொழுது, மறுபடியும் கட்டி விட்டார்கள். பொய்ப்பல் கட்டிக் கொண்டால் எப்படியும் கிழவன் தானே; அப்படித்தான் அதுவும். வயசு முதிர்ந்த நாகரிகம் ஒன்று தன்னை வலுவுள்ளது மாதிரி காட்டிக் கொள்வது போன்றிருந்தது. அதற்கும் சற்று அப்பால் பொதிகை. குண்டுக்கல் மாதிரி ஒரு குன்று; தெத்துக்குத்தான வானத்தின் சிவப்பு கோரச் சிரிப்பைத் தாங்குவது போலப் படுத்திருந்தது குன்றின் தொடர்.

     சாமியாருக்குப் பின்புறத்தில் சுப்பிரமணியன் கோவில். அதாவது வாலிபம், வலிமை, அழகு, நம்பிக்கை இவற்றையெல்லாம் திரட்டி வைத்த ஒரு கல் சிலை இருக்கும் கட்டிடம். அதற்குப் பின்னால் ஒரு பேராய்ச்சி கோவில். மேற்குத் திசையின் கோரச் சிரிப்புக்கு எதிர்ச்சிரிப்பு காட்டும் கோர வடிவம். இருட்டில் மினுக்கும் கோவில். வாலிபமும் நம்பிக்கையும் அந்தக் கோரச் சிரிப்பின் தயவில் நிற்பது போல, சாமியாரின் முதுகுப் புறத்திலிருந்தன.

     அவர் வெறுத்து விட்டவை; ஆனால், மனிதனால் வெறுக்க முடியாதவை. அதனால்தான், அவரது முதுகுப் புறமானது அவற்றிற்கு அப்பால் விலகிச் செல்ல முடியாது தவித்தது.

 சாமியாரின் வலது பக்கத்தில்...

     சாமியாரின் வலது பக்கத்தில் ஒரு சின்னக் குழந்தை. நான்கு வயசுக் குழந்தை. பாவாடை முந்தானையில் சீடையை மூட்டை கட்டிக் கொண்டு, படித்துறையில் உட்கார்ந்து காலைத் தண்ணீரில் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது. சின்னக் கால் காப்புகள் தண்ணீரிலிரிந்து வெளிவரும் பொழுது, ஓய்ந்து போன சூரிய கிரணம் அதன் மேல் கண் சிமிட்டும். அடுத்த நிமிஷம், கிரணத்திற்கு ஏமாற்றம். குழந்தையின் கால்கள் தண்ணீருக்குள் சென்று விடும். சூரியனாக இருந்தால் என்ன? குழந்தையின் பாதத் தூளிக்குத் தவம் கிடந்துதான் ஆக வேண்டும்.

     குழந்தை சீடையை மென்று கொண்டு சாமியாரைப் பார்க்கிறது.

     சாமியார் வெள்ளத்தைப் பார்க்கிறார். வெள்ளம் இருவரையும் கவனிக்கவில்லை.

     "மனிதன் நல்லவன் தான்; தான் உண்டாக்கின கடவுளிடம் அறிவை ஒப்படைத்திருந்தால் புத்திசாலியாக வாழ்ந்திருக்க முடியும். அப்பொழுது, அது தன்னிடமிருந்ததாக அவனுக்குத் தெரியாது... இப்பொழுது, அறிவாளியாக அல்லல்படுகிறான்.

     "சிருஷ்டித் தொழிலை நடத்துகிறவனுக்கு அறிவு அவசியம் என்பது அப்போது அவனுக்குத் தெரியாது. இப்பொழுது அவஸ்தைப்படுகிறான். அதற்காக அவனைக் குற்றம் சொல்ல முடியுமா?

     "மனிதன் தன் திறமையை அறிந்து கொள்ளாமல் செய்த பிசகுக்குக் கடவுள் என்று பெயர். மனிதனுக்கு உண்டாக்கத்தான் தெரியும். அழிக்கத் தெரியாது. அழியும் வரை காத்திருப்பதுதான் அவன் செய்யக்கூடியது.

     "அதனால் தான் காத்திருக்கிறான். ஆனால், அவனுக்குத் துரு துருத்த கைகள். அதனால்தான் பிசகுகளின் உற்பத்திக்கு கணக்கு வரம்பை மீறுகிறது..." என்றார் சாமியார்.

     துறையில் தலை நிமிர்ந்து வந்த நாணல் புல் ஒன்று சுழலுக்குள் மறைந்து விட்டது. குழந்தையும் 'ஆமாம்' என்பது போல் தலையை அசைத்துக் கொண்டு ஒரு சீடையை வாயில் போட்டுக் கொண்டு கடுக்கென்று கடித்தது.

     அந்தப் படித்துறையில் கடுக்கென்ற அந்த சப்தத்தைக் கேட்க வேறு யாரும் இல்லை.

தியாகமூர்த்தி

     செங்காணி என்ற திவ்வியப் பிரதேசத்தைப் பற்றி, நீங்கள் எந்தப் பூகோள சாஸ்திரத்தையோ, படங்களையோ, காருண்ய கவர்ண்மெண்டார் மனமுவந்து அருளிய நன்மைகளில் ஒன்றாகிய கெஜட்டுகளையோ திருப்பித் திருப்பிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் எனது வார்த்தையையும் அந்தப் பெயர் தெரியாத புலவர் இசைத்த,
     தருவைக்கு மேற்கே செங்காணி வெள்ளம்
     தானே வந்தால் இங்கு விடுவானே தோணி
என்ற மேற்கோள் வரிகளையும் நம்புவதாக இருந்தால்தானே மேலே சொல்ல முடியும்.

     தானே எப்பொழுதாவது வெள்ளம் வந்தால் தோணி விடக்கூடிய அந்த ஆற்றிற்கு ஒரு தாம்போதி, மேற்கே இருக்கும் செங்காணியையும் கிழக்குக் கரையில் இருக்கும் தருவைத் திருப்பதியையும் பிணித்து நின்றது.

     தாம்போதியைக் கடந்ததும் சாலையின் பக்கத்தில் ஒரு புளியமரம். அதன் பக்கத்தில் இருந்த இரும்புப் பட்டடை வீடு என்ற முறையில் சின்னாபின்னமாக நின்ற ஒரு குடிசையில் இருபது வருஷங்களுக்கு முன் ராமசாமிப் பத்தரின் திருஅவதாரம் இனிது நடந்தேறியது.

     தகப்பனாரைப் போல் ஓட்டைக் கட்டை வண்டிக்குப் பட்டை போடுவது, பஞ்சத்தில் அடிபட்ட மாடுகளுக்கு லாடம் அடிப்பது, பொழுது போக்காக ஆணிகளைச் செய்து குவிப்பது என்ற கொல்ல சமூகத்தின் வைதிக நடவடிக்கைகளுக்கும், காலம் இருக்கிற தர்பாரில், தனது அபூர்வமான புத்தி விசாலத்திற்கும் ஒத்துவராது என்று கண்ட ராமசாமிப் பத்தர், தலைமுறை தலைமுறையாகத் தம் தகப்பனார் வரையில் வந்த செங்காணி மான்மியத்தை முடித்துக் கொண்டு திருநெல்வேலிக்குச் சென்று குடியேறினார்.

     முதலில் 'ஸைக்கிள்' 'கடிகாரம்' ரிப்பேரில் ஆரம்பித்து, வரவர 'மோட்டார் கண்டக்டர்', 'டிரைவர்', பிறகு 'மெக்கானிக்' என்ற பருவங்களைக் கடந்து, தமக்குத்தாமே சொந்தமாக வைத்துக் கொண்ட மோட்டார் என்ஜினீயர் என்ற பட்டத்துடன் 'ஒர்க் ஷாப்' என்ற பெயருடைய ஒரு கொல்லப் பட்டடையை ஸ்தாபித்தார்.

     இந்தப் பத்து வருஷங்களில் பத்தரைக் கையில் பிடிக்க முடியாது. கையில் பணம் ஓட்டமிருந்தால் யாரும் அப்படித்தான். ஏறாத தாசி வீடு இல்லை; உடலில் வாங்காத வியாதி இல்லை.

     இந்தக் காலத்தில்தான் பையன் கெட்டுப் போய்விடுவான் என்று எண்ணி அவருடைய உறவினர்கள் கல்யாணமும் செய்து வைத்தார்கள். அந்த அம்மாணி மூன்று வருஷத்தில் இரண்டு பெண் குழந்தைகளைப் பத்தருக்கு ஒரு பொறுப்பாக வைத்துவிட்டுக் காலமானாள்.

     உறவினர்கள், ராமசாமிப் பத்தரின் குடும்ப வாழ்க்கையில் கவலைப்பட ஆரம்பிக்கு முன்னமே 'ஒர்க் ஷாப்' அவர்கள் தடுத்து விடலாம் என நம்பியிருந்த அந்த நிலைமைக்கு வந்துவிட்டது. எங்கே பார்த்தாலும் கடன். வேலைக்காரர் தொல்லை. வேலையும் அவர் குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியாததனால் மற்ற கம்பெனிகளைத் தேடிவிட்டன.

     இந்த மாதிரி நிலைமை விரைவில் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையிலேயே ஒரு பத்து வருஷம் கழிந்தது.

     மனிதன் ஒரு நிலைமை வரையில்தான் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும். தலைக்கு மேல் வெள்ளம் சென்றால்?

     ஒரு சுப தினத்தில் 'ஒர்க் ஷாப்' கதவடைக்கப்பட்டது. அடைத்ததனால் அவருடயை நிலைமை மேலோங்கி விடவில்லை. 'செட்டி இருந்தும் கெடுத்தான், இறந்தும் கெடுத்தான்' என்ற கதைதான்.

     கொஞ்சநாள், தம் வயசு வந்த பெண்களின் கதியை நோக்கிக் கண்ணீர் விட்டுக்கொண்டு, ஊரைச்சுற்றி வந்தார். கடன் தொல்லை, பெண்களின் பொறுப்பு, எல்லாம் சேர்ந்து அவரை நாற்பது வயசிலேயே ஊக்கங்குன்றிய கிழவனாக்கிவிட்டன. உடல் வன்மையாவது இருக்கிறதா? பழைய சல்லாப காலங்களில் சேகரித்த 'முதல்' வீணாகப் போகவில்லை. மருந்து என்ற சிறிய தடையுத்தரவிற்குப் பயந்து இத்தனை நாட்கள் பதுங்கியிருந்த வியாதிகள் மீண்டும் உறவாட ஆரம்பித்தன.

 'இண்டோ -யூரோப்பியன் மோட்டார் மெக்கானிகல் ஒர்க்ஸ்' முதலாளியான ராமானுஜலு நாயுடு அவருக்கு ஒரு பிட்டர் வேலை கொடுத்தபொழுது, 'அன்ன தாதா' என்று அவரை மனமாரப் புகழாமல் இருக்க முடியுமா? நீரும் நானும் இந்த மாதிரி இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வேலையில்லாமல் திண்டாடியிருந்தால் அம்மாதிரித்தான் புகழ்வோம்.

     மாசம் 20 ரூபாய் சம்பளம். காலை 6 முதல் இரவு எப்பொழுது பட்டடை அடைக்கப்படுகிறதோ அவ்வளவு நேரமும் வேலை.

     இம்மாதிரி ஒரு வருஷம் கொஞ்ச நாட்கள் சற்றுக் கவலையற்ற தரித்திரம். பொருளாதார மந்தம் என்று நீட்டி முழக்கிச் சாய்மான நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு அடித்து விளாசுகிறார்களே, அதுவும் வந்தது. அதைப்பற்றிய தத்துவங்கள், காரணங்கள் எல்லாம் உமக்கும் எனக்கும் பத்தி பத்தியாக நுணுக்கமாக எழுதத் தெரியும்; பேசவும் தெரியும். ராமானுஜலு நாயுடுவுக்குத் தெரிந்ததுபோல் நமக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.

     ராமானுஜலு நாயுடு நல்ல குணமுள்ளவர்தாம். சில சமயங்களில் ஐந்து பத்து முன்பின் யோசியாமல் கொடுத்து உதவுகிறவர்தாம். ஆனால் பணம் சேர்ப்பதற்குத்தான் அவர் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தாரே ஒழிய, தொழிலாளிகளுக்குத் தர்மம் செய்து புண்ணியம் சம்பாதிக்க வரவில்லை.

     அவருடைய சிக்கனக் கத்தி விழுந்தது. பத்துப் பேர் வெளியே போக வேண்டியிருந்தது. அதில் ராமசாமிப் பத்தரும் ஒருவர். கெஞ்சினார்கள்; கூத்தாடினார்கள். பத்து ரூபாய் - பாதி சம்பளம் - கொடுத்தால் கூடப் போதும் என்றார்கள். ராமானுஜலு நாயுடு சத்திரம் கட்ட வரவில்லையே!

     நல்ல பசுமாடு இருக்கிறது. வேளைக்கு இரண்டு படி பால் கறக்கிறது. அதற்குப் பருத்தி விதை, தீனி என்ன? ராஜயோகந்தான். கண்ணும் கருத்துமாகத்தான் கவனிக்கிறோம். மாடு கிழடாகி, வறண்டு போய்விட்டால் வைத்துக் கொண்டு கும்பிடவா செய்கிறோம்? தோலின் விலைக்காவது தள்ளிவிடவில்லையா? அதில் ராமானுஜலு நாயுடு செய்ததில் என்ன குற்றம்? அது அப்படித்தான். அது நியாயந்தான். இப்பொழுது அதைத் தப்பு என்று சொல்லுகிறவன் முட்டாள், பைத்தியக்காரன்.
*****

     ராமசாமிப் பத்தருக்குச் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வரும்போது எதுவும் தோன்றவில்லை. நாலு நாள் சம்பளம் எத்தனை நாட்களுக்குப் போதும்? பிறகு என்ன செய்வது? வேறு எந்தக் கம்பெனியில் எடுப்பார்கள்? எடுத்தாலும் இந்தக் கதிதானே! உலகமே ஓர் இதயமற்ற திருக்கூட்டம் என்று பட்டது. நெற்றிக்கண் இருந்தால் எல்லாரையும் எரித்துச் சாம்பலாக்கியிருப்பார். இல்லாததனால் நேராகச் சாராயக் கடைக்குப் போனார்.

     இனி என்ன செய்வது?

     இனி என்னதான் செய்வது? எல்லாவற்றையும் தொலைத்துவிட்டுக் காவியைக் கட்டிக் கொண்டு பிச்சை எடுக்க வேண்டியதுதான். சீ! பிச்சையா! அதைப் போல கோழைத்தனம் உண்டா? நம்மைத் திருடுகிற இந்தப் பயல்களைக் கொள்ளையடித்தால் எந்தத் தர்மசாஸ்திரம் ஓட்டையாகப் போகிறது?

     'இரவு பத்துப் பதினொரு மணிக்கு ராமானுஜலு நாயுடு தனியாகத் தான் கணக்குப் பார்த்துக் கொண்டு இருப்பார். ஒரு கை பார்த்தால் தான் என்ன?'

     வீட்டிற்கு வந்து மிஞ்சி இருக்கிற சில்லறையைப் பெண்களிடம் கொடுத்தார். கொடுத்தது, சாப்பிட்டது எல்லாம் மெஷின் மாதிரி. மனசு அதில் லயித்துவிட்டது.

     "என்ன அப்பா, இப்படி இருக்கே?" என்றதற்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை.

   திடீரென்று இருவரையும் கட்டிச் சேர்த்து முகத்தில் மாறி மாறி முத்தமிட்டார். ஹிந்து சமுதாயத்தில் வயது வந்த பெண்களை முத்தமிடத் தந்தைக்கு உரிமையே இல்லை. இருவரும் திடுக்கிட்டார்கள். குடித்துவிட்டாரோ என்ற சந்தேகம். பயந்து நடுங்கினார்கள்.

     "நமக்கு நல்ல காலம் வந்துவிட்டது. நாயுடு எனக்கு ஐம்பது ரூபாயில் பட்டணத்தில் வேலை பார்த்துக் கொடுத்தார். வழிச்செலவிற்குப் பணம் ராத்திரி தருகிறேன் வா என்றிருக்கிறார்" என்று சொல்லிவிட்டு வெளியே வந்து தமது தீர்மானத்தை நிறைவேற்றப் புறப்பட்டார்.

     எதிர்பார்த்தபடி நாயுடு தனியாகத்தான் இருந்தார்.

     "வா ராமசாமி, நான் என்ன செய்யட்டும், நீதான் சொல். நீ இங்கே வருவதில் பிரயோஜனமில்லை" என்றார் நாயுடு.

     "எனக்கு நீங்கள் கொடுத்தது பத்தாது" என்றார் ராமசாமி. குரல் வித்தியாசமாக இருந்தது.

     குடித்துவிட்டு வந்திருக்கிறானோ என்று நாயுடு சந்தேகித்து, "நீ நாளைக்கு வா" என்றார்.

     "நாளைக்கா! பார் உன்னை என்ன செய்கிறேன். என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டாயே, திருட்டு ராஸ்கல்" என்று அவர்மேல் பாய்ந்து மேஜையின் மேல் இருந்த நோட்டுக்களில் கையை வைத்தார்.

     நாயுடு மட்டும் தனியாக இருந்தது உண்மைதான். அதற்காக உலகமே நடமாட்டமற்றுப் போய்விடுமா? ராமசாமி வெகு லேசாகப் பிடிபட்டார்.

     நாயுடுவிற்கு அசாத்தியக் கோபம். "உண்ட வீட்டில் கெண்டி தூக்கிய பயலை விடுகிறேனா பார்" என்றார்.

     விவரிப்பானேன்?

     பலவந்தத் திருட்டுக் கேஸாகியது. ஆறுமாசக் கடுங்காவல்.

     பத்தர் பாடு கவலையற்ற சாப்பாடு. எந்தத் தொழிலாளர் சங்கம் திருட்டுத் தொழிலாளியின் குடும்பத்திற்கு இந்தமாதிரி உதவி செய்ய முடியும்? நியாயமான உலகமல்லவா?

     பெண்களின் நிலைமையைப் பற்றி எழுதக் கூசுகிறது.

     ஜன்மாந்திர விதி என்ற ஒரு மகத்தான காரணத்தைக் கண்டுபிடித்த ஹிந்து சமுதாயத்தில் இது இயற்கைதானே?

நிர்விகற்ப சமாதி

     ஸ்ரீமான் உலகநாத பிள்ளை பரம வேதாந்தி. தம்முடைய பரம்பரைத் தன்மைக்கு மாறாக சைவ சித்தாந்தத் தத்துவங்களை ஒதுக்கி, மடத்துச் சைவம், ஏகான்மவாதம் என்று ஒதுக்கிய அத்வைதத்துக்குள் தம்மை இழந்தார். ஊர்க் குருக்களையாவுக்கு அவரைக் கண்டால் பிடிக்காது. காரணம் அவரது ஏகான்மவாதம் அல்ல. பணம் இன்மை.

     கிராமத்துத் தபாலாபீஸில் போஸ்ட் மாஸ்டராக உத்தியோகம் பார்ப்பதில் உள்ள சங்கடங்களும் சௌகரியங்களும் பல. எந்நேரத்துக்கு வந்தாலும் ஆபீஸ் மூடிவிட்டது என்று சொல்லி தபால் வில்லைகளை விற்பதற்கு மறுக்க முடியாது. மாதத்தில் இருபத்தியொன்பது நாளும் தபால்தான் கிடையாதே என்று மத்தியானம் இரண்டு மணி சுமாருக்கு வெளியே நடந்துவிட முடியாது. வெற்றுப் பையை அரக்கு முத்திரை வைத்து ஒட்டி, 'ரன்னர்' எப்போது வந்து தொலைவான் என்று காத்திருக்க வேண்டும். அவனிடம் காலிப் பையைக் கொடுத்துவிட்டு, மற்றொரு காலிப் பையை வாங்கிக் கொள்ள வேண்டும்.

     நிற்க. எப்போதோ ஏதோவென்று தபால் பெட்டியில் வந்துவிழும் காகிதங்களை குருக்களையாவுக்கு வாசித்துக்காட்ட வேண்டும். குருக்களையாவுக்கு கடுதாசி வாசிக்கும் பழக்கம், பட்டணத்துக்காரரின் பேப்பர் படிக்கும் தன்மையை ஒத்திருந்தது என்று சொல்லவேண்டும். காந்திஜி பட்டினி கிடக்கிறார் என்றால் ஊரே அல்லோலகல்லோலப்படும்; பத்திரிகையும் மகாலிங்கய்யர் ஓட்டல் இட்டிலி மாதிரி விற்பனையாகும். ஆனால், அதற்காக ஊர்க்காரர்கள் எல்லாம் பட்டினி கிடந்து உயிரை விட்டுவிடுவார்கள் என்பது அர்த்தமா? அப்படி ஒன்றும் ஆபத்து நேர்ந்துவிடாது. இந்தத் தமிழ்நாட்டிலே, சட்டத்தின் பேரிலும் ஒழுங்கின் அடிப்படையிலும் பிரிட்டிஷார் 150 வருஷங்களாகக் கட்டிவைத்த ஏகாதிபத்தியக் கோயில் தமிழ் நாட்டாரின் ஆவேசத்தினால் ஆட்டமெடுத்துவிடாது. திலகர் கட்டத்தில் கூடி நீண்ட பேருரைகள் செய்வோம்; நீண்ட அறிக்கைகள் வெளியிடுவோம்; கோழைத்தனத்துக்கு அஹிம்சைப் போர்வை போர்த்திக் கொள்வோம்; கருத்து வேற்றுமைகளை நயமாக சுசிபிப்போம்; ஆவேசம் காட்டிய 'ஒரு சிலர்' கொலை, ஆபத்தில்லையெனவும், சௌகரியம் உண்டு எனவும் பொழிந்து பாராட்டுவோம்; தனிப்பட்ட முறையில் "இந்தப் பசங்களே இப்படித்தான் சார்" என்று சொல்லுவோம்; இதற்கெல்லாம் பேப்பர் அவசியம்! மேலும் ஹோம் மாத்திரைக்கு விலாசம் தெரிந்துகொள்ள பேப்பர் ரொம்ப முக்கியம். இதே மாதிரிதான் குருக்களையாவுக்கு வேற்றாரின் கடுதாசிகளும் கார்டுகளும்.

     உலகநாத பிள்ளைக்கு சோம்பல் ஜாஸ்தி; அதனால்தான் கடுதாசி படிக்கும் வழக்கம் வேப்பங்காய்.

     குருக்களையா வந்துவிட்டார் என்றார் ஐயாவுக்கு சிம்ம சொப்பனந்தான்.

     வரும்போதே, "என்னவே, அந்த மேலத்தெரு கொசப் பய, பணத்துக்கு எழுதினானே, பதில் வந்ததா?" என்று கேட்டுக் கொண்டுதான் நடைப் படியை மிதிப்பார். 'மேலத் தெரு கொசப்பயல்' என்று சூட்சுமமாகக் குறிப்பிடுவது சுப்பையர் என்ற முக்காணிப் பிராமணனைத்தான்.

     தென்னாட்டில், திருச்செந்தூர் பிராமணர்கள் முன்குடுமி வைத்திருப்பார்கள்; குயத்தொழிலில் ஈடுபட்டுள்ள வகுப்பினரும் முன் குடுமி வைத்திருப்பார்கள். இதனால்தான் இந்த ஏச்சு.

     நிற்க, ஸ்மார்த்தர்கள் யாவரும் ஏகான்மவாதிகள்; ஆகையால் அவர்களை வைவது சங்கர சித்தாந்தத்தை நோக்கி எய்யும் பாசுபதாஸ்திரம் என்பது குருக்களையாவின் அந்தரங்க நம்பிக்கை. இம்மாதிரி சொல்வதால் இவரை சைவ சித்தாந்த பவுண்டுக்குள் அடைத்துவிடலாம் என்பது அதற்கு அடுத்தபடியான நம்பிக்கை.

     உலகநாத பிள்ளைக்கு இது தைக்காது; ஏனென்றால், சுப்பையரிடம் ஏதோ பாக்கி தண்ட வேண்டும் என, சென்ற பத்து வருஷங்களாக குருக்களையா சொல்லிவரும் புகார், மனசை அந்தத் திசையிலேயே திருப்பிவிடும்.

     சுப்பையர் ஏன் பணத்துக்கு கடிதம் எழுத வேண்டும்? அதற்கு இதுவரை பதில் ஏன் வராதிருக்க வேண்டும் என்பதைப் பற்றி உலகநாத பிள்ளை சிந்தித்தது கிடையாது. சிந்திக்கும்படி மனம் தூண்டியதும் கிடையாது. வேலாயுதத் தேவரின் தாயார் மருதி, கொளும்பில் உள்ள தன் பேரனுக்கு முக்காலணா கார்டில் மகாபாரதத்தில் ஒரு சர்க்கத்தையே பெயர்த்து எழுதுகிற மாதிரி, ஒரு மாத விவரங்களை எழுதுவதற்கு பிள்ளையவர்கள் வீட்டு நிழலை அண்டி நிற்பதும் அதை எழுதி முடிப்பதை ஹடயோக ஸித்தியாக நினைத்து பெருமைப்படுவதுடன் மறந்துவிடுவதும் பிள்ளையவர்கள் குணம்.

அதேமாதிரிதான் வேலாயுதத் தேவரின் எதிர்வீட்டு பண்ணையாரான தலையாரித் தேவரின் தேவைக்கும் ஊரில் உள்ள கேட்லாக்குகளை எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து, சாம்பிள் காலண்டர் இனாம் என்று இடங்களுக்கெல்லாம் காலணா கார்ட் காலத்திலிருந்து முக்காலணா கார்ட் சகாப்தம் வரை எழுதித் தீர்த்துக் கொண்டிருக்கும் வைபவத்துக்கு உலகநாத பிள்ளையின் ஒடிந்துபோன இங்கிலீஷ் அத்யாவசியம். பூர்வ ஜென்மாந்திர வாசனைபோல் எங்கே உள்ளூர ஒட்டிக்கொண்டிருக்கும் ஷெப்பர்ட் இலக்கண பாஷைப் பிரயோகத்தை அனுசரிப்பதாக நினைத்து ரிலீப்நிப் பேனா வைத்து வாட்ட சாட்டமாக உட்கார்ந்து எழுதி, தபாலை எடுத்துவந்து பையில் போட்டு, அரக்கு முத்திரைவைத்து ஊர்வழி அனுப்புவது உலகநாத பிள்ளையின் கடமை. பிறகு ஒரு வாரமோ அல்லது பத்து நாளோ கழித்து ரன்னர் மத்யானம் இரண்டு மணிக்குக் கொண்டுவரும் பட்டணத்து கடுதாசி வைபவங்களைக் கொண்டு போய் தேவரவர்கள் சன்னிதானத்தில் காலட்சேபம் செய்ய வேண்டும். இங்கிலீஷ் வருஷ முடியும் கட்டம் வந்துவிட்டால் அதாவது டிஸம்பர் மாதத்தில் உலகநாத பிள்ளையின் 'இலக்கிய சேவைக்கு' ரொம்ப கிராக்கி உண்டு. பண்ணைத் தேவர் வாங்கின ரவிவர்மாப் படம் போட்டு வெளியான காலண்டர் நன்றாக இருந்துவிட்டால் கம்பனிக்கு இன்னும் சில கடிதங்கள் எழுத வேண்டியேற்படும். ஆனால் அவற்றிற்கு இந்தப் பத்து வருஷங்களாக பதில் வராத காரணம் உலகநாத பிள்ளைக்குப் புரியவில்லை. ஏக காலத்தில் பல விலாசத்தில் ஒரே கையெழுத்தில் இலவச காலண்டர்களுக்கும் சாம்பிள்களுக்கும் கடிதம் போனால் கம்பனிக்காரன் சந்தேகப்படக்கூடுமே என்பதை உலகநாத பிள்ளை அறிவார். அவ்வாறு அறிந்ததினால்தான் ஒவ்வொரு கடிதத்தின் கீழும், 'கடிதம் எழுதுகிறவருக்குக் காலண்டர் தேவை இல்லை. விலாசதாரர்களுக்கு இங்கிலீஷ் தெரியாததினாலும் தாம் ஒருவர் மட்டுமே அந்த பாஷையை அறிந்தவரானதினாலும், அவர்களுக்காக கடிதம் எழுத வேண்டியிருக்கிறது' என்பதை ஸ்பஷ்டமாக குறிப்பிடுவார். அப்படி எழுதியும் அந்தக் கம்பனிக்காரர்கள் நம்பாத காரணம் அவருக்குப் புரியவில்லை. ஆனாலும் பண்ணையாருக்கு தவிர வேறு யாருக்கும் அச்சடித்த படம் எதுவும் வந்தது கிடையாது.

     இதிலே கொஞ்ச நாள் உலகநாத பிள்ளை பேரில் சந்தேகம் ஜனித்து, அவர் தபால் பைக்குள் கடிதங்களைப் போட்டு முத்திரையிடும் வரை ஒரு கோஷ்டி அவரைக் கண்காணித்தது. கடிதத்தை அவர் கிழித்தெறிந்துவிட்டு பண்ணையாருக்குப் போட்டியாக வேறு யாரும் ஏற்பட்டு விடாதபடி பார்த்துக் கொள்ளுகிறாரோ என்ற சந்தேகம் அர்த்தமற்ற சந்தேகமாயிற்று. அதன் பிறகுதான் பண்ணைத் தேவர் அதிர்ஷ்டசாலி என்ற நம்பிக்கை ஊர் ஜனங்களிடையே பலப்பட்டது. அவர் எடுத்த காரியம் நிச்சயமாகக் கைகூடும் என்று ஊர் ஜனங்கள் நினைப்பதற்கு இந்தக் காலண்டர் விவகாரமே மிகுந்த அனுசரணையாக இருந்தது. இதன் விளைவாக விதைப்பதானாலும், வீடு கட்டுவதானாலும் தேவரின் கைராசி நாடாத ஆள் கிடையாது.

     பண்ணைத் தேவர் பண்ணைத் தேவரல்லவா; இந்த விவகாரங்களில் எல்லாம் ஜனங்களின் ஆசைக்கு சம்மதித்து இடம் கொடுப்பது, தமது அந்தஸ்துக்கு குறைவு என்று நினைத்தார். உலகநாத பிள்ளையின் கைராசி என்றும் கடிதம் எழுதும் லக்னப் பொருத்தமே அதற்குக் காரணம் என்றும் சொல்லித் தட்டிக் கழித்துப் பார்த்தார். நம்பிக்கையும் வெறுப்பும் கொடுக்கல் வாங்கல் விவகாரமா? நினைத்தால் நினைத்த நேரத்தில் மாறக் கூடியதா?

     உலகநாத பிள்ளை இவ்வளவு செய்கிறாரே இத்தனை வருஷ காலங்களில் தமக்கு என்று சொந்தமாக ஒரு காலணா செலவழித்து கார்ட் எழுதியது கிடையாது. இப்போது முக்காலணா கார்ட் யுகத்தின் போது கடிதம் எழுதிவிடப் போகிறாரா?

     குருக்களையாவின் சேர்க்கையினால் அவருக்கு ஊர் விவகாரம் முழுவதும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதுதான் அவருக்குத் தெரியாது. ஏன், சொல்லப்போனால் அவருடைய சொந்த வீட்டு விவகாரமே தெரியாது.

     சர்க்கார் கொடுக்கும் சம்பளம் ஜீவனத்துக்கு போதுமா? அதற்குள் ஜீவனம் நடத்த முடியுமா? என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது. எல்லாம் மாயை; உள்ளூர நிற்கும் ஆத்மா மாசுபடவில்லை. தான் வேறு இந்த மாயை வேறு. தான் இந்தப் பிரபஞ்சத்தை ஆட்டிவைக்கும் சக்தியின் ஒரு அம்சம் என்று திடமாக நம்பியிருந்தார். ஏனென்றால், அவரது ஆத்ம விசாரத்தை சோதனை போட்டுப் பார்க்க இதுவரை தெய்வத்துக்கோ மனுஷனுக்கோ அவகாசம் கிடைத்ததில்லை. மனுஷ வர்க்கம் முழுவதுமே தன்னைப் படைத்தவனுடைய தன்மையை ஸ்புடம் போட்டுப் பார்ப்பதுபோல தவறுக்கு மேல் தவறு செய்துகொண்டிருந்தும் அவர்களைப் பொருட்படுத்தாது நின்ற கடவுள், ஏதோ எப்போதோ ஒரு சங்கரர் சொன்னதை உலகநாத பிள்ளை வாஸ்தவமாக நம்புகிறாரா? இல்லையானால் சோதிக்கவா மூட்டை கட்டிக்கொண்டு வரப்போகிறார்?

 கடவுள் தமது நம்பிக்கையை பரிட்சை பண்ணி சுமார் முப்பத்தி ஐந்து சதவிகிதமாவது பாஸ் மார்க்கெடுக்க வரவேண்டும் எனவோ அல்லது வருவார் எனவோ எதிர்பார்த்தது கிடையாது.

     வராமலிருக்க வேண்டுமே என அவர் எதிர்பார்ப்பது எல்லாம் இரண்டு பேரைத்தான். ஒன்று ரன்னர்; இரண்டாவது குருக்களையா. ரன்னரைக்கூட சமாளித்துவிடலாம்; குருக்களையாவை சமாளிக்கவே முடியாது.

     அன்று நால்வர் ஏககாலத்தில் வந்து சேர்ந்தார்கள். 'ஐயாவோ' என்று கூப்பாடு போட்டுக் கொண்டு வெளியே வந்து நின்ற ரன்னர் முத்தையா தொண்டைமான்.

     இரண்டாவது ஆசாமி கார்டும் கவர் கூடும் வாங்க வந்த சுப்பையர்.

     மூன்றாவது ஆசாமி குருக்களையா, அவர் தமது வழக்கப் பிரகாரம் 'பத்திரிகை' படிக்க வந்திருந்தார்.

     நாலாவது ஆசாமி ஏதோ ஊருக்குப் புதிது. பட்டணத்துப் படிப்பாளி போல் இருந்தது. சுமார் நாற்பது நாற்பத்தி ஐந்து வயசிருக்கும். அவரும் ஏதோ ஸ்டாம்பு வாங்குவதற்காக உலகநாத பிள்ளை வீடு தேடி வந்து வெளியில் சைக்கிளை சாத்திவிட்டு உள்ளே நுழைந்தார்.

     "யாரது?" என்று கேட்டார் உலகநாத பிள்ளை.

     "ஸ்டாம்பு வேணும். வாங்கலாம் என்று வந்தேன்" என்றார் வந்தவர்.

     "என்னேடே முத்தையா கடுதாசி எதுவும் உண்டுமா?" என்று முழங்காலை தடவினார் குருக்களையா.

     "எனக்கென்ன தெரியும்? பைக்குள்ள என்னவோ. ஆனா எசமானுக்கு சர்க்கார் கடுதாசி வந்திருக்கு" என்றான் முத்தையா.

     "பிள்ளைவாள் நமக்கு ஒரு காலணா கார்ட் குடுங்க; கடையிலே யாருமில்லே; சுருக்கா போகணும்" என்றார் சுப்பையர்.

     "சுப்பையர்வாள்! என்னமோ செவல்காரன் உங்கள் பாக்கியை குடுத்துடுவான்னு விடேன் தொடேன்னு கடுதாசி எழுதினியளே பார்த்தீரா? ஒரு பதில், உண்டு, இல்லை என்று வந்துதா?" என்று அதட்டினார் குருக்களையா.

     "நான் எழுதினது உமக்கு எப்படித் தெரியும்; பதில் வரவில்லை என்று உமக்குக் கெவுளி அடித்ததோ" என்றார் சுப்பையர்.

     "ஊர்த் தபால் எல்லாம் உலகநாத பிள்ளை வாசல் வழியாகத்தான் போக வேண்டும்! தெரியுமா? எனக்குக் கெவுளி வேறே வந்து அடிக்கணுமாக்கும்!" என்றார் குருக்களையா மிதப்பாக.

     "தாலுக்கா எசமானை மாத்தியாச்சு; நாளைக்கு புது ஐயா வாராரு; இங்கே நாளண்ணைக்கு செக்கு பண்ண வருவாகன்னு சொல்லிக்கிடுராவ" என்றான் முத்தையா.

     "அது யாருடா புது எஜமான்!" என்று சற்று உறுமினார் குருக்களையா.

     "போடுகிற கடுதாசியையெல்லாம் படிக்கிற வழக்கமுண்டா" என்று புதியவர் உலகநாத பிள்ளையை வினயமாகக் கேட்டார்.

     "நாங்க படிப்போம், படிக்கலை, நீ யார் கேட்கிறதுக்கு. படிக்கிறோம்; நீர் என்ன பண்ணுவீர்; ஏன் பிள்ளைவாள், மக்காந்தை மாதிரி உட்காந்திருக்கீர்; தபால் ஸ்டாம்பு குடுக்க முடியாதுன்னு சொல்லி அய்யாவெ வெளியேற்றும்" என்று அதட்டினார் குருக்களையா.
"நீங்க சும்மா இருங்க; ஸார் ஸ்டாம்பு ஸ்டாக்கு ஆயிட்டுது. கையில் இரண்டு ஒரணா ஸ்டாம்பு தானிருக்கு; கார்ட் தரட்டுமா?" என்றார்.

     "ஏன் முன்கூட்டியே வாங்கி வைக்கவில்லை?" அதட்டினார் வந்தவர்.

     "என்னவே அதட்டுரே?" என்று பதில் அதட்டு கொடுத்தார் குருக்களையா.

     "ஏனா நான் தான் புது போஸ்ட் மாஸ்டர்; உம்மை செக் பண்ண வந்தேன். உம்மமீது 'பிளாக் மார்க்' போட்டு வேலையை விட்டு நீக்க ஏற்பாடு செய்கிறேன்; கடுதாசி படிக்கிற வழக்கமா?" என்றார் புதியவர்.

     "எனக்குக் குத்தம் என்று படல்லே; இதுவரை... புகார்..."

     "பரம ஏகான்மவாதமோ... பகிர் நோக்கு இல்லையாக்கும்" என்று குத்தலாகக் கேட்டார் புதியவர்.

     "நான் அப்பவே இந்த ஏகான்ம மாயாவாதம் வேண்டாம் என்று சொன்னேனே கேட்டீரா; இனிமேலாவது..." என்று தலையில் அடித்துக் கொண்டார் குருக்களையா.

     உலகநாத பிள்ளை பகிர் முகமற்று பேச்சற்று நிர்விகற்ப சமாதியில் ஒடுங்கினார். அந்த மௌனத்திலும் தம் நடத்தை குற்றம் என்று படவில்லை அவருக்கு.

     "என்ன பிள்ளைவாள்! அந்தப் பய காலண்டர் அனுப்பலியே" என்று கேட்டுக்கொண்டே வேலாயுதத் தேவர் உள்ளே நுழைந்தார்.

     எல்லோரும் மௌனம் சாதிப்பது கண்டு "என்ன விசேஷம்" என்றார்.

     "இவகதான் புதுசா தாலுகாவுக்கு வந்த போஸ்ட் மாஸ்டராம்! உலகநாத பிள்ளை வேலையெ போக்கிடுவோம் என்று உருக்குதாவ" என்று ஏளனம் செய்தார் குருக்களையா.

     "இவுகளா? சதி. இந்த ஊரு எல்லையெத் தாண்டி கால் வச்சாத்தானே அய்யாவுக்கு வேலை போகும். இங்கே வேலாயுதத் தேவன் கொடியல்ல பறக்குது" என்று துண்டை உதறிப் போட்டுக்கொண்டு மீசையில் கைவைத்தார் வேலாயுதத் தேவர்.

     "ஊர் எல்லை தாண்டினாத்தான் என் அதிகாரம்; நான் போணும்னு அவசியம் இல்லெ; என் பொணம் போனாலும் போதும்" என்றார் புதியவர்.

     "மயானத்துக்குக் கால் மொளச்சு நடந்துபோன காலத்தில் பாத்துக்குவம். இப்ப பேசாமே சோலிய பாத்துக்கிட்டுபோம்!" என்றார் தேவர்.

     "சதி, சதி விடுங்க. குருக்களையாவாலே இவ்வளவும். எவனையா வேலெமெனக்கட்டு வேறொருத்தன் கடுதாசியைப் படிப்பான்" என்றார் சுப்பையர்.

நம்பிக்கை

     எனக்கு இந்த வெற்றிலைப் பழக்கம் இருக்கிறதே அது ஒரு பெரிய தொந்தரவு. வாய் நிறைய ஒரு ரூபாய் எடை புகையிலையை வாயில் அடைத்தால் தாகம் எடுக்காமல் என்ன செய்யும்? கண்ட இடத்தில், அசந்தர்ப்பமான இடத்தில் எல்லாம் இந்தத் தொந்தரவுதான். காப்பி, கலர் குடித்தால் தாகம் தீரக்கூடிய நாஸுக் பேர்வழியில்லை நான்.

     அன்று நானும் என் நண்பரும் தெருவில் சுற்றிக்கொண்டு இருந்தோம். அவர் வெற்றிலை போடுங்களேன் என்றார். இதற்கு உபகாரம் வேறு வேண்டியிருக்கிறது. போட்டாய் விட்டது. அதன் உத்ஸாகத்தில் கொஞ்ச நேரம் நடுத்தெருவில் போகிறவர்கள் வருகிறவர்கள் திரும்பிப் பார்க்கும்படியான சல்லாபம். பிறகு... கேட்பானேன். தெரிந்ததுதான். அந்த வெற்றிலைக் கடைக்காரனுக்கு என்னைப் போன்ற பழைய ஏட்டுப் பிரதிகள் வருமென்று தெரியுமா? நண்பர் எனக்கு ஜலவசதிக்காக அவருக்குத் தெரிந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். ஏன் என்றால் தன் மதிப்பை விட்டுக்கொடுக்காமல் நடக்க வேண்டுமென்ற சுத்த ஹம்பக் பேர்வழி நான்.

     அந்த ஜோரில் தண்ணீர் பிரச்சினை ஒருவாறு முடிந்தது.

     எனது நண்பர் ஒரு அபூர்வப் பேர்வழி; அவர் மேல் எப்பொழுதும் பொறாமை அதிகம். சமூகத்தின் எந்தப் படிக்கட்டிலிருப்பவனும் அவரிடம் வெகு லேசாகத் தனது உள்ளத்தைத் திறந்துவிடுவான். அது மட்டுமன்று. இந்தக் குழந்தைகள்தான், அவரிடம் என்ன வசீகர சக்தியோ?

     அந்த ஹோட்டலில் ஒரு குழந்தை. அந்த ஹோட்டல் சொந்தக்காரனுடையது. பார்த்தால் அதை முத்தமிட வேண்டுமென்று தோன்றாதவன் மரக்கட்டை. குழந்தை அவனைப் பார்த்துவிட்டது. அவ்வளவுதான் ஏக ரகளை.

     "ஓடி வா! ஓடி வா! ஒன்னு ரெண்டு... மூணு!"

     குழந்தை... ஒரே பாய்ச்சலில் அவர் ஏந்திய கையில் விழுந்து, ஒவ்வொரு படியிலும் உருண்டு விடாமல் இருக்கவேண்டுமே என்று மெதுவாகக் காலை வைத்துத் தடவும் அந்தக் குழந்தை... என்ன நம்பிக்கை!

     இவ்வளவும் வாசல் படியில். இந்தக் கூத்துக்களையெல்லாம் முன்னே வெளியில் வந்த நான் கவனித்துக்கொண்டு தத்துவம் பண்ணிக்கொண்டிருந்தேன். உத்ஸாகம் அவருக்கு ஜாஸ்தியோ, அந்தக் குழந்தைக்கோ? எனக்குப் பெருமை ஒன்றுதான் மிச்சம்.

     நான் சொல்லும் நேரம் சாயங்காலம். சாயங்காலம் என்று மரியாதையாகத்தான் கூறுகிறேன். பட்டணத்தின் மின்சார கோரமும், அதனுடன் குழம்பும் இரைச்சலும் என் மனதில்...

     எனது கண்கள் தெருப் பக்கம் அகஸ்மாத்தாகத் திரும்பின.

     அங்கே ஒரு ரிக்ஷாவில் ஒரு கனவான். எல்லா விஷயத்திலும். பர்ஸிலிருந்து சில்லறையை எண்ணிக்கொண்டிருந்தார். வண்டி நிறுத்தி விடப்பட்டிருந்தது.

     பக்கத்தில் ஒரு பிச்சைக்காரி, வாலிபம்... வாலிபத்தின் களை. அழுக்குப் பிடித்த வெள்ளாடை முக்காடு தலையை மறைத்தது. முகத்தை மறைக்கவில்லை. கனவான் பக்கம் கையை நீட்டிய வண்ணம் அசையாது நின்றிருந்தாள். சில சமயம் வார்த்தைகள் அவள் வாயிலிருந்து வெளிவந்தன. அது என்னவோ? இரைச்சலில் கேட்கவில்லை. அவள் இடையில் ஒரு குழந்தை சிறியது. நான்கைந்து மாதம்... துயரத்தின் சிற்றுரு தாயிடம் பால் குடித்தவண்ணம் இருந்தது. மூடிய கண்கள் ஏறக்குறைய உயிரற்றது மாதிரிதான்.

     சிற்சில சமயம் அதன் தாய் தன்னையறியாமல் அதை இறுக அணைத்துக்கொண்டாள். அதன்மீது அவ்வளவு பாசமோ, கைதான் வலிக்கிறதோ!

அந்தத் தாயின் முகத்தில் என்ன துயரம்... என்ன சோர்வு... அதிலே பசி... என்று எழுதிய மாதிரி கலங்கிய கண்கள்... நம்பிக்கையிழந்த கண்கள்... அந்தக் கை கனவானை நோக்கி நீட்டியது சற்றாவது விலகவில்லை. என்ன நம்பிக்கை!

     அவளைக் காணவும் மற்றதை மறந்தேன். அவளுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று என் உள்ளம் தூண்டியது. ஆனால் சென்னையிலே தர்ம சிந்தனை ஒரு போக வஸ்து. அதை என்னைப் போன்றவர்கள் எளிதில் அனுபவித்துவிட முடியாது. நானும் யார்? அவளைவிட ஒருபடிமேல்... எனது முகம் வாழ்க்கையின் அலை மேல் சற்று உயரத் தள்ளி இருக்கிறது. அதற்கென்ன இப்போது?

     அந்த ரகளை இவளை ஓட்டல் பக்கம் திரும்பச் செய்தது.

     திரும்பியவள்...

     அப்படியே மெய் மறந்து நின்றவள் போல், தெய்வத்தை, இலக்ஷயத்தைக் கண் எதிரில் கண்டவள் போல் அவற்றை... கண்களில் ஒரு பிரமிப்பு.

     பிறகு...

     அந்தச் சோர்வும் சோகமும் நிலவிய கண்களிலிருந்து துயரம் தேங்கிய அதரங்களிலிருந்து, மேகத்தின் பின் ஒளிந்து சந்திரன் வெளிவந்த மாதிரி...

     ஒரு புன்சிரிப்பு.

     அவள் குறைகள் அவளையறியாமலே பால் சுவைத்துக் கொண்டிருக்கும் குழந்தையை அணைத்துக் கொள்கின்றன.

     ஒரு நிமிஷந்தான்.

     மறுபடியும் அவள் முகத்தில் வாழ்க்கையின் மேகம் கவிந்தது.

     அந்தக் கனவானை நோக்கி ஏதோ கூறினாள்.

     அவரோ?

     அவரும் அந்தக் குழந்தையின் விளையாட்டில் கண்களைத் திறந்தபடி ஈடுபட்டிருக்கிறார்.

     பை மாத்திரம் கைக்குள் பலமாக இறுகப் பிடிபட்டிருக்கிறது.

     அந்தத் தாயும் குழந்தையும்... அவள் நீட்டிய கை... அதற்குத் தான் என்ன நம்பிக்கை. அந்தக் கண்கள் ஒளி இழந்துதான் இருக்கின்றன. அதில் என்ன நம்பிக்கை! சோர்வினாலா?... வேறு கதியில்லாமலா... இருந்தாலும் நம்பிக்கைதானே. அந்தப் பிரமையாவது இல்லாவிட்டால் வாழ்க்கையில் பிடித்துக்கொள்ள வேறு என்ன விருக்கிறது?

     "ஓடி வா! ஓடிவா! ஒன்று ரெண்டு... மூணு..." குழந்தையின் களங்கமற்ற வெள்ளிக் கிண்ணத் தொனி போன்ற சிரிப்பு... ஒரே பாய்ச்சல், அவர் மீது என்ன நம்பிக்கை!

சுப்பையா பிள்ளையின் காதல்கள்



     வீரபாண்டியன் பட்டணத்து ஸ்ரீ சுப்பையா பிள்ளை ஜீவனோபாயத்திற்காகச் சென்னையை முற்றுகையிட்ட பொழுது, சென்னைக்கு மின்சார ரெயிலோ அல்லது மீனம்பாக்கம் விமான நிலயமோ ஏற்படவில்லை. மாம்பலம் என்ற 'செமன்ட்' கட்டிட நாகரிகம் அந்தக் காலத்திலெல்லாம் சதுப்பு நிலமான ஏரியாக இருந்தது. தாம்பரம் ஒரு தூரப் பிரதேசம்.


     திருநெல்வேலியிலே, ரெயில்வே ஸ்டேஷன் சோலைக்குள் தோன்றும் ஒற்றைச் சிகப்புக் கட்டிடமாக, 'ஜங்க்ஷன்' என்ற கௌரவம் இல்லாமல், வெறும் இடைகழி ஸ்டேஷனாக இருந்தபோது திருவனந்தபுரம் 'எக்ஸ்பிரஸ்' மாலை நாலு அல்லது ஐந்து மணிக்குத் தஞ்சாவூர் மார்க்கமாகச் செய்த நீண்ட பிரயாணத்தின் சின்னங்களுடன் சோர்வு தட்டியது போல வந்து நிற்கும். அந்தக் காலத்தில் வீரபாண்டியன் பட்டணத்துக்குப் போகவேண்டும் என்றால், தபால் வண்டியானால் மலிவு; பிரம்மாண்டமான லக்ஷ்மி விலாஸ், கண்பதி விலாஸ் சாரபங்க் ஏறினால் சீக்கிரம் செல்லலாம். அப்பொழுதெல்லாம் திருநெல்வேலி மைனர்கள் ஸ்ரீவைகுண்டம் வைப்பாட்டிமார் வீடுகளுக்கு ஜட்கா வண்டியில் போய்விட்டு இரவு பத்து மணிக்கெல்லாம் திரும்பிவிடுவார்கள். அந்தக் காலத்தில் எல்லாம் ஜட்கா என்றால் அவ்வளவு 'மௌஸ்'.


     அந்தக் காலத்திலெல்லாம் ஸ்ரீ சுப்பையா பிள்ளை ஒரு வாலிபன். ஊரையே வளைத்துக் கோட்டை கட்டி விடும்படிப் பணம் சேர்த்துக் கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டவர் இன்னும் ஒரு முறைகூட - அதாவது தம் கல்யாணம், தம்முடைய தகப்பனார் மரணம் இவைகளுக்காக ஐந்தாறு நாட்கள் ரஜா எடுத்துக்கொண்டு அந்தப் பிரதேசத்திற்கு மின்வெட்டு யாத்திரை செய்தது தவிர - மற்றபடி ஒரு முறைகூடச் சென்றதே இல்லை.


     'தனலட்சுமி பிரொவிஷன் ஸ்டோ ர்ஸ்' பூர்வத்தில் பேட்டைப் பிள்ளை ஒருவரால் பவழக்காரத் தெருவில், அப்பகுதியில் வசிக்கும் திருநெல்வேலை வாசிகளின் சுயஜாதி அபிமானத்தை உபயோகித்துச் சிலகாலம் பலசரக்கு வியாபாரம் நடத்தியது. அந்த வியாபாரத்தில் ஸ்ரீ சுப்பையா பிள்ளையும் பண வசூல், கணக்கு, வியாபாரம் என்ற நானாவித இலாகாக்களையும் நிர்வகித்தார், அதாவது 'மான்ட் போர்ட்' சீர்திருத்தக் காலத்து மாகாண மந்திரிகள் மாதிரி. பிறகு 'தனலட்சுமி ஸ்டோ ர்ஸ்' ஜவுளிக் கடையாக மாறி, திருநெல்வேலி மேலரத வீதி ஜவுளி வர்த்தகர்களில் சில்லறைப் பேர்வழிகளுக்கு மொத்தச் சரக்குப் பிடித்துக்கொடுக்கும் இணைப்புச் சங்கிலியாகி, பெரிய வர்த்தகம் நடத்துவதற்குக் காரணம் கம்பெனிக்கு ஆரம்பத்தில் கிடைத்த ஆதரவினால் ஏற்பட்ட லாபம் என்பதுடன், எதிரில் திறக்கப்பட்ட 'மீனாட்சி பிரொவிஷன் அன்ட் பயர்வுட் ஸ்டோ ர்ஸ்' என்பதை மறந்துவிடலாகாது. இது தஞ்சாவூர் ஐயர் ஆரம்பித்த கடை. சர்க்கரையாகப் பேசுவார்; பற்று வரவும் சௌகரியத்திற்கு ஏற்றபடி இருந்தது. அவர் கடையில் கணக்கு வைத்ததால், குடும்பத் தலைவர்கள் வீட்டுத் தேவைகளுக்கு என்று தனி சிரமம் எடுத்துக் கொண்டு வெளியில் காலடி எடுத்து வைக்க வேண்டிய அவசியமில்லாது போயிற்று. மேலும் 'தனலட்சுமி ஸ்டோ ர்ஸ்' முதலாளி, தமக்கு அந்தப் பகுதி 'திருநெல்வேலிச் சைவர்களுடன்' ஏற்பட்ட நெருங்கிய தொடர்பால் கடையில் நேரடியாக வந்து வாங்குகிறவர்களுக்கு ஒரு மாதிரி, வீட்டில் இருந்துகொண்டு கணக்குச் சிட்டையை அனுப்பி மாசாமாசம் பாக்கி வைப்பவர்களுக்கு ஒரு மாதிரி என்று நடக்க ஆரம்பித்ததும் இதற்கு ஒரு துணைக் காரணம். விசேஷமாக மண்பானைச் சமையல் என்ற விளம்பரங்களுடன் சைவச் சாப்பாட்டு ஹோட்டல் ஒன்றும் மூடப்பட்டது. அதாவது 'தனலட்சுமி ஸ்டோ ர்ஸி'ல் மொத்த வியாபாரம் நடத்திய ஹோட்டல் பிள்ளை, ஊரோடு போய்ச் சௌகரியமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் 'ரிட்டயராகி' விட்டார்; சாத்தூர் 'டிவிஷ'னில் அவருடைய மகன் 'ரெவின்யூ இன்ஸ்பெக்டர்' உத்தியோகம் பார்த்ததால் அவருக்கு ஹோட்டல் நடத்துவது அகௌரவமாக இருந்தது. நிலபுலன்களைப் பார்க்கப் போவதாகச் சென்னைக்குச் செலவு பெற்றுக்கொண்டார். இப்படியாகத் 'தனலட்சுமி ஸ்டோ ர்ஸ்' ஜவுளிக்கடையாக மாறியது.


     இந்த மாறுதலால் ஸ்ரீ சுப்பையா பிள்ளைக்கு அந்தஸ்தும் உயர்ந்தது; சம்பளமும் உயர்ந்தது. திருநெல்வேலிக் கடைப்பிள்ளைகள் வரும்போதும் போகும்போதும் காட்டும் சிரத்தையால் உபவருமானமும் ஏற்பட்டது. உடை, நாட்டு வேஷ்டியிலிருந்து மல்வேஷ்டியாயிற்று. பாங்கியில் பணமும் கொஞ்சம் சேர்ந்தது. அதனுடன் அவருடைய குடும்பமும் பெருகியது. குடும்ப 'பட்ஜட்'டில் வீட்டு வாடகை இனம் பெரும் பளுவாக இருந்தாலும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற வசதி அளிப்பதாக இல்லை.


 தேச விழிப்பின் முதல் அலையான ஒத்துழையாமை இயக்கம், பின்னர் அதன் பேரலையான உப்பு சத்தியாக்கிரகம் - இவருடைய வாழ்விலோ, மனப்போக்கிலோ மாறுதல் ஏற்படுத்தவில்லை. வீரபாண்டியன்பட்டணத்தின் ஒரு சிறு பகுதியாகவே அவர் சென்னையில் நடமாடினார். ஜீவனோபாயம், பிறகு சௌகரியப்பட்டால் பிறருக்கு உதவி, சமூகத் தொடர்புகளுக்குப் பயந்து பணிதல் - எல்லாம் சேர்ந்த உருவம் ஸ்ரீ சுப்பையா பிள்ளை. காலணாப் பத்திரிகைகள் காங்கிரஸின் சக்தியை அவரிடம் கொண்டுவந்து காட்டவில்லை என்றால், பவழக்காரத் தெரு, திருநெல்வேலி மேற்கு ரதவீதி, அப்புறம் நினைவிலிருக்கும் வீரபாண்டியன்பட்டணம் என்ற மூன்று சட்டங்களுக்குள்ளாகவே அவருடைய மனப் பிரதிமை அடங்கிக் கிடந்தது என்று வற்புறுத்துவது அவசியமில்லை.


     மின்சார ரெயில் வண்டி அவருடைய வாழ்வில் ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்தியது. அவர் வேலை பார்த்த கடையின் பூர்வாசிரமத்தில், அவர் பற்று வரவு நடத்திய பெங்களூர் நாயுடு, ஒரு முழு வாழ்விலும் சம்பாதித்த ஏமாற்றத்தின் சின்னங்களுடன் பழையபடி சொந்த ஊருக்குப் போய்விட விரும்பினார். அவருக்குத் தாம்பரத்தில் ஒரு சின்ன வீடு இருந்தது. ஸ்ரீ சுப்பையா பிள்ளைக்கு அவருடைய வார்த்தைகள் மீது நம்பிக்கை இருந்தது. அதன் விளைவாகப் பிள்ளையவர்களுக்குத் தாம்பரம் - பீச் யாத்திரை பிரதி தினமும் லபித்தது. ஊருக்கெல்லாம் மின்சாரம் வந்தாலும் அவருக்கு அந்தப் பழைய மண்ணெண்ணை (கிரோசின்) விளக்குத்தான்; குழாய் வந்தும் அவருக்குத் தாம்புக் கயிறும் தவலையுந்தாம்.


     பிள்ளையவர்கள் இத்தனை காலம் வீட்டு வாடகைக்குச் செலவு செய்தது, இப்பொழுது தனக்கும் தன் மூத்த பையனுக்கும் - அவன் படிக்கிறான் - ரெயில் பாஸுக்குச் செலவாயிற்று. விடியற்காலம் கிணற்றுத் தண்ணீர் ஸ்நானம். பழையது, கையில் பழையது மூட்டை, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டணாச் சில்லறை - இந்தச் சம்பிரமங்களுடன் பவழக்காரத் தெருவை நோக்கிப் புறப்படுவார். இரவு கடைசி வண்டியில் காலித் தூக்குச் சட்டி, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டணாச் சில்லறை, பசி, கவலை - இவற்றுடன் தாம்பரத்திற்குத் திரும்புவார். 'பெண்ணுக்குக் கல்யாணம் காலாகாலத்தில் செய்யவேணும். மூத்தவனுக்குப் பரீக்ஷைக்குப் பணம் கட்ட வேணும். தோற்றுப் போய் வீட்டோ டு இருக்கும் சின்னவனை ஏதாவது ஒரு தொழிலில் இழுத்துவிட வேணும். நாளைக்குப் பால்காரனுக்குத் தவணை சொல்லாமல் பணம் ஏதோ கொஞ்சம், கூடக் குறையவாவது கொடுக்க வேணும்...'


     பிள்ளையவர்கள் அநுட்டானாதிகள் முடித்துக்கொண்டு, சாப்பிட்டு முடித்து 'முருகா' என்று கொட்டாவி விட்டபடி திண்ணையில் சரிவதற்குமுன் மணி பன்னிரண்டாகிவிடும். இப்படியே தினந்தோறும்...

2


     காலை ஏழு மணி சுமாருக்குத் திருவனந்தபுரம் 'எக்ஸ்பிரஸ்' விசில் சப்தம், 'அவுட்டர் சிக்னல்' அருகில் கேட்கும்பொழுது ஸ்ரீ சுப்பையா பிள்ளை தாம்பரம் ஸ்டேஷன் மாடிப் படிகளில் கால் வைப்பார். எதிரில் நிற்கும் டிக்கெட் பரிசோதகன் புது ஆசாமியாக இருந்தால் பாஸை எடுத்துக் காண்பித்துவிட்டு மேலேறுவார். இல்லாவிட்டால், சிந்தனைகளுடன், படிகளில் கால் உயர்ந்தேறிச் செல்லும்; கண்கள் தெற்கு நோக்கி ரெயில் வண்டி வரும் திசையைத் துழாவும்; திருநெல்வேலையிலிருந்து தமக்குத் தெரிந்த யாரும் வந்தால் பார்க்கலாமே என்ற ஆசைதான். 'எக்ஸ்பிரஸ்' புறப்பட்ட பிறகுதான் மின்சார ரெயிலும் புறப்படும். ஆகையால் அந்த நேரத்தில், 'எக்ஸ்பிரஸ் பிளாட்பார'த்திற்குச் சென்று இரவு முழுவதும் கொசுக்களுடன் மல்லாடிய சிரமத்தைச் செங்கற்பட்டு அவசரக் காப்பியில் தீர்த்துக் கொண்ட பாவனையில் ஜன்னல் வழியாகத் தலை நீட்டுபவர்களைப் பார்ப்பதில் ஒரு நாட்டம் பிள்ளையவர்களுக்கு எப்பொழுதும் உண்டு.


     இடுப்பில் நாலு முழம் மல், தோளில் ஒரு துவர்த்து, மடியில் சம்புடம் வகையறா, கையில் போசன பாத்திரம் - இந்தச் சம்பிரமங்களுடன் பிள்ளையவர்களை எப்பொழுதும் - மழையானாலும் வெயிலானாலும் பார்க்கலாம். எப்பொழுதும் ஒரு வாரமாக க்ஷவரம் செய்யாத முகம், நெற்றியில் பளிச்சென்ற விபூதி, நனைந்துலரும் தலை மயிரைச் சிக்கெடுக்கும் வலக்கை - இவைகளை நினைத்துக் கொண்டால் சுப்பையா பிள்ளையின் உருவம் வந்து நின்றுவிடும். மழைக் காலமானால் கையில் குடை ஒன்று எப்பொழுதும் விரித்துப் பிடித்தபடி போசன பாத்திரத்துடன் அதிகமாகக் காணப்படும்.


 தெற்கு ரதவீதி ஜவுளி வியாபாரிகள் இவரிடம் தப்பித்துக் கொண்டு நேரடியான வியாபாரம் நடத்திவிடுவது துர்லபம்; அப்படி எப்பொழுதாவது நடத்த முயன்றிருந்தால் பிள்ளையவர்களுக்குத் தேக அசௌக்கியம், ரெயிலுக்கு வரத் தாமதமாயிற்று என்பதுதான் கணக்கு. இதனால் பிள்ளையிடம் கடை முதலாளிக்கு வெளிக் காட்டிக் கொள்ளப்படாத தனி வாஞ்சை - 'சுப்பையா இல்லாட்ட நம்ம கையொடிஞ்ச மாருதி' என்பார் முதலாளிப் பிள்ளை. இவ்வளவிருந்தும் பண விஷயத்தில் என்னவோ அவர் வெகு கறார்ப் பேர்வழி.


     பிள்ளையவர்கள் ரெயிலில் ஏறுவதே ஒரு தினுசு. நடுமைய வண்டியில், வாசலுக்கு அருகில் உள்ள வலது பக்கத்து 'ஸீட்டில்', எஞ்சினுக்கு எதிர்ப்புறமாகத்தான் உட்காருவார். அது அவருடைய 'ஸீட்'. புறப்படுகிற இடத்தில் ஏறிக் கடைசியாக நிற்கிற இடத்தில் வந்து இறங்குகிறதால் இந்த இடத்துக்கு அவரிடம் யாரும் போட்டிக்கு வந்ததே இல்லை. வந்திருந்தாலும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள். தாம்பரத்திலிருந்து 'பீச்' வரையில் உள்ள பாக்கங்களிலும், பேட்டைகளிலும் இரண்டிரண்டு நிமிஷம் வண்டி நிற்கும்பொழுதுதான் அவருடைய நிஷ்டை கலையும். வண்டி 'பீச்' ஸ்டேஷனில் வந்து நின்றுவிட்டது என்றவுடனேயே இறங்குவதில்லை. வெளியில் இறங்கியதும் வேஷ்டியை உதறிக் கட்டிக் கொண்டபின் துவர்த்து முண்டை உதறி மேலே போட்டுவிட்டு பிறகு ஜன்னல் வழியாக வண்டிக்குள் தலையையும் கையையும் விட்டு கையில் போசனப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு காலெட்டி வைப்பார் ஸ்ரீ சுப்பையா பிள்ளை. ஆர அமர மெதுவாக, சாவகாசமாக இறங்கி ஸ்டேஷனை விட்டு வெளியே போகும் கடைசிப் பிரயாணி சுப்பையா பிள்ளை. தாம்பரத்திலும் பீச்சிலும் வண்டியில் ஏறும் முதல் பிரயாணியும் அவர்தாம். அவரிடம் சொந்தமாகக் கடிகாரம் ஏதும் இல்லை. அவரே ஒரு கடிகாரம்.


     பிள்ளையவர்கள் வண்டியில் ஏறி உட்கார்ந்தாரானால் தலையை வெளி நீட்டாமல் ஜன்னல் பக்கமாகத் திரும்பிவிடுவார். 'பீச் ஸ்டேஷன்' கோட்டைச் சுவர்களில் கண்பார்வை மோதிக்கொள்ளும் வரையில் அந்தப் பாவனையில் கழுத்தே இறுகிவிட்ட மாதிரி உட்கார்ந்திருப்பார். பார்வையில் ஒரு குறிப்பு இருக்காது; அத்திசையில் இருக்கும் பொருள்கள், ஜீவன்கள் அவர் பார்வையில் விழும் என்பதில்லை; விழுவதில்லை என்று சொல்ல வேண்டும்.


     ஆனால் இவைகளுக்கெல்லாம் விதிக்கு விலக்கு இந்த மீனம்பாக்கம் ஸ்டேஷன். இதை வண்டி நெருங்கும்பொழுது அவர் கண்கள் உயிர் பெறும். மிரண்டு சோலையுடன் கூடிய கப்பிக்கல் ரஸ்தாவையும் தாண்டி, தூரத்தில் தெரியும் விமான நிலயத்தில் தங்கும்.


     'எப்பவாவது ஒரு தரத்துக்கு அஞ்சு ரூபாயை வீசி எறிந்துவிட்டு ஆகாசக் கப்பலில் ஏறிப் பார்த்துவிட வேணும்' என்பது அவரது தினசரி உத்தேசம் - பிரார்த்தனை. எப்பவாவது... மீனம்பாக்கத்தில் சிவில் விமான ஏற்பாடு அமைக்கப்பட்டதிலிருந்து நாளது தேதி வரை, அந்த 'எப்பவாவது' என்ற எல்லைக்கு முடிவுகாணவில்லை. வண்டி இரண்டு நிமிஷம் நின்று சென்னையை நோக்கிப் புறப்படும் வரையில் தில்லை நோக்கிய நந்தன் தான். வண்டி, 'ஸ்டேஷன் பிளாட்பார'த்தை விட்டு நகர்ந்து வேகமெடுக்குமுன், இவரையும் வண்டியையும் வழியனுப்பிப் பின் தங்கி, மறுபடியும் தென்படும் விமான நிலயக் கட்டிடங்கள் பிள்ளையவர்களின் இரத்தவோட்டத்தைச் சிறிது துரிதப்படுத்துவதுதான் மிச்சம். அடுத்த ஸ்டேஷன் வருவதற்குமுன் அவருடைய மனம் ஜப்பான் சீட்டிகளிலும் புடைவைகளிலும் முழுகி மறைந்துவிடும். முக்குளித்து வெளிவரும்போதெல்லாம், மனமானது பெண்ணுக்கு வரன் தேடுவது, மேயன்னா விலாசத்துப் பாக்கிக்காக இன்னொரு தடவை கடுதாசி போடுவது, இந்த வருசமாவது வைகாசிக்குக் காவடி எடுத்துவிட வேணும் என்று நிச்சயிப்பது - இவ்விதமாக 'பீச் ஸ்டேஷனை' நெருங்கிக் கொண்டிருக்கும். ஒரு முறை திருநெல்வேலிப் பக்கமாகப் போனால் பெண்ணுக்கு வரன் நிச்சயிப்பதுடன் காவடியையும் எடுத்துவிட்டு, சின்னப் பயலுக்கு ஏதாவது ஒரு வழி செய்துவிட்டு வரலாம். ராதாபுரத்துப் பிள்ளை கொளும்புக்குப் போகையில் தாக்கல் எளுதுவதாகச் சொன்னார்கள். வந்து ஆறு மாசம் ஆச்சே, போனதும் எதுக்கும் ஒரு கடுதாசி போட்டுவிட்டு மறு வேலை பார்க்கணும். இந்தச் சேட்டுப் பயலைப் பார்த்துக்கிட்டு நேரா கடைக்குப் போயிட்டா அப்புறம் வெளியிலே போக வேண்டியிருக்காது; முதலாளியையும் பாத்துப் பேச அப்பந்தான் சௌகரியம்... அவுஹ என்னமோ ஊருக்கு ஒரு மாசம் போயிட்டு வரணுமாமே - விதிதான்... எப்படியும் கேட்டுப் பாக்கது...'


  வண்டி மாம்பலம் வந்து நின்றது. 'பிளாட்பார'த்தில் ஜனக்கூட்டம்; ஏக இரைச்சல். கூடைக்காரிகளும் ஆபீஸ் குமாஸ்தாக்களும் அபேதமாக இடித்து நெருக்கிக் கொண்டு ஏறினார்கள். இந்த நெருக்கடியில், இவர் பார்வையில் விழும் வாசலில் பெரிய சாக்கு மூட்டையும் தடியுமாக ஏறிய கிழவனாருக்குப் பின் பதினாறு வயசுப் பெண் ஒருத்தி 'விசுக்' என்று ஏறிக் கிழவனாருக்கு முன்னாக வந்து காலியாகக் கிடந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள். 'பொம்பிளையா மாதிரியாக் காங்கலியே; நெருக்கித் தள்ளிக்கொண்டு மின்னாலே ஓடியாந்து உட்கார்ந்து கொண்டாளே; பொம்பிளை வண்டியில்லே' என்று ஆச்சரியப்பட்டார் பிள்ளை.


     வந்து உட்கார்ந்தவள் ஒரு மாணவி. வைத்தியத்துக்குப் படிப்பவள். கழுத்தில் 'லாங் செயி'னுடன் ஒரு 'ஸ்டெதாஸ்கோப்'பும் அலங்காரத்துக்காக (?) தொங்கிக் கொண்டிருந்தது. இன்ன வர்ணம் என்று நிச்சயமாகக் கூறமுடியாத பகல் வேஷ வர்ணங்களுடன் கூடிய ஒரு புடைவை. அதற்கு அமைவான 'ஜாக்கெட்'. செயற்கைச் சுருளுடன் கூடிய தலை மயிரைக் காதை மறைத்துக் கொண்டையிட்டிருந்தாள். காதிலிருந்து ஒரு வெள்ளிச் சுருள் தொங்கட்டம். கையில் புஸ்தகமோ, நோட்டோ அவர் நன்றாகக் கவனிக்கவில்லை. நெற்றி உச்சியை உள்ளங்கையால் தேய்த்துத் தினவு தீர்த்துக் கொண்டார். கண்களைக் கசக்கிக் கொண்டு, ஒரு வாரமாகக் கத்தி படாத முகவாய்க் கட்டையை தடவிக் கொடுத்துக் கொண்டு, ஜன்னல் வழியாக எதிர்ப்பக்கத்தில் தெரியும் வீடுகளைப் பார்த்தார். பார்வை மறுபடியும் அந்தப் பெஞ்சுக்குத் திரும்பியது.


     சாக்கு மூட்டையுடன் திண்டாடிய கிழவனார் அதைத் தனது முழங்காலருகில் சரிய விட்டுவிட்டு இரண்டு கைகளாலும் தடியைப் பிடித்துக் கொண்டு கொட்டாவி விட்டு அசை போட்டபடி பெஞ்சின் மூலையில் ஒண்டி உட்கார்ந்திருந்தார். பெண்ணோ சாவகாசமாகச் சாய்ந்து வண்டியில் நிற்கும் மற்றவர்கள் மீது ஒரு தடவை பார்வையைச் சுழற்றி விட்டு, தனது கைப்பையைத் திறந்து அதற்குள் எதையோ அக்கறையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். வண்டி புறப்பட்டது...


     கோடம்பாக்கத்தின் 'செமன்ட்' சதுரக் கட்டிடங்களில் அவர் கண் விழுந்தது. 'பெத்துப் போட்டா போதுமா...' என்று அந்த நேரத்தில் வீட்டுக் கிணற்றடியில் தண்ணீர் சுமக்கும், வரன் நிச்சயிக்க வேண்டிய தமது மகளைப் பற்றி நினைத்தார். அவளைப் போல இவளையும் பெண் என்ற ரகத்தில் சேர்த்துக் கொள்ள அவர் மனம் மறுத்தது.


     'ஷாக்' அடித்ததுபோல் பிள்ளையவர்கள் கால்களைப் பின்னுக்கிழுத்தார். கூட்டத்தின் நெருக்கத்தால் அவளது செருப்புக் காலின் நுனி அவரது பெருவிரல் நுனியைத் தொட்டது. பரக்க விழித்த பார்வையுடன் பிள்ளையவர்கள் கால் உடல் சகலத்தையும் ஒடுக்கிச் சுருக்கி 'ஸீட்டு'க்குள் இழுத்துக் கொண்டார். அந்தப் பெண்ணும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கையிலிருந்த புஸ்தகத்தில் ஆழ்ந்து விட்டாள். சிந்தனை அதில் விழவில்லை. அந்தப் பார்வை பிள்ளையவர்கள் மனசுக்குள் எதையோ தூண்டில் போட்டு இழுத்தது. நெற்றியில் வியர்வை அரும்ப ஜன்னல் வழியாக வலப்புறத்து வயல் - கட்டிடக் குவியல்களைப் பார்த்தார்.


     மனம் எப்பவோ நடந்த கல்யாண விஷயத்தில் இறங்கியது. வீரபாண்டியன்பட்டணத்துக் கருக்கு மாப்பிள்ளை - மேளதாளக் குறவைகளுடன் வீட்டில் குடிபுகுந்த ஸ்ரீமதி பிள்ளையின் மஞ்சள் அப்பி சுத்துருவில் மருக்கொழுந்துடன் கூடிய நாணிக் கோணிய உருவம், பிறகு தேக உபாதையையும் குடும்பச் சுமையையும் தூக்கிச் சென்ற நாள், சங்கிலிகள், குத்துவிளக்கை அவித்துவைத்த குருட்டுக் காமம்...


     சடபட என்ற பேரிரைச்சலுடன் எதிர் லயனில் ஒரு மின்சார ரெயில் விரைந்து நெருங்கியது. வண்டிகள் ஒன்றையொன்று தாண்டிச் செல்லும் சில விநாடிகளில் காதையும் மனதையும் குழப்பும் கிடுகிடாய்த்த சப்தம்; எதிரே ஓடிமறையும் ஜன்னல்களில் தோன்றி மறையும் தலைகள் - அப்பாடா! வண்டி சென்றுவிட்டது. சப்தமும் தூரத்தில் ஒடுங்குகிறது.


 பிள்ளையவர்களின் மனம் ஓசையின் பின்பலத்தால் வேறு ஒரு திசையில் சஞ்சரிக்கிறது. 'பிராட்வே' முனையில் டிராமும் மோட்டாரும் மோதிக்கொள்ள நெருங்கிவிட்டது. இடையில் அந்தப் பெண். பிள்ளையவர்கள் அவளை எட்டி இழுத்து மீட்கிறார். 'தனியாக வந்தால் இப்படித்தான்' என்கிறார். மீண்டும் ஓரிடத்தில் ஒரு ரிக்ஷாவில் அதே பெண்; சக்கரத்தின் கடையாணி கழன்று விழுகிறது. ஓடிப்போய் வண்டியைச் சரிந்துவிடாமல் தாங்கிக் கொள்கிறார். கூட்டம் கூடிவிடுகிறது. கூட்டத்திலே போராடி மல்யுத்தம் செய்து அவளை மீட்டுக்கொண்டு வருகிறார்... பிள்ளையவர்களின் மனசு சென்று சென்று அவள் உருவத்தில் விழுகிறது. முகத்தை ஜன்னல் பக்கம் திருப்புகிறார். 'எழும்பூர் தாண்டிவிட்டதா' என்று ஆச்சரியப்படுகிறார்.


     பார்க் ஸ்டேஷன்!


     கூட்டம் ஏகமாக இறங்குகிறது. பிள்ளையவர்கள் பார்த்தபொழுது எதிர் 'ஸீட்' காலியாக இருந்தது. கிழவனும் மூட்டை முடிச்சுக்களுடன் இறங்கிவிட்டான். அந்தப் பெண் எப்போது இறங்கினாள்? வந்த அவசரம் மாதிரிதான் போன அவசரமும்... வண்டியில் பெரும்பான்மையான கூட்டமும் இறங்கிவிட்டது. இவர் பெட்டியில் எல்லா இடங்களும் காலி.


     மின்சார விசில்...


     வண்டி புறப்பட்டுவிட்டது. தலையை நீட்டி எட்டிப் பார்த்தார். அப்பாடா! ஒருத்தருமில்லை. காலை எதிர்ப் பெஞ்சில் நீட்டிக் கொண்டு பிடரியில் இரு கைகளையும் கோர்த்து அண்டை கொடுத்துக் கொண்டு கண்களை அரைவாட்டமாகச் சொருகி யோசனையில் ஆழ்ந்தார். மறுபடியும் அந்தப் பெண்ணின் உருவம் மனசில் வந்து கூத்தாட ஆரம்பித்தது. விரல்களை வாயருகில் சொடக்கிவிட்டு 'சிவா' என்றபடி கொட்டாவி விட்டார்.


     கோட்டை தாண்டி ரெயில் 'தகதக'வென்ற கடலின் பார்வையில் ஓடிக்கொண்டிருந்தது. 'வரும்போது ஞாபகமா பால்காரனுக்கு வழி பண்ணனும்... அடுத்த சீட்டை எடுத்தால் திருநெல்வேலி போய்வரச் செலவுக்குக் கட்டுப்படியாகிவிடும்...திருச்செந்தூரிலே ஒரு கட்டளை ஏற்படுத்திவிட்டால், முருகன் திருநீறாவது மாசா மாசம் கிடைக்கும்...'


     வண்டி ஊதியது...


     'அந்தச் சின்னப் பையனுக்கு வேட்டி எடுக்கவா? போன மாசந்தானே ஒரு சோடி வாங்கினேன்... பயலெக் கண்டிக்கணும்.'


     வண்டி வந்து நின்றது.


     கீழே இறங்கி வேட்டியை உதறிக் கட்டினார். மேல்துண்டை உதறிப் போட்டுக் கொண்டார். ஜன்னல் வழியாக எட்டிப் போசனப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு கால் எட்டி வைத்தார்.


     டிக்கட் இன்ஸ்பெக்டர் சரிபார்த்த கடைசிப் பிரயாணி ஸ்ரீ சுப்பையா பிள்ளை.