Thursday, January 7, 2010

அயல்நாடுகளில் சிறுகதை வளர்ச்சி


    தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி என்பது தமிழக எல்லையோடு
நின்றுவிடவில்லை. தமிழ் பேசும் பிற நாடுகளிலும் அதன்
வளர்ச்சியைக் காண இயலும். தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை,
மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களும்
தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு வளம் சேர்த்துள்ளனர்.
2.6.1 இலங்கை
    இலங்கையில் மு. தளைய சிங்கம் (1935 - 1973) மிகச் சிறந்த
சிறுகதை எழுத்தாளராக விளங்கியுள்ளார். 1960 முதல் 1965
வரையிலான காலக் கட்டத்தில் பல சோதனைக் கதைகளை
எழுதியுள்ளார். புதுயுகம் பிறக்கிறது என்ற தலைப்பில் இவருடைய
கதைகள்     தொகுக்கப்பட்டுள்ளன. இக்கதைகள் பெரும்பாலும்
மேனாட்டுப்     புதிய     இலக்கியப் படைப்புகளை ஒத்துக்
காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்துக் கிராமிய மக்களின் வாழ்வியலை
அடிப்படையாகக் கொண்டு எழுதியவர்களில் செம்பியன் செல்வன்,
செங்கை ஆழியான்
    இருவரும் குறிப்பிடத் தக்கவர்கள்.
செ.கணேசலிங்கன், செ.கதிர்காம நாதன்,    எம்.ஏ.ரஹ்மான்,
கே.டானியல், க.குணராசா, இளங்கீரன், அ.செ.முருகானந்தன்,
அ.பாலமனோகரன், எஸ்.பொன்னுதுரை
ஆகிய சிறுகதை
எழுத்தாளர்கள் இலங்கையில் குறிப்பிடத் தக்கவர்கள். இயேசு ராஜா,
குப்ளான் சண்முகம்
போன்ற சிறுகதை ஆசிரியர்களும் சிறந்த
கதைகளை எழுதி வருகின்றனர். மலையகத் தோட்டத் தொழிலாளர்கள்
வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எழுதிய பெனடிக்டு பாலன்,
தென்னிலங்கை இசுலாமிய மக்களின் வாழ்க்கைப் பின்னணியில்
எழுதிய     திக்குவல்லை    கமால்     போன்றவர்களும்
குறிப்பிடத் தக்கவர்கள். தற்போது பல பெண் எழுத்தாளர்களும்
புலம்     பெயர்ந்த எழுத்தாளர்களும் பெருகி வருகின்றனர்.
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன், சுதா ரூபன் போன்றவர்கள்
புலம் பெயர்ந்த எழுத்தாளர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவார்கள்.
2.6.2 மலேசியா மற்றும் சிங்கப்பூர்
    கடந்த 75 ஆண்டுகளுக்கும் மலோக மலேசியா, சிங்கப்பூர்
என்ற இரு நாடுகளிலும் தமிழ்ப் பத்திரிகைகள் மிகுந்த செல்வாக்குப்
பெற்று விளங்குகின்றன. 1966இல் முதலாவது உலகத் தமிழ் மாநாடு
கோலாலம்பூரில் நடத்தப்பட்டதற்குக் காரணம் அங்குத் தமிழ்மொழி
பேசுபவர்களும், தமிழ்ப் பற்றாளர்களும் அதிகம் என்பதுதான்.
1924இல், கோலாலம்பூரில் தமிழ் நேசன் என்ற நாளிதழும், 1931இல்
சிங்கப்பூரில் தமிழ் முரசு என்ற நாளிதழும் தோற்றம் பெற்றன.
இவ்விரு நாளிதழ்களும் மலேசியா, சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதை
வளர்ச்சிக்கு முக்கியக் களங்களாகத் திகழ்கின்றன. இந்நாடுகளில்
வெளியாகும் பாரத மித்திரன், திராவிட கேசரி என்ற இதழ்கள்
மணிக்கொடி, விகடன், கலைமகள் ஆகிய இதழ்களிலிருந்து நல்ல
சிறுகதைகளை எடுத்து வெளியிட்டுள்ளன. கல்கி, கு.ப.ரா., சங்கு
சுப்பிரமணியன், புதுமைப்பித்தன்
போன்றோர் சிறுகதைகள் மலேசியா வாழ் தமிழ் மக்களின் மத்தியில் புகழ் பெற்றிருந்தன.
1933இல், விகடன் சிறுகதைப் போட்டி நடத்தியதைப் பார்த்து,
1934இல் பாரத மித்திரன் சிறுகதைப் போட்டி நடத்தியது.
ந.பழனிவேலு மலேசியாவின் மூத்த தலைமுறை எழுத்தாளராவார்.
1936 - 1942 காலக் கட்டங்களில் இருபதுக்கும் மேற்பட்ட
சிறுகதைகளை எழுதியுள்ளார். மா.இராமையா, அ.ர.வீர, ஆ.மு.சி.,
மா.செ. மாயதேவன், சி.வடிவேலு,    எம்.ஏ.இளஞ்செல்வன்,
எம்.குமரன், சாமி மூர்த்தி
போன்றோர் மலேசியாவில் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்களுள் சிலராவர்

சிறுகதை வளர்ச்சியில் பிற காரணிகளின் பங்கு


    இதழ்கள் பல்வேறு வகையான சிறுகதைப் போட்டிகளை
உருவாக்கி, சிறுகதை எழுத்தாளர்களின் எண்ணிக்கையை
அதிகப்படுத்தின.அதேபோலச் சிறுகதைத் தொகுப்பு முயற்சிகளாலும்,
அமைப்புகளின் பரிசுத் திட்டங்களாலும் சிறுகதை சிறப்பாக
வளர்ச்சியடைந்தது.
2.5.1 போட்டிகள்
    இதழ்கள் சிறந்த சிறுகதைகளை உருவாக்கவும், புதிய
எழுத்தாளர்களை உருவாக்கவும் முயன்றன. கல்கி, 1933இல், சிறுகதைப் போட்டி ஒன்றை ஆனந்த விகடனில் நடத்தினார்.
போட்டிக்கு முந்நூறு கதைகள் வந்திருந்தன. அவற்றில் மூன்றை
மட்டும் பரிசுக்குரிய கதைகளாகத் தேர்ந்தெடுத்தார்கள். தேர்வுக்
குழுவில், இலக்கிய உலகில் புகழ் பெற்ற ஏழுபேர் இடம்
பெற்றிருந்தனர். ரசிகமணி டி.கே.சி., கே.எஸ்.வேங்கடரமணி,
நகைச்சுவை எழுத்தாளர் எஸ்.வி.வி., அறிவியல் கட்டுரை
எழுத்தாளர் பெ.நா.அப்புஸ்வாமி, ஆங்கிலப் பேராசிரியர்
கே.சாமிநாதன், ஆசிரியர் கல்கி, விகடன் அதிபர் வாசன் முதலிய
எழுவர்     நடுவர்     குழுவில்     இடம் பெற்றிருந்தனர். எம்.ஜே.ராமலிங்கம்
எழுதிய ஊமைச்சி காதல் என்ற கதைக்கு முதல் பரிசும், ஆர்.எஸ்.ஸ்ரீகண்டன் எழுதிய தோல்வி என்ற கதைக்கும், பி.எஸ்.இராமையா எழுதிய மலரும் மணமும் என்ற கதைக்கும் கூட்டாக இரண்டாம் பரிசும் அறிவிக்கப்பட்டது. பரிசுக் கதைகள் பின்பு விகடனில் வெளிவந்தன.
    ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டி நடத்திய சில
மாதங்களுக்குப் பின்னர் கலைமகள் பத்திரிகை நிறுவனம் ஒரு
சிறுகதைப் போட்டிக்கு ஏற்பாடு செய்தது. ஆனந்த விகடனைப் போல்
கலைமகள் போட்டி பரபரப்பைக் கொடுக்கவில்லை. என்றாலும், சிறுகதை எழுதுவோர் இடையே அதற்கு மதிப்பு வளர்ந்தது. ந.பிச்சமூர்த்தி முள்ளும் ரோஜாவும் என்ற தலைப்பில் சிறுகதை எழுதி முதல் பரிசு பெற்றார். தொடர்ந்து கலைமகள் இதழ் வருடம் தோறும் வித்தியாசமான சிறுகதைப் போட்டிகளை நடத்துகின்றது. அந்தாதிக் கதைகள், கிழமைக் கதைகள், இரட்டைக் கதைகள், இரட்டை மணிமாலைக் கதைகள், ஏர்முனைக் கதைகள், போர்முனைக் கதைகள், வண்ணக் கதைகள் என்று அக்கதைப் போட்டிகள் பல பெயர்களில் அமைந்தன. கலைமகள் இதழ், அமரர் ராமரத்தினம் நினைவுச் சிறுகதைப் போட்டிகளைக் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடத்தி வருகின்றது.
    ஆனந்த விகடனும் தொடர்ந்து பல சிறுகதைப் போட்டிகளை
நடத்தி வந்துள்ளது. குறிப்பிட்ட தொழில் செய்வோரை மையமாக
வைத்துக் கதை எழுதும் போட்டி நடத்தப்பட்டது. பின்னர்
முத்திரைக் கதைகள், வைரமோதிரக் கதைகள் என்று பல
போட்டிகள் வைக்கப்பட்டன. விகடனின் வெள்ளி விழா ஆண்டில் சிறுகதைப் போட்டிகள் நிகழ்த்தப்பட்டு நல்ல சிறுகதைகளுக்குப்
பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
    கலைமகள், ஆனந்த விகடன் இதழ்களைத் தவிர, குமுதம்,
கல்கி, குங்குமம், இதயம் பேசுகிறது போன்ற இதழ்களும் சிறுகதைப்
போட்டிகள் நிகழ்த்தியுள்ளன. பின்னர், அரசு மற்றும் தனியார்
அமைப்புகள், குறிப்பாக, ஆயுள் காப்பீட்டுக் கழகம், குடும்பக்
கட்டுப்பாட்டுத் துறை போன்றவைகளும் தங்கள் கருத்துகளைப்
பரப்பும் விதமாகச் சிறுகதைப் போட்டிகளை நடத்தியுள்ளன.
    இத்தகைய போட்டிகள், தமிழ் இலக்கிய உலகிற்கு நல்ல
சிறுகதைகளைத்     தந்தன என்பதைவிடப் புதிய புதிய
எழுத்தாளர்களை உருவாக்கித் தந்தன என்று கூறலாம்.
2.5.2 தொகுப்பு முயற்சிகள்
    சிறுகதை வளர்ச்சியில் ‘தொகுப்பு முயற்சியை’ ஒரு மைல்கல்
என்று குறிப்பிடலாம். முதலில் இம்முயற்சியை மேற்கொண்டவர் அல்லயன்ஸ் பதிப்பக நிறுவனர் குப்புசாமி அய்யர் ஆவார். அவர்
1941 முதல் 1944 வரை ஆண்டுக்கு ஒரு தொகுதியாக நான்கு
தொகுதிகளைக் கதைக் கோவை என்ற பெயரில் வெளியிட்டார்.
இத்தொகுதிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண் பெண்
எழுத்தாளர்களுடன்,     ஈழத்     தமிழ்     எழுத்தாளர்களும்
இடம்பெற்றிருந்தனர். பல கதைகள் இந்தத் தொகுப்புக்கென்றே
எழுதப்பட்டவைகளாகும். சுமார் 200க்கும் மேற்பட்ட கதைகள்
இத்தொகுப்புகளில்     இடம்     பெற்றிருந்தன.     உ.வே.சா,
பெ.நா.அப்புஸ்வாமி, பண்டித மணி கதிரேசஞ் செட்டியார்,
வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், வையாபுரிப் பிள்ளை,
வரதராசனார் போன்ற தமிழ் அறிஞர்களும் இத்தொகுதிகளில்
கதைகள் எழுதியுள்ளனர். கதைக்கோவை வெளியான பிறகு, கல்கி வானொலியில் அத்தொகுப்புகளைப் பற்றி விமர்சனம்
செய்துள்ளார். இம்முயற்சிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து
கலைமகள் நிறுவனம் தாங்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில்
பரிசு பெற்ற கதைகளைத் தொகுத்து - இரட்டை மணிமாலை,
இரட்டைக் கதைகள், மணிக்கதைகள், கிழமைக் கதைகள்
என்ற
பெயர்களில் தொகுப்புகளை வெளியிட்டது. அமுத நிலையத்தார்
அமுதக் கதம்பம் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டனர்.
பின்பு     1963ஆம்     ஆண்டு வெளியான சிறுகதைகளில்
சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து, 1965ஆம் ஆண்டு, தமிழ்
எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம
நூலாக வெளியிட்டது. தொடர்ந்து
அவ்வமைப்பு அடுத்தடுத்த ஆண்டுகளில் சிறந்த கதைகளைத்
தேர்ந்தெடுத்து வெளியிட்டது. சாகித்திய அக்காதெமியும் தமிழ்ச்
சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளது. முதல் தொகுதி
அ.சிதம்பரநாதன் செட்டியாராலும், இரண்டாவது தொகுதி
அகிலனாலும் தொகுக்கப்பட்டன. பின்பு 2000ஆம் ஆண்டு
நவீனத் தமிழ்ச் சிறுகதைகள் என்ற பெயரில் சா.கந்தசாமி
1965 முதல் 1995 வரையில் வெளிவந்த கதைகளில் சிறந்தவற்றைத்
தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளார். 1900 முதல் 2005 வரையிலான
பெண் எழுத்தாளர்களின் கதைகளைப் பெண் மையக் கதைகள்
என்ற பெயரில் இரா.பிரேமா தொகுத்துள்ளார். அதற்கு முன்பு,
1995இல், இ.எஸ்.டி என்பவர்     ஐம்பத்துநான்கு பெண்
எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து ஒரு நந்தவனத்
தென்றல்
என்ற பெயரில் கோவை விஜயா பதிப்பகம் மூலமாக
வெளியிட்டுள்ளார். பின்பு அவரே மூத்த தலைமுறையினர்
சிறுகதைகள் முப்பத்து ஏழினைத் தொகுத்துத் தலைவாழை என்ற
பெயரில், 1994இல், அன்னம பதிப்பாக வெளியிட்டுள்ளார். வானதி
பதிப்பகம்
நூறு எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து
நான்கு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. கலைஞன் பதிப்பகம்,
கவிதா பதிப்பகம், காவ்யா பதிப்பகம்
போன்ற பலரும்
இத்தகைய தொகுப்புச் சிறுகதைகளை வெளியிட்டு வருகின்றனர்.
ஜெயகாந்தனின் சிறுகதைகளைக் கவிதா பதிப்பகம் தொகுத்து
வெளியிட்டுள்ளது. கலைஞன் பதிப்பகம் - விந்தன் சிறுகதைகள்,
நீல பத்மநாபன் சிறுகதைகள், ஜெயந்தன் சிறுகதைகள், ஜோதிர்லதா
கிரிஜா சிறுகதைகள், உஷா சுப்பிரமணியன் சிறுகதைகள் என்று பல
தனிப்பட்ட சிறுகதை எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து
வெளியிட்டு வருகின்றது. மேலும், கலைஞன் பதிப்பகம் இந்த
நூற்றாண்டுச் சிறுகதைகள்
என்ற பெயரில் மூன்று தொகுதிகளை
வெளியிட்டுள்ளது. எழுத்தாளர் சிவசங்கரி, அறுபது முன்னணி
எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து நெஞ்சில் நிற்பவை
என்ற பெயரில் இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். காவ்யா
பதிப்பகம் - தலித் சிறுகதைகள் தொகுப்பினையும், பெண்ணியச்
சிறுகதைகள்
தொகுப்பினையும் வெளியிட்டுள்ளது. இவ்வாறு,
தமிழில் சிறுகதைத் தொகுப்புகள் பல்கிப் பெருகியுள்ளன.
2.5.3 அமைப்புகளும் பரிசுகளும்
    நல்ல தமிழ்ச் சிறுகதைகளை உருவாக்கவும், நல்ல சிறுகதை
எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும்     தமிழகத்தில் தனிப்பட்ட அமைப்புகள் தோற்றம் பெற்றன. அவற்றில் முக்கியமானது
இலக்கியச் சிந்தனை என்னும் அமைப்பு. 1970ஆம் ஆண்டு,
இலக்கிய ஆர்வம் மிகுந்த இலட்சுமணன், சிதம்பரம் என்ற இரு சகோதரர்களால் இது தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில்
வெளியாகும் வார, மாத இதழ்களில் வெளியான சிறுகதைகளைச்
சேகரித்து, ஒவ்வொரு மாதமும் அம்மாதம் வெளியான சிறந்த
சிறுகதைகளைத் தேர்வு செய்கின்றனர். பின்பு, அந்த ஆண்டின்
சிறந்த பன்னிரண்டு கதைகளில் மிகச் சிறந்த கதையாக ஒன்று
தேர்ந்தெடுக்கப்படுகிறது.     தேர்ந்தெடுக்கப்பட்ட     கதைகள்
பன்னிரண்டும் ஒரு சிறந்த திறனாய்வாளரால் திறனாயப்படுகின்றன.
ஒவ்வோர் ஆண்டின் கதைகளையும் தனித்தனியாகத் தொகுத்து
வானதி பதிப்பகம நூலாக வெளியிட்டு வருகிறது. இதனை
முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து செவ்வனே செய்து வரும்
இவ்வமைப்பு, தரமான தமிழ்ச் சிறுகதை முயற்சிகளுக்குத் துணை
நின்றுள்ளது. இலக்கியச் சிந்தனையின் முயற்சியினால் புதிய
தலைமுறை எழுத்தாளர்கள் பலரையும் வாசகர்கள் இனம் கண்டு
கொள்ள முடிகிறது. வண்ணதாசன், வண்ணநிலவன், ஐராவதம்,
ஆதவன், ராஜநாராயணன், பிரபஞ்சன், வீர வேலுச்சாமி, நாஞ்சில்
நாடன், திலீப்குமார் ஆகியவர்கள் அனைவரும் இலக்கியச்
சிந்தனையின் சிறந்த சிறுகதைப் படைப்பாளர்களின் வரிசையில்
இடம்பெற்றவர்கள்.
    1977 முதல் இலக்கிய வீதி என்ற அமைப்பு இனியவன
என்பவரால் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த
அமைப்பும் புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்து வருகிறது.
செங்கல்பட்டைச்     சுற்றியுள்ள     எழுத்தாளர்களுக்கிடையே
போட்டிகள் வைத்துப் பரிசுகள் நல்கி வருகிறது. சிறுகதைப்
போட்டியில் பரிசு பெற்ற கதைகளை ஆண்டு தோறும் தொகுப்பு
நூலாக வெளியிட்டு வருகிறது. மேலும், இவ்வமைப்பினர், மாதந்தோறும் பிரபல     எழுத்தாளர்களை மதுராந்தகம், செங்கல்பட்டு போன்ற இடங்களுக்கு அழைத்து இலக்கிய நிகழ்ச்சிகள்     நடத்துகின்றனர். அதோடு தில்லி போன்ற
பெருநகரங்களுக்குச் சென்று, அங்குள்ள படைப்பாளிகளின்
உதவியுடன் சிறுகதைப் போட்டிகளை நடத்தி வருகின்றனர். தமிழ்ச்
சிறுகதை வளர்ச்சியில் இலக்கிய வீதியின் பணி் குறிப்பிடத்தக்கதாகும்.
    கோவையைச் சேர்ந்த லில்லி தேவசிகாமணி அமைப்பு,
திருப்பூர்த் தமிழ்ச் சங்கம், பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய
அமைப்பு
என்று சில அமைப்புகள் சிறந்த சிறுகதைகளுக்கு
ஆண்டு தோறும் பரிசுகள் வழங்கி வருகின்றன. தமிழ்நாடு அரசு
ஆண்டு தோறும் சிறந்த இலக்கிய நூல்களுக்குப் பரிசுகள் வழங்கிச்
சிறப்பிக்கும் போது, சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கும் பரிசு நல்கி
வருகின்றது.

சிறுகதை வளர்ச்சியில் இதழ்களின் பங்கு



    சிறுகதையின் வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்டவை
இதழ்கள். இதழ்கள் வாயிலாக வெளியிடப்பட்ட சிறுகதைகளும்
புகழ் அடைந்தன; சிறுகதை ஆசிரியர்களும் மக்களிடையே
செல்வாக்குப் பெற்றனர். எனவே, சிறுகதை இலக்கியத்தில் வளர்ச்சி
பற்றிக் குறிப்பிடும்போது, இதழ்களின் பங்களிப்பைப் புறக்கணிக்க
இயலாது.

2.4.1 கலைமகள், ஆனந்த விகடன் இதழ்கள்
    கலைமகள், ஆனந்த விகடன் என்ற இதழ்கள் முப்பதுகளின்
தொடக்கத்தில் தோற்றம் பெற்று மக்களிடையே செல்வாக்குப்
பெற்றிருந்தன. ஆனந்த விகடனை எஸ்.எஸ்.வாசன் 1928இல்
தொடங்கினார். சராசரி வாசகர்கள் மத்தியில் செல்வாக்குப்
பெற்றிருந்த எழுத்தாளர் கல்கியின் எழுத்துகளால் பரவலாக
இவ்விதழ் தமிழ் மக்களால் அறியப்பட்டுப் போற்றப்பட்டது. நல்ல
சிறுகதைகள் வெளியிடுவதில் இவ்விதழ் மிகுந்த அக்கறையும்
ஆர்வமும் காட்டியது. ஆனந்த விகடன்    தன் அரசியல்
கட்டுரைகளாலும், நகைச்சுவைத் துணுக்குகளாலும், சிறுகதைகளாலும்
பெருவாரியான வாசகர்கள் மனங்களில் இடம் பெற்றிருந்தது.
ஜெயகாந்தன் சரஸ்வதி போன்ற சிறு பத்திரிகைகளில் எழுதிக்
கொண்டிருந்தாலும், ஆனந்த விகடனில் எழுதத் தொடங்கிய
போதுதான், அவர் வெகுஜனக் கூட்டத்தால் அறியப்பட்டார்.
ஆனந்த விகடன், எழுத்தாளர்களின் சோதனை முயற்சிகளுக்கும்
அவ்வப்போது இடம் கொடுத்து வந்துள்ளது. 1931 முதல் 1941 வரை,
பத்தாண்டுக் காலம் விகடனில் கல்கி ஆசிரியராக இருந்த போது,
புதிய சிறுகதை எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். சிறுகதை
எழுத்தாளர்களுக்குச் சன்மானம் (ஊக்கத் தொகை)ழங்கும்
வழக்கத்தை     ஆனந்தவிகடன்தான் முதன்முதலில் கொண்டு
வந்தது.

    கலைமகள் இதழ் 1932ஆம் ஆண்டு மாத இதழாகத்
தோற்றம் பெற்றது. வெறும் பொழுதுபோக்குப் பத்திரிகையாக
இல்லாமல், உயர்ந்த இலக்கியத்திற்கும், சிறப்பான சிறுகதைகளுக்கும்
இடமளித்துச் செல்வாக்குப் பெற்றது. நாற்பதுகளில் மணிக்கொடி
எழுத்தாளர்களும் இவ்விதழில் எழுதியுள்ளனர். பங்கிம் சந்திரர்,
சரத் சந்திரர், தாகூர், பிரேம் சந்த், காண்டேகர் ஆகியவர்களுடைய
கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுக் கலைமகள் இதழில்
வெளிவந்தன.     கலைமகளில்     எழுதிய எழுத்தாளர்களும்,
வாசகர்களும் இலக்கியத் தரம் வாய்ந்தவர்களாக அறியப்பட்டனர்.
கலைமகள் இதழில் எழுதிய எழுத்தாளர்களுக்கு மக்கள் மத்தியில்
நல்ல செல்வாக்கு இருந்தது.

2.4.2 மணிக்கொடி இதழ்
    மணிக்கொடி இதழ் 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம்
நாள் கு.சீனிவாசன்,தி.ச.சொக்கலிங்கம்,வரதராசனார் இவர்களின்
முயற்சியால் தொடங்கப்பட்டது. வரதராசனார் இதன் ஆசிரியராவார்.
லண்டனிலிருந்து வெளியான அப்சர்வர் என்ற ஆங்கில இதழைப்
போன்று, தமிழிலும் ஓர் இதழ் நடத்த வேண்டும் என்ற முயற்சியின்
விளைவே இவ்விதழாகும். இதில் பி.எஸ்.ராமையா,புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, பி.எம்.கண்ணன் ஆகியோர்
கதை எழுதியுள்ளனர். இவ்விதழில் சிறுகதை எழுதும் முறை,
சிறுகதை பற்றிய கொள்கைகள், மேனாட்டுச் சிறுகதை முயற்சிகள்
இவற்றைப் பற்றிக் கட்டுரைகள் வெளியாகின. இவ்விதழ் தொடங்கிய
ஒன்றரை ஆண்டுகளில் நின்று, பின்பு பி.எஸ். ராமையாவை
ஆசிரியராகக் கொண்டு மீண்டும் வெளிவந்தது. சிறுகதைக்கான
இவ்விதழ், தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தை வளர்த்தெடுத்தது.
இலக்கியத் தரம் வாய்ந்த சிறுகதைகளையும் சாகா வரம் பெற்ற
சிறுகதைகளையும் வெளியிட்டு இவ்விதழ் சிறப்புப் பெற்றது.
அத்துடன் வாசகர்களுக்குச் சிறுகதை பற்றிய முழுமையான
உணர்வினை ஏற்படுத்த முயன்றது. உலகின் தரமான சிறுகதைகளைத்
தமிழ் வாசகர்கள் அறிய வேண்டும் என்பதற்காக மொழிபெயர்ப்பு
மற்றும் தழுவல் கதைகளை மணிக்கொடி இதழ் வெளியிட்டது.
ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்ய மொழி, ஜப்பான் மொழி
ஆகியவைகளிலிருந்தும், இந்திய மொழிகளான இந்தி, வங்காளி,
மராத்தி மொழிகளிலிருந்தும் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு
வெளியாகின. மணிக்கொடியில் புத்தக மதிப்புரையும், அந்த
மதிப்புரையின் மீது விவாதங்களும் இடம் பெற்றன.

    சிறுகதைப் படைப்பில் சோதனை முயற்சிகளை மேற்கொண்டு,
உலகத் தரமான, எட்டக் கூடிய தரமான எந்நாளும் போற்றக் கூடிய
கதைகளை வெளியிட்டுச் ‘சிறுகதை இலக்கியத்திற்கு ஒரு சிவிகையாக’
மணிக்கொடி இதழ் சிறந்தது. இதனால் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில்
இக்காலக் கட்டத்தை மணிக்கொடிக்     காலம் என்று
போற்றுகின்றனர்.

    பேராசிரியர் சிவத்தம்பி மணிக்கொடி எழுத்தாளர்களைப் பற்றி
விமர்சிக்கும் போது, அவர்களை மணிக்கொடிக் குழுவினர் என்று
சுட்டுகின்றார். ரகுநாதன் மணிக்கொடிப் பரம்பரையினர் என்றும்,
சிட்டி, சிவபாதசுந்தரம் இருவரும் அவர்களை மணிக்கொடிக்
கோஷ்டி
என்றும் சுட்டும் அளவு, அவர்கள் இலக்கியத் தரமான
சிறுகதைகளைப் படைப்பதில் ஒன்றுபட்டிருந்தனர் எனலாம்.

2.4.3 பிற இதழ்கள்
    ஆனந்த விகடன், கலைமகள், மணிக்கொடி இதழ்களுக்கு முன்னர். தொடக்கத்தில் விவேக சிந்தாமணி, விவேக போதினி
போன்ற இதழ்கள் சிறுகதைகளை வெளியிட்டு்ச் சிறுகதை வளர்ச்சிக்கு
அடித்தளம் இட்டன. அடுத்த நிலையில் மாதவையா ஆசிரியராகப்
பணியாற்றிய தமிழ்நேசன், பஞ்சாமிர்தம் இதழ்கள் நல்ல
சிறுகதைகளை வெளியிட்டு வந்துள்ளன. பாரதியார் காலத்தில்
சக்கரவர்த்தினி இதழ் சிறுகதை ஆக்கத்திற்குத் துணை நின்றுள்ளது.
சுதேசமித்திரன், நவசக்தி, விமோசனம் ஆகிய இதழ்கள்
சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்டன. சுதேசமித்திரன் வாரப்
பதிப்பு, தினமணி வார வெளியீடு, ஆனந்த போதினி,
அமிர்தகுண போதினி, பிரசண்ட விகடன், ஊழியன், சுதந்திரச்
சங்கு, காந்தி
போன்ற இதழ்களில் சிறுகதைகளுக்கு முக்கிய இடம்
அளிக்கப்பட்டு வந்தது. சூறாவளி (1939), பாரத தேவி (1939),
கலாமோகினி (1942), கிராம ஊழியன் (1943-1947),
சந்திரோத
யம் (1954-47), முல்லை (1946), தேனீ(1948) என்ற
இதழ்கள் வெளிவந்தன.     அவ்வப்போது தோன்றி மறைந்த
இவ்விதழ்களும் சிறுகதைகளுக்கு     முக்கியத்துவம் கொடுத்து
வெளியிட்டு வந்துள்ளன. பின்பு சரஸ்வதி, ஹனுமான், சக்தி,
எழுத்து
போன்ற இதழ்கள் ஐம்பதுகளில் தோற்றம் பெற்றன. அறுபதுகளில் தீபம், இலக்கிய வட்டம், கணையாழி, நடை,
கசடதபற, கொல்லிப்பாவை, யாத்ரா, பிரக்ஞை, சுவடு, அஃ,
வாசகன்
, கண்ணதாசன் போன்ற இதழ்கள் அவ்வப்போது
தோன்றின. அவற்றில் சில மறைந்தன. தீபம், கணையாழி,
கண்ணதாசன் இதழ்கள் சிறுகதை வளர்ச்சியில் முக்கியப் பங்கு
வகிக்கின்றன. பின்னர் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் குங்குமம்,
குமுதம், கல்கி, தாய், சாவி, இதயம் பேசுகிறது
போன்ற வார
இதழ்களு
ம் தினமலர், தினத்தந்தி போன்ற நாளிதழ்களின்
வாரப் பதிப்புகளும்    சிறுகதைகளை வெளியிட்டு வந்தன.
சுபமங்களா, காலச்சுவடு, நிகழ், புதிய பார்வை, கவிதாசரண்,
புதுஎழுத்து, தாமரை, செம்மலர் போன்ற இதழ்களும் சிறுகதை
வெளியீட்டில் அக்கறை காட்டி வருகின்றன. இவை தவிர மகளிர்
இதழ்களான மங்கை, மங்கையர் மலர், அவள் விகடன்,
பெண்மணி, சிநேகிதி
போன்ற இதழ்களும் சிறுகதை
வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன. மொத்தத்தில் தமிழ்ச் சிறுகதை
வளர்ச்சியில் இதழ்கள் தலையாய இடத்தைப் பெற்றுள்ளன
எனலாம்.

சிறுகதை வளர்ச்சியில் பெண் எழுத்தாளர்களின் பங்கு



    தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் பெண் எழுத்தாளர்களின் பங்கு தொடக்கம் முதல் இருந்து வந்துள்ளது.
2.3.1 தொடக்கக் காலம் (1975 வரை)
    கு.ப.சேது அம்மாள (கு.ப.ரா.வின் சகோதரி), கமலா விருத்தாசலம (புதுமைப்பித்தனின் மனைவி), விசாலாட்சி
அம்மாள்,
வை.மு.கோதை நாயகி அம்மாள், சாவித்திரி
அம்மாள்,சரஸ்வதி
அம்மாள் போன்றவர்கள் பரவலாக இதழ்களில்
எழுதி வந்துள்ளனர். இவர்களில் சாவித்திரி அம்மாள், சரஸ்வதி
அம்மாள் போன்றவர்கள் பிற இந்தி மொழிச் சிறுகதைகளையும்,
ஆங்கிலச் சிறுகதைகளையும் தமிழில்     மொழிபெயர்த்துள்ளனர்.
குமுதினி, குகப்பிரியை, வசுமதி ராமசாமி, எம்.எஸ்.கமலா
போன்ற எழுத்தாளர்கள் இக்காலக் கட்டத்தில் காந்தியம், தேசியம்,
விதவை மறுமணம், பாலிய மணக் கொடுமைகள், தேவதாசிக்
கொடுமைகள் இவற்றைக் கருப் பொருளாகக் கொண்டு சிறுகதைகள்
படைத்துள்ளனர்.

    இதற்கு அடுத்த காலக் கட்டத்தின் தொடக்கத்தில் அநுத்தமா, ஆர்.சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், கே.ஜெயலெட்சுமி,
வேங்கடரமணி, இந்திரா தேவி, சரோஜா ராமமூர்த்தி
போன்றோர் கதை எழுதியுள்ளனர்.கலைமகள் இதழில் பரிசுக்குரிய
சிறுகதைகளைப் பெரும்பாலும் பெண்    எழுத்தாளர்களே
படைத்துள்ளனர்    என்பது குறிப்பிடத் தக்கதாகும். ராஜம்
கிருஷ்ணனின் ஊசியும் உணர்வும், நூறு ரூபாய் நோட்டு, ஸ்ரீமதி
விந்தியா எழுதிய அன்பு மனம், குழந்தை உள்ளம், சூடாமணி
எழுதிய காவேரி போன்ற கதைகள் பரிசு பெற்ற சிறுகதைகளாகும்.
1947இல், கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில்
அநுத்தமாவின் முதல் கதையான அங்கயற்கண்ணி இரண்டாம்
பரிசினைப் பெற்றது. இக்காலக் கட்டப் பெண் எழுத்தாளர்கள்
பெரும்பாலும் குடும்ப உறவுகள் மற்றும் குடும்பச் சிக்கல்களை
வைத்துக் கதைகள் எழுதினர், ராஜம் கிருஷ்ணன், சூடாமணி
இருவர் மட்டும் சமூக நோக்குடைய கதைகளை எழுதி வந்துள்ளனர்.

    1960களில் தொடங்கிச் சிவசங்கரி, வாஸந்தி, இந்துமதி,
அனுராதா ரமணன்
போன்றவர்கள் சிறுகதைகள் அதிகம்
எழுதியுள்ளனர். இவர்களது சிறுகதைகளில் பெரும்பாலும் காதல்,
காதல் மணம், தனிக்குடித்தனம், குழந்தையின்மை போன்றவை
கருக்களாக அமைந்திருந்தன. எழுபத்தைந்துக்குப் பின் சிவசங்கரி,
வாஸந்தி     எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. சமூகப்
பிரச்சினைகள், பெண் விடுதலை, பெண் உரிமை இவற்றைக்
கருவாகக் கொண்ட கதைகளை இவர்கள் எழுதத் தொடங்கினர்.

    இதே காலக் கட்டத்தில் தோற்றம் பெற்ற ஜோதிர்லதா
கிரிஜா
தொடக்கத்திலிருந்தே சமூக உணர்வோடு சிறுகதைகள்
படைத்து வருகிறார்.

2.3.2 தற்காலம் (1976 முதல் இன்று வரை)
    இக்காலக் கட்டத்தில் பெண்களி்ன் எழுத்தில் பெரும் மாற்றம்
ஏற்பட்டது. பெண் கல்வி, பொருளாதாரச் சுயசார்பு, வேலைவாய்ப்பு,
வெளி உலகத் தொடர்பு இவை காரணமாகப் பெண்களின்
கதைக்களம் இல்லம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து
விரிந்து பரந்ததாக அமைந்தது. கதை சொல்லும் உத்திமுறை, வடிவ
நுணுக்கங்கள் என்ற நிலையிலும் பெண் எழுத்துகள் இக்காலக்
கட்டத்தில் சிறப்புப் பெற்றன. உயர்கல்வி படித்து ஆய்வு
செய்பவர்கள், பேராசிரியர்கள், ஆட்சிப் பணியில் உயர் பதவி
வகிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள்,
உலகப் பயணம் மேற்கொண்டவர்கள், சமூகச் சேவையாளர்கள்,
பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டவர்கள், பன்மொழிப் புலமை
பெற்றவர்கள் என்று பலரும் கதைகள் படைத்து வருகிறார்கள்.
இவர்கள், இன்றைய நடப்பியல் பிரச்சினைகளான பெண் கருவழிப்பு,
பெண் சிசுக்கொலை, இரட்டைச் சுமை, பாலியல் பலாத்காரம், நவீனத்
தொழில் நுட்பங்களால் ஏற்படும் பாதிப்பு, சுற்றுச் சூழலால் ஏற்படும்
பாதிப்பு, பெண் உடல் அல்லது மனம் சார்ந்த பிரச்சினைகள்- எனச்
சிறுகதைப் பொருண்மைகள் விரிந்து பரந்துள்ளன. இக்காலக்
கட்டத்தில் அம்பை, காவேரி, திலகவதி, சிவகாமி, பாமா,
அனுராதா, உஷா சுப்பிரமணியன், தமயந்தி, உமாமகேஸ்வரி,
தமிழ்செல்வி
போன்ற பெண் எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர்.
இவர்களில், அம்பை மொழி நடையிலும், சிறுகதையின் உருவத்திலும,்
உள்ளடக்கத்திலும், பொருண்மையிலும் மாறுபட்டவற்றைக் கையாண்டு
சிறந்த சிறுகதைகளைப் படைத்து வருகிறார். அம்மா ஒரு
கொலை செய்கிறாள், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை,
வாமனன், கருப்புக் குதிரைச் சதுக்கம்
போன்ற கதைகள்
அம்பையின் மிகச்சிறந்த கதைகளாகும்.    காவேரி     என்ற
புனைபெயர் கொண்ட லட்சுமி கண்ணன் ஓசைகள், வெண்மை
போர்த்தியது
போன்ற தொகுதிகளில் நவீனப் பெண்களின்
பிரச்சினைகளைக் கையாண்டுள்ளார். சிவகாமி, பாமா இருவரும்
தலித் பெண்ணியக் கதைகளைப் படைத்துள்ளனர்.

வரலாற்று நோக்கில் சிறுகதை வளர்ச்சி



    தமிழ் அச்சு எழுத்துகள் தயாரிக்கப்பட்ட பின்னர், அச்சடித்த
நூல்கள் பல தமிழில் வெளிவந்தன. மேலும் ஆங்கிலக் கல்வி
அறிமுகப் படுத்தப்பட்டது. இவற்றின் விளைவாகப் புதிய இலக்கிய
வகைகள் மலர்ந்தன. அவற்றுள் ஒன்று சிறுகதை. சிறுகதையின்
வளர்ச்சி பற்றிய வரலாற்றினை நோக்குவோம்.

2.2.1 முதல் காலக் கட்டம் (1900 - 1925)
    தமிழில் மேலைநாட்டு மரபை ஒட்டிய நவீனச் சிறுகதை
முயற்சிகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலக் கட்டத்தில்
மேற்கொள்ளப்பட்டன. ஆங்கிலத்திலும் தமிழிலும் நாவல் படைத்து
வந்த அ.மாதவையா 1910ஆம் ஆண்டில் இந்து ஆங்கில
நாளிதழில் வாரம் ஒரு கதையாக 27 சிறுகதைகளை எழுதினார்.
பின்பு இக்கதைகள் 1912இல் Kusika’s Short Stories என்ற
பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்தன. பன்னிரண்டு
ஆண்டுகள் கழித்து     1924இல், இக்கதைகளில் பதினாறை,
மாதவையாவே தமிழில் மொழிபெயர்த்து, குசிகர் குட்டிக்
கதைகள்
என்ற பெயரில் இரு தொகுதிகளாக வெளியிட்டார்.
சமூகச் சீர்திருத்த நோக்குடன் இக்கதைகளைப் படைத்ததாக
மாதவையா அந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இதில்
இடம்பெற்ற திரௌபதி கனவு, குழந்தை மணத்தையும், கைம்பெண்
கொடுமையையும், அவனாலான பரிகாரம் என்ற கதை
வரதட்சணைக் கொடுமையையும் பேசின. மாதவையா, தாம்
ஆசிரியராக இருந்து வெளியிட்ட பஞ்சாமிர்தம் இதழிலும் தமிழில்
பல சிறுகதைகள் எழுதியுள்ளார்.

    மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் பல சிறுகதைகளைப்
படைத்துள்ளார். நவதந்திரக் கதைகள், வேணுமுதலி சரித்திரம்,
மன்மத ராணி, பூலோக ரம்பை, ஆவணி அவிட்டம், ஸ்வர்ண
குமாரி, ஆறில் ஒரு பங்கு, காந்தாமணி, ரயில்வே ஸ்தானம்
என்று பல கதைகளை எழுதியுள்ளார். பாரதியார் கதைகள்
சம்பவங்களைப்     பேசுகின்றனவே     தவிர,     இவற்றில்
சிறுகதைகளுக்குரிய உணர்ச்சி இல்லை என்று பேராசிரியர்
சிவத்தம்பி குறிப்பிடுகின்றார்.

    வ.வே.சு. யர் 1912ஆம் ஆண்டு, கம்ப நிலையம் என்ற
பதிப்பகத்தின் மூலம் மங்கையர்க்கரசியின் காதல் முதலிய
கதைகள்
என்ற ஐந்து கதைகள் அடங்கிய தொகுதியை
வெளியிட்டார். மங்கையர்க்கரசியின் காதல், காங்கேயன், கமல
விஜயன், அழேன் ழக்கே, குளத்தங்கரை அரசமரம்
என்ற ஐந்து
கதைகளில் குளத்தங்கரை அரசமரம் என்ற கதையே தமிழின்
முதல் சிறுகதையாகப் பல விமர்சகர்களால் சுட்டப்படுகின்றது.
வ.வே.சு.அய்யர் இக்கதையில் பாத்திர ஒருமை, நிகழ்ச்சி ஒருமை,
உணர்வு ஒருமை என்ற மூன்றையும் சிறப்பாக அமைத்துள்ளதாக
இலக்கிய விமர்சகர்கள் கூறுகின்றனர். வரதட்சணைக் கொடுமை
இக்கதையின் கருப்பொருளாகும். ருக்மணி என்ற பெண்ணுக்குத்
திருமணம் ஆகிறது. வரதட்சணைப் பிரச்சினை காரணமாக, சாந்தி
முகூர்த்தம் தடைபட்டு, கணவனுக்கு வேறு திருமணம் நிச்சயமாகியது.
இதனால் ருக்மணி தற்கொலை செய்து கொள்கிறாள். தன் தவற்றை
உணர்ந்த கணவன் துறவு பூணுகிறான். ஒரு மரம் இக்கதையைச் சொன்னதாக அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பாகும். இக்கதை, 1913ஆம் ஆண்டு விவேக போதினி இதழில் வெளிவந்தது. வ.வே.சு. அய்யர் காலத்திற்குப் பிறகு
நாரண துரைக்கண்ணன், தி.ஜ.ரங்கநாதன்
போன்றவர்கள் சிறுகதைகள் படைத்துள்ளனர். நாரண துரைக்கண்ணன் சமுதாயப் பிரச்சினைகளைப் பேசும்
கதைகள் பல எழுதியுள்ளார். 1915இல் தொடங்கி, சுமார் 60
ஆண்டுகள் வரை எழுத்துப் பணியில் இருந்தார் அவர். தி.ஜ.ர.வின்
முதல் சிறுகதை சந்தனக் காவடி ஆகும். இவருடைய புகழ்
பெற்ற சிறுகதை நொண்டிக்கிளி ஆகும். கால் ஊனமுற்ற ஒரு
பெண், எவரும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளப்
போவதில்லை என்று உணர்ந்த பின் எடுக்கும் புரட்சிகரமான
முடிவே கதையாகும். கதையில், நொண்டிப்     பெண்ணின்
ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
காந்தியத்தைப் பேசும் பல சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார்.

    இவ்வாறு மாதவையா, பாரதியார், வ.வே.சு. அய்யர்
போன்றோர்     தமிழில்     சிறுகதை முன்னோடிகளாகப்
போற்றப்படுகிறார்கள்.

2.2.2 இரண்டாம் காலக் கட்டம் (1926 - 1945)

மௌனி
லா.ச.ரா.
மு.வரதராசனார்
அகிலன்
அண்ணா
மு.கருணாநிதி
    இக்காலக் கட்டம் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் சிறப்பான
காலக் கட்டம் எனலாம். புதுமைப்பித்தன்,கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா, மௌனி போன்றவர்களும், கல்கி, ராஜாஜி, கே.எஸ்.வேங்கட ரமணி, சிட்டி, சங்கரராம், லா.ச.ரா. போன்றவர்களும் இக்காலக் கட்டத்தில் சிறுகதை எழுதியுள்ளனர்.

    இவர்களில் கல்கி நவசக்தி, விமோசனம், ஆனந்த விகடன்
போன்ற இதழ்களிலும், பின்பு கல்கிஇதழிலும் எழுதியுள்ளார்.அவர்,
அதிர்ஷ்ட சக்கரம், கவர்னர் விஜயம், காங்கிரஸ் ஸ்பெஷல், கோர சம்பவம், சாரதையின் தந்திரம், டெலிவிஷன்,
திருவழுந்தூர் சிவக்கொழுந்து
என்று பல சிறுகதைகளை
எழுதியுள்ளார். கதர் இயக்கம், தீண்டாமை அகற்றுதல், உப்புச்
சத்தியாகிரகம், புலால் உணவு தவிர்த்தல், விதவா விவாகம், பாலிய
விவாகக் கொடுமை என்று விடுதலை உணர்வுடைய கதைகளையும்,
சமூக உணர்வுடைய கதைகளையும் எழுதியுள்ளார். இவருடைய
எழுத்தில் நகைச்சுவை முக்கியப் பங்கு வகிக்கிறது. அவர் எழுதிய
வரலாற்று நாவல்களைப் போல இச்சிறுகதைகள் இலக்கியத்
தகுதியைப் பெறவில்லை என்றாலும் சிறுகதை வளர்ச்சியில்
கல்கியின் பங்கு முக்கியமான ஒன்றாக இருந்திருக்கின்றது என்பதை
மறுக்க இயலாது.

    கல்கி எழுதியவை, வெகுஜன இதழுக்கு ஏற்ப அமைய, அவருடைய காலக் கட்டத்தில் எழுதிய புதுமைப்பித்தன் கதைகள் வடிவம், உத்தி, உள்ளடக்க முறைகளில் பரிசோதனை முயற்சிகளாக அமைந்து இலக்கிய அந்தஸ்து பெற்ற சிறுகதைகளாகச் சிறந்தன. தமிழ்ச் சிறுகதை முயற்சியை உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றவர்களுள் புதுமைப்பித்தன் முதன்மையானவர் ஆவார்.
மணிக்கொடி என்ற இலக்கியப் பத்திரிகையுடன் தொடர்பு கொண்டு மிகச்சிறந்த படைப்பு முயற்சியில் ஈடுபட்டார். மேல்நாட்டுச் சிறுகதை ஆசிரியர்களின் படைப்பாக்கத்தை நன்கு அறிந்த அவர், அவற்றை உள்வாங்கிக் கொண்டு, தமது சொந்தப் படைப்பாளுமையைக் கொண்டு     அற்புதமான     சிறுகதைகளைப் படைத்துள்ளார். புதுமைப்பித்தன் கேலிக்கதைகள், புராணக் கதைகள், தத்துவக் கதைகள், நடப்பியல் கதைகள் என்று பலவகையான கதைகளைப் படைத்துள்ளார். வறுமையைப் பற்றிப் பொய்க் குதிரை, ஒருநாள் கழிந்தது, பொன்னகரம், துன்பக்கேணி போன்ற கதைகளையும், புராணக் கதை மரபை வைத்துச் சாபவிமோசனம், அகல்யை அன்றிரவு போன்ற கதைகளையும், தத்துவ நோக்கோடு கயிற்றரவு, மகாமசானம், ஞானக் குகை போன்ற கதைகளையும், வேடிக்கை வினோதக் கதையாகக் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற கதையையும், நாட்டுப்புறக் கதைப் பாங்கோடு சங்குத்தேவனின் தர்மம், வேதாளம் சொன்ன கதை போன்ற கதைகளையும்
எழுதியுள்ளார். தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் புதுமைப்பித்தனின் ஆளுமையும் மேதைமையும் பின் வந்த படைப்பாளிகளுக்கு முன் மாதிரியாக அமைந்தன எனலாம். புதுமைப்பித்தன் சாகாவரம் பெற்ற சிறுகதைகளைப் படைத்து, தமிழ் இலக்கியக் கருவூலத்திற்கு வளம் சேர்த்துள்ளார்.

    ந.பிச்சமூர்த்தியின் கதைகளிலும் சிறுகதையின் வடிவமும் உத்தியும் சிறப்பாக அமைந்துள்ளன. மனித மன ஆழத்தை அவர் தம் கதைகளில் சிறப்பாக வடித்துள்ளார். பதினெட்டாம் பெருக்கு, தாய், வானம்பாடி, மண்ணாசை, விழிப்பு, பஞ்சகல்யாணி போன்ற பல இலக்கியத் தரமான கதைகளைப் படைத்துள்ளார் அவர். கு.ப.ராஜகோபாலன் இக்காலக் கட்டத்தைச் சேர்ந்த மற்றொரு சிறந்த எழுத்தாளர் ஆவார். இவர் ஆண் பெண் உறவை மையமாகக் கொண்டு பல கதைகளை எழுதியுள்ளார். அக்காலத்தில் பிறர்
தொடத் தயங்கிய பிரச்சினைகளை அவர் ஆபாசமாகவோ
உணர்ச்சியைத்     தூண்டிவிடும்     வகையிலோ     இல்லாமல்,
ஆக்கப் பூர்வமாக அணுகிப் பார்த்துள்ளார். திரை, சிறிது வெளிச்சம்,
மூன்று உள்ளங்கள், ஆற்றாமை, விடியுமா, நூருன்னிசா, தாயாரின் திருப்தி
போன்ற     இவருடைய கதைகளும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கனவாகும்.

    மௌனி, இக்காலக் கட்டத்தைச் சேர்ந்த மற்றொரு சிறந்த படைப்பாளி    ஆவார். மௌனியின்     சிறுகதை     முயற்சி
வித்தியாசமானது. குறியீடு
என்னும் உத்தியை அவர்தம் கதைகளில் அதிகம் எடுத்தாண்டுள்ளார். அதனால், மௌனியின் கதைகளைச் சாதாரண வாசகர்களால் அத்துணை எளிதாகப்புரிந்து கொள்ள இயலாது. இவருடைய தமிழ்நடையும் அசாதாரணமானது. ஏன்? இவருடைய முதல் கதையாகும்.இவருடைய சிறுகதைகள் அனைத்தும் அழியாச் சுடர், மௌனியின் கதைகள் என்ற பெயர்களில் இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
    இந்தக் காலக் கட்டத்தில் எழுதிய மற்றொரு எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம். இவர் கதை     சொல்லும் நடையும் வித்தியாசமானதாகும். இவர், மந்திர உச்சாடனம் போலச் சொற்களை ஒலிப்பாங்குடன் பயன்படுத்தும் விதத்தில் தமக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ளார். சிறுகதை வடிவத்தையும் தாண்டி, விசுவரூபம் எடுப்பன இவருடைய     கதைகள். தரங்கிணி,
காயத்திரி, இதழ்கள், புலி ஆடு, ஜ்வாலை
என்பன இவருடைய
சிறுகதைகளில் சிலவாகும்.

    இக்காலக் கட்டத்தில் எழுதிய குறிப்பிடத் தகுந்த பிற சிறுகதை எழுத்தாளர்கள் பி.எஸ். ராமையா, கி.ரா. என்ற கி.ராமச்சந்திரன், சிதம்பர சுப்பிரமணியன், டி.எஸ். சொக்கலிங்கம், சங்கு சுப்பிரமணியன் போன்றவர்கள் ஆவர்.
2.2.3 மூன்றாம் காலக் கட்டம் (1946 - 1970)
    தமிழ்ச் சிறுகதை வரலாற்றில், மூன்றாவது பகுதியான
இக்காலக் கட்டத்தில், மிகப் பலர் சிறுகதை எழுதுவதை மேற்கொண்டார்கள். கரிச்சான் குஞ்சு, தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராம்,     ரா. பாலகிருஷ்ணன், விந்தன், கு.அழகிரிசாமி, மு.சிதம்பர ரகுநாதன், அகிலன், நா.பா என்ற நா.பார்த்தசாரதி  போன்றவர்களும்,    திராவிட   
இயக்க எழுத்தாளர்களான அண்ணா, மு.கருணாநிதி ஆகியவர்களும்
மு.வ. என்னும் மு.வரதராசனார், ஜெயகாந்தன் ஆகியவர்களும்
சிறுகதைகள் படைத்துள்ளனர். இவர்களில் சிலர் சிறுகதை
இலக்கியத்திலும், சிலர் நாவல் இலக்கியத்திலும்,    சிலர்
இவ்விரண்டு இலக்கிய வகைகளிலும் தடம் பதித்துள்ளனர்.

    தி.ஜானகிராமன், தமிழ் எழுத்துலகில் நாவல், சிறுகதை என்ற இரண்டு இலக்கிய வகைகளிலும் முன்வரிசையில் நிற்பவர்.
கு.ப.ரா. வைப் போன்று ஆண், பெண் உறவைக் கதைப்
பொருளாக்கிக் கொண்டவர் ஆவார். கதைமாந்தர் படைப்பிலும்,
மொழி ஆளுகையிலும் வெற்றி பெற்ற இவர் மறதிக்கு, செய்தி,
முள்முடி, சிலிர்ப்பு
போன்ற பல கதைகளை எழுதியுள்ளார்.

    இக்காலக் கட்டத்தில் சிறுகதை, நாவல் என்ற இரண்டு
படைப்பிலும் சிறந்து விளங்கிய எழுத்தாளர்களுள் அகிலனும்
நா.பா.வும் ஜெயகாந்தனும் குறிப்பிடத் தக்கவர்கள். அகிலன்
பதினேழு சிறுகதைத் தொகுதிகளை எழுதி வெளியிட்டுள்ளார்.
இவரின் முதல் சிறுகதை காசு மரம் என்பதாகும். வறுமை, ஆண்
பெண் உறவுகள், விதவை நிலை,     வரதட்சணைக் கொடுமை
என்று பல பொருண்மைகளில் இவர் கதைகள் படைத்துள்ளார்.
நட்பு, வீரம், காதல் போன்ற இலக்கியப் பொருண்மைகளும்
இவருடைய கதைகளில் காணக்கிடைக்கின்றன. இவருடைய
எரிமலை என்ற இக்கதை சிறுகதைத் தொகுதி தமிழ்நாடு அரசின்
பரிசு பெற்றது. பின்பு அக்கதை, எங்கே போகிறோம் என்ற
நாவலாக அவரால் விரித்து எழுதப்பட்டது. சகோதரர் அன்றோ,
கங்காஸ்நானம், சிசுவின் குரல், ஏழைப் பிள்ளையார், பெரிய
மீன்,
ஆண்-பெண், குழந்தை சிரித்தது, சத்திய ஆவேசம்,
நெல்லூர் அரிசி, பசியும் ருசியும், விடுதலை
என்பன இவர்
எழுதிய சிறுகதைகளுள் சிலவாகும்.

    அகிலனைப் போன்று மரபிலக்கியப் பாங்கில் கதை
இலக்கியத்தை     எடுத்துச்     சென்றவர்     நா.பா.
தெய்வத்தாலாகாதெனினும், ஆயுதம், தகுதியும் தனிமனிதனும்,
பிரதி பிம்பம், ஒரு கவியின் உள்உலகங்கள், மறுபடியும் ஒரு
மஹிஷாசுர வதம், அமெரிக்காவிலிருந்து பேரன் வருகிறான்,
களவும் கற்று, ஒரு சர்வதேசக் கருத்தரங்கு
போன்ற பல
சிறுகதைகளை எழுதியுள்ளார்.

    திராவிட இயக்கச் செல்வாக்குடன் பகுத்தறிவுப் பாதையில்
கதை படைத்தவர்களுள் அண்ணா, மு.கருணாநிதி, ஆசைத்தம்பி,
தென்னரசு, டி,கே,சீனிவாசன், தில்லை வில்லாளன் போன்றவர்கள்
குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களில் உள்ளடக்கம், உத்தி, நடை ஆகியவற்றை முழுமையாகக் கையாண்டு கதை படைத்தவர்களுள் அண்ணா முதன்மையானவர். சாதி சமய மறுப்பு, வறுமை,
கலப்பு மணம், பலதார மணம், விதவை மணம் என்பனவற்றை
அடிப்படையாகக் கொண்டன இவருடைய கதைகள். தஞ்சை
வீழ்ச்சி, சொர்க்கத்தில் நரகம், திருமலை கண்ட திவ்விய
ஜோதி, புலி நகம், பிடி சாம்பல்
போன்ற பல கதைகளில் மத
நம்பிக்கையைக் கண்டித்துள்ளார். செவ்வாழை இவருடைய மிகச்
சிறந்த கதையாகும். ஏழ்மையின் கொடுமையை இக்கதையில் மிகச்
சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார். வடிவ உத்தியுடன் பகுத்தறிவுப்
பாதையில் கதை எழுதியவர் மு.கருணாநிதி. குப்பைத்தொட்டி,
கண்டதும் காதல் ஒழிக, நளாயினி, பிரேத விசாரணை,
தொத்துக் கிளி, வாழ முடியாதவர்கள்
போன்ற இவருடைய
சிறுதைகள் குறிப்பிடத் தக்கன.

    இக்காலக் கட்டத்தில் எழுதிய ஜெயகாந்தன் சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். முற்போக்கு எழுத்தாளராக அறியப்பட்ட அவர் தொடக்கத்தில் சோதனை ரீதியாகவும் பின்னர் ஜனரஞ்சகமாகவும் கதைகளைப் படைத்துள்ளார். இவருடைய பல சிறுகதைகள் விமர்சனத்திற்கும் விவாதத்திற்கும் உள்ளாயின.     சிறுகதையின் உள்ளடக்கத்திற்கு மட்டுமல்ல,
வடிவத்திற்கு உரமளித்தவர் இவர். இவருடைய எழுத்துகள் பலரை எழுதத் தூண்டின. இவருடைய பாணியில் இன்று பலர் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

2.2.4 நான்காம் காலக் கட்டம் (1976 முதல் இன்று வரை)
    எழுபதுகளில் சா.கந்தசாமி, இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, அசோகமித்திரன்,     நீல பத்மநாபன், வண்ணநிலவன், வண்ணதாசன், சுஜாதா, நவபாரதி, சுப்பிரமணிய     ராஜு , பாலகுமாரன் போன்றவர்களும் பா.செயப்பிரகாசம், பிரபஞ்சன், கிருஷ்ணன்  நம்பி,
ஜெயமோகன், ஜி.நாகராஜன்
    போன்றவர்களும் சிறுகதைப்
படைப்புகளில்     குறிப்பிட்டுச் சொல்லும்படியாகத்     தடம்
பதித்துள்ளனர்.
இந்தக் காலக் கட்டத்தில், நவீனத் தமிழ்ச் சிறுகதை
இலக்கியம், கருத்திலும் சொல்லும் நேர்த்தியிலும் மொழியைக்
கையாளும் முறையிலும் பல மாறுதல்களைக் கண்டுள்ளது.
இச்சிறுகதைகள் தமிழ் மக்களின் வாழ்க்கையைப் பல்வேறு
கோணங்களில் பிரதிபலித்துக் காட்டுகின்றன. சிறுகதைப் படைப்பே
விமர்சன ரீதியாக எழுதப்பட்டது. அதனால் தேவையற்ற சொல் அலங்காரம், தேவையில்லாத வர்ணனைகள் என்பùவெல்லாம்
தவிர்க்கப்பட்டு, படைப்பு அதன் முழு வீச்சோடு வெளிப்பட்டுள்ளது
எனலாம். இருபத்தோராம் நூற்றாண்டு - தொடர்பு யுகம், கணினி
யுகம் என்றெல்லாம் சுட்டப்படுகிறது. இந்நூற்றாண்டில், இணைய
இதழ்கள் என்ற புதுவகை இதழ்கள் தோற்றம் பெற்றன. அவற்றில்
உலகத் தமிழ் எழுத்தாளர்களின்     படைப்புகள் ஒருங்கே
இடம் பெறுவதற்கான     சாத்தியக் கூறுகள் உருவாகிக்
கொண்டிருக்கின்றன. தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த காஞ்சனா
தாமோதரன், கீதா பென்னட்,
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன் போன்றவர்கள் தொடர்ந்து
இவ்விதழ்களில் எழுதி வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து
உலகத் தமிழ் எழுத்தாளர்கள் பலர் சங்கமிக்க     இணைய
இதழ்கள் வழி அமைத்தால் அது தமிழ்ச் சிறுகதை
வளர்ச்சியை மற்றோர் உயரத்திற்கு உறுதியாக இட்டுச் செல்லும்
என்பதில் ஐயமில்லை.

சிறுகதையின் தோற்றம்

 
    காலம் காலமாகக் கதை சொல்வதும், கதை கேட்பதும்
எல்லாத் தேசங்களிலும், எல்லா மக்களிடையேயும் வாய்மொழி
மரபாக இருந்து வந்திருக்கிறது. நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே,
மக்கள் இனக் குழுக்களாக இயங்கி வந்த போது, ஓய்வு
நேரங்களில் சக மனிதர்களிடம் தொடர்பு கொள்வதற்கும், குடும்ப
உறவினர்களுடன் பொழுதைக் கழிக்கவும் கதை கூறும் மரபைக்
கையாண்டு வந்துள்ளனர். கதை கூறுபவர் தன்னுடைய கற்பனை
வளத்தாலும், அனுபவத்தின் பயனாலும், தான் கண்டதையும்
கேட்டதையும் விரித்துச் சொல்லி, கேட்போரின் பொழுது
போக்கிற்குத் துணை நின்றனர். ‘ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு
ராஜாவாம்’ என்று சுவாரஸ்ய உணர்வோடு கதை தொடங்கும்
மரபும் நம்மிடையே இருந்துள்ளது. பொய்ம்மொழி், பொய்க்கதை,
புனைகதை, கட்டுக்கதை, பழங்கதை என்றெல்லாம் கதைகள்
அக்காலத்தில்     சுட்டப்பட்டுள்ளன. குடும்பங்களில்     சிறு
குழந்தைகளுக்குப் ‘பாட்டி கதை’ சொல்லும் மரபு உண்டு.
அம்மரபு போன தலைமுறை வரை தமிழ் மண்ணில் இருந்து வந்துள்ளது.

    பின்பு ‘எழுத்து மரபு’ ஏற்பட்ட போது, கதைகள் பெரிய
எழுத்துக் கதைகளாக எழுதப்பட்டன. பின்னர், அச்சு இயந்திர
வருகைக்குப் பின்னர், அக்கதைகள் நூல்களாகவும் வெளிவந்தன.
இன்றும், அவை பெரிய எழுத்துக் கதைகள் என்ற பெயரில்
விற்பனையில் உள்ளன. அல்லி அரசாணி மாலை, புலந்திரன்
கதை, வீர அபிமன்யு, மயில் இராவணன் கதை, சதகண்ட
இராவணன் கதை, நல்லதங்காள் கதை, அரிச்சந்திரன் கதை
என்று இக்கதைகள் பல.

    மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய
நாடுகளிலும், கீழை நாடான ரஷ்யாவிலும் சிறுகதை என்ற
பெயரில் ஒரு நிகழ்ச்சி, ஓர் உணர்ச்சி, ஓரிரு பாத்திரங்களை
அடிப்படையாகக் கொண்டு, அரைமணி நேரத்தில், ஒரே அமர்வில்
படித்து முடித்துவிடக் கூடிய கதைகள் தோற்றம் பெற்று
அச்சேறின. ஆங்கிலக் கல்வியின் காரணமாக, நம்மவர்களும் அதே
போன்ற கதை மரபை நம்மிடையே உருவாக்கத் தொடங்கினர்.
இப்படித் தொடங்கியதுதான் தமிழ்ச் சிறுகதை வரலாறு.

2.1.1 உலக மொழிகளில் சிறுகதையின் தோற்றம்
    உலக நாடுகளில், மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் தான்
சிறுகதை மிக விருப்பமான இலக்கிய வடிவமாகப் போற்றப்படுகிறது.
நாவலை விடச் சிறுகதைக்கே அங்குச் செல்வாக்கு அதிகம்.
பிராங்க் ஓ கானர் (Frank O ‘Connor) என்ற சிறுகதை
விமர்சகர், "அமெரிக்கர்கள் சிறுகதை எழுதுவதில் காண்பிக்கும்
திறமையைப் பார்த்தால், அதை அவர்கள் தேசியக் கலையாகக்
கருதுகிறார்கள் என்று சொல்லலாம்" என்று குறிப்பிடுகிறார்.
"அமெரிக்க மக்களிடையே இருக்கும் வேகமும் பொறுமையின்மையும்
காரணமாகத்தான் சிறுகதை வடிவம் அமெரிக்க இலக்கிய
உணர்வுக்கு ஏற்புடையதாயிற்று" என்று வில்லியம் டீன் ஹவெல்ஸ்
(William Dean Howells) என்ற மற்றொரு விமர்சகர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் மிகச் சிறந்த சிறுகதைப் படைப்பாளர்களாக
விளங்கும் எட்கர் ஆலன்போ, நத்தானியல் ஹாதான்,
வாஷிங்டன் இர்விங், ஓஹென்றி
ஆகியோர் உலக நாடுகள்
அனைத்திலும் செல்வாக்குப் பெற்றவர்களாகத் திகழ்கின்றனர்.

    பிரான்ஸ் நாட்டில் தோன்றிய சிறுகதைகள் உலக
அளவிலேயே மிகப் புகழ்பெற்றவை ஆகும். மெரிமீ் (Merimee),
பால்ஸாக் (Balzac), மாப்பசான் (Maupassant) ஆகிய சிறுகதை
ஆசிரியர்கள்,     ஆங்கில     மொழிபெயர்ப்பின்     மூலமாக
உலகத்தினரால் அறியப்பட்டனர். இவர்களில், மாப்பசான் தான்
இந்திய மொழிச் சிறுகதைப் படைப்பாளிகளுக்கு வழிகாட்டியாக
இருந்திருக்கின்றார்.

    ரஷ்யாவில் செகாவ் (Chekkov), துர்கனேவ், கொகொல்
(Gogol) ஆகியோர் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர்கள்.
இவர்களில் கொகொல் எழுதிய மேலங்கி (Overcoat), புகழ்பெற்ற
கதையாகும். இக்கதையை முன்மாதிரியாகக் கொண்டுதான்
ரஷ்யாவில் பலர் சிறுகதை படைத்துள்ளனர். அதைக் கருத்தில்
கொண்டு, "கொகொலின் மேலங்கியுள் இருந்துதான் நாங்கள்
எல்லாரும் பிறந்து வந்தோம்" (We all come out from under
Gogol’s Overcoat) என்று கூறி, நன்றி பாராட்டுகிறார் துர்கனேவ்.
கொகொல்,     ரஷ்யாவில் ‘சிறுகதையின் தந்தை’ என்று
போற்றப்படுகிறார்.

    இங்கிலாந்தில் ரட்யாட் கிப்ளிங் (Rudyard Kipling),
ஆர்.எல்.ஸ்டீவன்சன் (R.L.Stevenson), கதரீன் மான்ஸ்ஃபீல்ட்
(Katherene Mansfield), தாமஸ் ஹார்டி (Thomas Hardy),
ஜோசப் கான்ராட் ( Joseph Conrad), ஹென்றி ஜேம்ஸ்
(Henry James), ஜேம்ஸ் ஜாய்ஸ் (James Joyce) போன்றவர்கள்
சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
இங்கிலாந்தில் ஸ்ட்ரான்ட் (Strand), ஆர்கஸி (Argosy),
பியர்சன்ஸ் மேகஸீன் (Pearsons Magazine) என்ற இதழ்கள்
சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.

2.1.2 தமிழில் சிறுகதையின் தோற்றம்
    தமிழ் மொழியில் அச்சு இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்ட
பின்பு வீரமாமுனிவர் (1680-1749) எழுதிய பரமார்த்த குரு
கதை
என்ற கதை நூல், அவர் காலத்திற்குப் பிறகு, 1822இல்
சென்னை கல்விச் சங்கத்தாரால் அச்சிடப்பட்டது. இந்நூல்தான்,
சில ஆய்வாளர்களால் தமிழின் முதல் சிறுகதை நூலாகச்
சுட்டப்படுகிறது. பின்பு கதாமஞ்சரி (1826), ஈசாப்பின்
நீதிக்கதைகள் (1853), மதனகாமராஜன் கதை (1885), மயில்
இராவணன் கதை (1868), முப்பத்திரண்டு பதுமை கதை (1869),
தமிழறியும் பெருமாள் கதை (1869), விவேக சாகரம் (1875),
கதா சிந்தாமணி (1876)
என்ற கதை நூல்கள் வெளியாயின.
பண்டிதர் ச.ம.நடேச சாஸ்திரி, தமிழ் நாட்டில் வழங்கி வந்த
செவிவழிக் கதைகளைத் தொகுத்து, தக்காணத்துப் பூர்வ
கதைகள்
(1880), திராவிடப் பூர்வ காலக் கதைகள் (1886),
திராவிட மத்திய காலக் கதைகள்(1886) என்ற தலைப்புகளில்
வெளியிட்டார். தெலுங்கிலும் கன்னடத்திலும் வழங்கி வந்த
தெனாலிராமன் கதை, மரியாதை ராமன் கதை போன்ற
கதைகளும் தமிழில் அச்சாயின. அஷ்டாவதானம் வீராசாமி
செட்டியார் தொகுத்த விநோத ரச மஞ்சரி என்ற கதை நூல்
1876இல் வெளிவந்தது. இதில் கம்பர், ஒட்டக்கூத்தர், காளமேகம்,
ஏகம்பவாணன், ஒளவையார் போன்றோர் வரலாறு கதையாகச்
சொல்லப்பட்டுள்ளது. திருமணம் செல்வக்கேசவராய முதலியார்
அபிநவக் கதைகள் என்ற கதைத் தொகுதியை எழுதி
வெளியிட்டுள்ளார். இதில் கற்பலங்காரம், தனபாலன், கோமளம்,
சுப்பைய்யர், கிருஷ்ணன், ஆஷாடபூதி என்ற ஆறு கதைகள்
இடம் பெற்றிருந்தன. இவ்வாறு, தமிழில் சிறுகதை முயற்சிகள் அச்சு
வடிவில் சுமார் ஒரு நூற்றாண்டுக் காலம் மேற்கொள்ளப்பட்டன
என்பதை அறிய முடிகின்றது.